கடைசியாக வந்து விட்டு முதல் ஆளாக புறப்பட்ட முதல்வர் ஸ்டாலின்! ''கலைஞர் 100'' கலை விழா சுவாரஸ்யம்!
சென்னை: தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் சென்னையில் நேற்று நடத்தப்பட்ட ''கலைஞர் 100'' கலை விழாவுக்கு கடைசியாக வந்து கலந்து கொண்ட முதலமைச்சர் ஸ்டாலின், அங்கிருந்து முதல் ஆளாக புறப்பட்டுச் சென்று விட்டார்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான் தனது தந்தையின் பிரதிநிதியாக அந்நிகழ்ச்சியில் கடைசி வரை இருந்துவிட்டு கிளம்பிச் சென்றார். முதலமைச்சர் ஸ்டாலின் கடைசியாக வந்து விட்டு முதல் ஆளாக, அதுவும் வேக வேகமாக புறப்பட்டுச் சென்றதற்கு காரணம் அவருக்கு இருந்த ''உலக முதலீட்டாளர்கள் மாநாடு'' தொடர்பான பெரும் பணிகளே ஆகும்.

உலக முதலீட்டாளர் மாநாடு இன்று தொடங்கியுள்ள நிலையில் நேற்று மாலை அது தொடர்பான முன்னேற்பாடுகள் பற்றி அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். இதனிடையே தான் தாமதமாக வந்தது குறித்தும் விரைவாக புறப்பட்டுச் செல்வது பற்றியும் முதல்வரே தனது உரையில் கூறியிருப்பதாவது;
''வாழ்ந்த காலத்தை போலவே, நிறைந்த பிறகும் நித்தமும் நினைக்கக் கூடியவராக கலைஞர் விளங்கிக் கொண்டிருக்கிறார். "வசனம் மு. கருணாநிதி" என்று இருந்தாலே படம் வெற்றியடையும். சினிமாவில் சான்ஸ் வாங்க கலைஞரின் வசனத்தை பேசி ஒப்புவிப்பது வழக்கம் ஆனது. அவரின் வசனப் புத்தகங்கள் அதிகமாக அச்சடிக்கப்பட்டு விற்பனை ஆனது. 1947ல் முதல் படம் ராஜகுமாரி, 2011ல் கடைசிப்படம் பொன்ன - சங்கர். ''
''65 ஆண்டுகளாக கலைத்துறையில் பயணம் செய்து "கலையினம் என்பது என் இனம்" என்று உங்களில் ஒருவராக இருந்த உங்களின் கலைஞருக்குத்தான் விழா எடுத்திருக்கிறீர்கள். எங்கள் குடும்பமே, கலைத் துறையைச் சார்ந்த குடும்பம் என்பது உங்களுக்கு எல்லாம் நன்றாக தெரியும். அந்த வகையில், நானும் உங்கள் கலைத்துறையைச் சார்ந்தவன்தான். உதயநிதியும் சில மாதங்களுக்கு முன்பு வரை திரையுலகத்தில் கால்பதித்து நின்றவர் தான். ''
''எனவே, இந்த அமைச்சரவையும், கலைத் துறையினருக்கு நெருக்கமான அமைச்சரவைதான். உங்கள் கோரிக்கைகளை எப்போதும் செயல்படுத்தித் தரத் தயாராக இருக்கிறோம். அந்த அடிப்படையில் சில அறிவிப்புகளை, இந்த மேடையில் நான் வெளியிட விரும்புகிறேன்.''
''என்னுடைய தலைமையிலான நம்முடைய திராவிட மாடல் ஆட்சியில், எம்.ஜி.ஆர். பிலிம் சிட்டி 25 கோடி ரூபாய் மதிப்பீட்டில், நான்கு படப்பிடிப்புத் தளங்களாக விரைவில் அமைக்கப்பட இருக்கிறது. அதுமட்டுமல்ல, திரையுலகம் சார்பில், கலைஞானி கமல்ஹாசன் அவர்கள் நேராக வந்து என்னிடம் வைத்த கோரிக்கையை ஏற்று, நவீன திரைப்பட நகரம் (Modern Film City) பூந்தமல்லியில் 140 ஏக்கர் பரப்பளவில், 500 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட இருக்கிறது. அந்தத் திரைப்பட நகரத்தில் பெரிய L.E.D. Wall, நவீன தொழில்நுட்ப அம்சங்களான அனிமேஷன் மற்றும் VFX, Production மற்றும் Post Production பணிகள், 5 நட்சத்திர ஓட்டல் உள்ளிட்ட அனைத்து நவீன வசதிகளும் ஏற்படுத்தித் தரப்படும் என்று அறிவிப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.''
''நான் கொஞ்சம் காலம் கடந்து வந்தேன். அதுமட்டுமல்லாமல், விரைவாகவும் செல்லவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன். காரணம், உலக முதலீட்டாளர்கள் மாநாடு பணி காத்திருக்கிறது. அதனால்தான், வேக வேகமாக என்னுடைய உரையை நான் இங்கே ஆற்றி விடைபெற விரும்புகிறேன்.''












Click it and Unblock the Notifications