விஜயின் தவெகவிற்கு ‘செக்'.. சென்னையின் 16 தொகுதிகளில் வெல்ல சபரீசன் வியூகம்.. ரெடியான 5 லட்சம் பேர்
சென்னை: சென்னையில் மொத்தம் 16 சட்டசபை தொகுதிகள் உள்ளன. கடந்த 2021 சட்டசபை தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் திமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். ஆனால் தற்போது விஜயின் தமிழக வெற்றிக் கழகம் களமிறங்கி உள்ளது. சென்னையில் விஜய், புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, வெங்கடரமணன், ராஜ் மோகன், ஜேசிடி பிரபாகர் உள்பட பல்வேறு முக்கிய தலைவர்கள் களமிறங்கி உள்ளனர். இது திமுகவுக்கு சிக்கலை ஏற்படுத்தலாம் என்ற கூறப்படுகிறது. இந்நிலையில் தான் முதல்வர் ஸ்டாலின் மருமகன் சபரீசன் நேரடியாக களமிறங்கி வியூகங்களை வகுத்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
சென்னை எப்போதுமே திமுகவின் கோட்டையாக உள்ளது. கடந்த 2021 சட்டசபை தேர்தலில் சென்னையில் உள்ள 16 தொகுதிகளிலும் திமுக வென்று அசத்தியது. அதிமுகவால் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியவில்லை. இந்நிலையில் தான் ஏப்ரல் 23ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த தேர்தலில் சென்னையில் மீண்டும் செல்வாக்கை நிரூபிக்க வேண்டும் என்பதில் திமுக உறுதியாக உள்ளது. வழக்கமாக அதிமுக, திமுக, நாம் தமிழர் இடையே போட்டி என்றால் பிரச்சனையில்லை. ஆனால் இந்த முறை விஜயின் தமிழக வெற்றிக் கழகம் தேர்தலில் நுழைந்துள்ளது.
தவெகவின் முக்கிய தலைவர்கள்
அதுமட்டுமின்றி தமிழக சட்டசபை தேர்தலில் தவெகவின் மிக முக்கிய நிர்வாகிகள் சென்னையில் உள்ள தொகுதிகளில் போட்டியிட்டுள்ளனர். அதன்படி பெரம்பூர் தொகுதியில் தவெக தலைவர் விஜய் களமிறங்கி உள்ளார். கட்சியின் பொதுச்செயலாளர் 'புஸ்சி' ஆனந்த் திநகரிலும், தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர் ஆதவ் அர்ஜுனா வில்லிவாக்கத்திலும், மயிலாப்பூரில் கட்சியின் பொருளாளர் வெங்கடரமணன் களமிறங்கி உள்ளார்.
அதேபோல், ஆயிரம் விளக்கில் முன்னாள் எம்எல்ஏ ஜேசிடி பிரபாகர், கொளத்தூரில் முன்னாள் எம்எல்ஏ விஎஸ் பாபு, .சைதாப்பேட்டையில் கட்சியின் துணை பொதுச்செயலாளர் அருள் பிரகாசம், எழும்பூரில் கட்சியின் துணை பொதுச்செயலாளர் ராஜ்மோகன் என முக்கிய தலைவர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர்.
திமுகவுக்கு சிக்கல் ஏன்?
இதுதான் திமுகவுக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. இவர்கள் வெற்றி பெறுகிறார்களோ இல்லையோ? கணிசமான அளவுக்கு வாக்குகளை பெறலாம். இப்படி பிரிக்கப்படும் வாக்குகளால் அதிமுக வேட்பாளர்கள் வென்றுவிட வாய்ப்புள்ளது. இதனால் தான் திமுக அதிக கவனமாக செயல்பட்டு வருகிறது. எப்படியாவது மீண்டும் சென்னையின் 16 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்பதில் திமுக உறுதியாக உள்ளது.
களமிறங்கிய சபரீசன்
இதற்காக அவர்கள் களமிறக்கி இருக்கும் நபர் தான் சபரீசன். முதல்வர் ஸ்டாலினின் மருமகனான இவர் தற்போது சென்னையின் 16 தொகுதிகளையும் தீவிரமாக கண்காணித்து வருகிறார். ஒவ்வொரு தொகுதிக்கும் தனித்தனியாக வியூகங்களை வகுத்து கொடுத்து வருகிறாராம்.
வில்லிவாக்கம், எழும்பூர், துறைமுகம், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி, ஆயிரம் விளக்கு, அண்ணா நகர் உள்பட அனைத்து தொகுதிகளுக்கும் நேரில் சென்று நிர்வாகிகளை சந்தித்து ஆய்வு கூட்டம் நடத்தி வருகிறார்.
ஒவ்வொரு நாளும் பிரசாரத்தில் ஏற்பட்டு இருக்கும் முன்னேற்றம் பற்றி ஆய்வு செய்து அதற்கேற்ப வியூகங்களை மாற்றி அமைத்து வருகிறாராம். மேலும் சில தொகுதிகளில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காமல் அதிருப்தியில் உள்ள நிர்வாகிகளையும் சரிகட்டி அவர்களை சமாதானப்படுத்த தொகுதி பார்வையாளர்களாக சபரீசன் நியமித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
மாநிலம் முழுவதும் 5 லட்சம் பேர்
அதோடு சென்னை மட்டுமின்றி மாநிலம் முழுவதும் சபரீசன் திமுகவின் வெற்றிக்கான வியூகத்தை வகுத்துள்ளாராம். இதற்காக மொத்தம் உள்ள 75,032 வாக்குச்சாவடிகளிலும் சுமார் 5 லட்சம் இளைஞரணி தொண்டர்களை களமிறக்கி உள்ளாராம் சபரீசன். இந்த தொண்டர்கள் தங்களது தொகுதிகளில் வாக்குச்சாவடி அளவில் பணி செய்து வருகின்றனர். கடும் போட்டி நிலவும் வாக்குச்சாவடிகளில் தினமும் வீடு வீடாக சென்று மக்களிடம் வாக்கு சேகரிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதுபற்றி திமுக நிர்வாகி ஒருவர் கூறுகையில், ''இளைஞரணித் தொண்டர்களுக்கு வாக்குச்சாவடி பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் தொடர்ச்சியாக பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அடுத்த பத்து நாட்களுக்கு தீவிரமாக பணியாற்றும்படி கட்சி தலைமை உத்தரவிட்டுள்ளது'' என்றார்.












Click it and Unblock the Notifications