தேசியளவில் ஸ்டாலினுக்கு எகிறும் மவுசு.. "இந்தியா" கூட்டணிக்கு தலைமை தாங்க வரிசையாக வரும் அழைப்பு
சென்னை: தமிழ்நாட்டில் ஆளும்கட்சியாக இருக்கும் திமுக வலுவான ஒரு கூட்டணியைத் தேர்தலுக்காக உருவாக்கியுள்ளது. இதற்கிடையே ஸ்டாலின் மாநில அரசியல் மட்டுமின்றி தேசிய அரசியலுக்கும் வர வேண்டும் என்ற வாய்ஸ் எழுந்துள்ளது. அவர் இந்தியா கூட்டணியை ஒருங்கிணைக்க வேண்டும் என்று ஒரே வாரத்தில் இரு வேறு குரல்கள் வந்துள்ளன.
மத்திய பாஜக அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து இந்தியா கூட்டணியை உருவாக்கியுள்ளது. இருப்பினும், கடந்த சில ஆண்டுகளாகவே "இந்தியா" கூட்டணியில் தொடர்ச்சியாகச் சிக்கல்கள் நிலவி வருகிறது. இதற்கிடையே ஸ்டாலின் இந்தக் கூட்டணியைத் தலைமை தாங்க வேண்டும் என்ற வாய்ஸும் எழுந்துள்ளது.

மணிசங்கர் அய்யர்
இப்போது முதலில் ஸ்டாலினுக்கு தலைமை தாங்க வேண்டும் என்றவர் மணிசங்கர் அய்யர். பிரதமர் மன்மோகன் சிங் அமைச்சரவையில் பஞ்சாயத்து ராஜ், பெட்ரோலியத்துறை, இளைஞர் மேம்பாடு எனப் பல்வேறு துறைகளுக்கும் அமைச்சராக இருந்தவர் மணிசங்கர் அய்யர். 84 வயதான இவர் சமீபத்தில் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் "இந்தியா" கூட்டணிக்கு ஸ்டாலின் தலைமை தாங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்திருந்தார்.
கொள்கை சார்ந்த விஷயங்களிலேயே ஸ்டாலின் கவனம் செலுத்துவார் என்றும், கோஷ அரசியலைத் தவிர்ப்பார் என்றும் மணிசங்கர் அய்யர் தெரிவித்தார். மேலும், பிரதமராகும் வாய்ப்பு வந்தாலும், ராகுலுக்காக ஒதுங்கி நிற்கும் மனப்பான்மை படைத்தவர் ஸ்டாலின் என்றும் அவர் கூறியிருந்தார். இதன் மூலம் ராகுல் காந்தி பிரதமராக முடியும் என அவர் குறிப்பிட்டு இருந்தார்.
ராகுலுக்காக வழிவிடுவார்
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "கடந்த ஓராண்டாக ஸ்டாலின் செயல்பாடுகளைப் பாருங்கள். இந்தியக் கூட்டாட்சித் தத்துவத்துக்கு அவசியமான அனைத்து விஷயங்களுக்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். மேலும், வரும் காலத்தில் பிரதமராகும் வாய்ப்பு கிடைத்தாலும் ராகுல் காந்திக்கா வழிவிடுவார். ஸ்டாலின் அந்த இடத்தில் தடையாக இருக்க மாட்டார். அதுவே அவரது சிறந்த குணம்" என்றார்.
மேலும், மணிசங்கர் அய்யர் அந்தப் பேட்டியில் முன்னாள் முதல்வரும் தமிழகத்தின் முக்கிய அரசியல் தலைவருமான காமராஜர் உடன் ஸ்டாலினை ஒப்பிட்டார். நேரு மறைவுக்குப் பிறகு பிரதமராகும் வாய்ப்பு வந்தபோதும் கட்சி ஒற்றுமைக்காக இந்திராவுக்கு வழிவிட்டவர் காமராஜர் எனக் குறிப்பிட்ட மணிசங்கர் அய்யர், அதுபோல ஸ்டாலினும் கிங் மேக்கராக திகழ்வார் என்றார். அனைத்தையும் விட முக்கியமாக, "இந்தியா கூட்டணியை ஒருங்கிணைக்க ஒருவர் முழு நேரத்தையும் செலவிட வேண்டும். அது முக்கியம்! அதைச் செய்தால் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்" என்று அவர் கூறியிருந்தார்.

சிவசேனா
மணிசங்கர் அய்யர் பேட்டி தேசியளவில் கவனம் பெற்றது. இந்தியா கூட்டணியை எப்போதும் ஒருங்கிணைந்து வைத்திருக்க ஒரு தலைவர் தேவை என்பதே அவரது கருத்தாக இருந்தது. அவர் இதுபோல சொல்லி 2 நாட்கள் கூட ஆகாத நிலையில், மகாராஷ்டிராவின் தாக்கரே சிவசேனா கட்சியில் இருந்தும் இதே வாய்ஸ் எழுந்தது. அக்கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவில் இது குறித்து வலியுறுத்தியுள்ளனர்.
இந்தியா கூட்டணிக்குள்ளேயே மோதல்கள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. மேற்கு வங்கம், கேரளா, மகாராஷ்டிரா எனப் பல்வேறு மாநிலங்களிலும் கூட்டணிக் கட்சிகளுக்கு உள்ளே மோதல் இருப்பதாகவும் இந்தக் குழப்பமும் போட்டி மனப்பான்மையும் பாஜகவுக்குச் சாதகமாக மாறியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. லோக்சபா தேர்தல் அறிவிப்புக்குப் பிறகு கூட்டணி உருவானாலும் கூட அது பெரியளவில் பலன் கொடுப்பதில்லை என்றும் "இந்தியா" கூட்டணி ஒருங்கிணைந்து பயணிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
ஒரு தலைவர் தேவை
ராகுல் காந்தியின் போராட்டக் குணத்தைப் பாராட்டினாலும், தேசிய நெருக்கடியைச் சமாளிக்க, 'இந்தியா' கூட்டணி ஒருங்கிணைத்து ஒரு திசையில் அழைத்துச் செல்ல ஒரு தலைவர் தேவை என்று அதில் தெரிவிக்கப்பட்டது.. ஸ்டாலின் அல்லது மம்தா தலைமை தாங்குவது சரியாக இருக்கும் எனக் கூறப்பட்டு இருந்தது.
இந்தியாவில் மற்ற மாநிலங்களில் இந்தியா கூட்டணிக்குள் பிளவுகள் ஏற்பட்டாலும் தமிழ்நாட்டில் பல ஆண்டுகளாகவே "இந்தியா" கூட்டணியை ஸ்டாலின் வெற்றிகரமாக வழிநடத்தி வருகிறார். இதன் காரணமாகவே 2019 லோக்சபா தேர்தல், 2021 சட்டசபை தேர்தல், ஊரக உள்ளாட்சித் தேர்தல், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல், 2024 லோக்சபா தேர்தல்களில் திமுக கூட்டணியால் வெல்ல முடிந்தது. இதேபோல தேசியளவிலும் ஒருங்கிணைக்க ஒரு தலைவர் தேவை என்பதே பலரின் குரலாக இருக்கிறது. அதற்கு ஸ்டாலின் சரியாக இருப்பார் என்பதையே வலியுறுத்தும் வகையிலேயே இந்தக் குரல்கள் அமைந்துள்ளன.












Click it and Unblock the Notifications