மக்களே உஷார்! அதிகபட்சம் இவ்வளவு பணம் தான் எடுத்துச்செல்ல வேண்டும்.. மாநில தேர்தல் ஆணையம் ஸ்ட்ரிக்ட்
சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நெருங்கும் நிலையில், தேர்தல் நடத்தை விதிகள் தொடர்பாக மாநில தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
சென்னை உட்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என, தமிழகத்தில் உள்ள 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு, வார்டு வரையறை செய்யப்பட்டபடி, ஒரே கட்டமாக வரும் பிப்ரவரி 19இல் தேர்தல் நடைபெறுகிறது.
இதனிடையே பொதுமக்கள் உரிய ஆவணங்கள் இல்லாமல் எவ்வளவு பணம் எடுத்துச் செல்லலாம் என்பது குறித்து மாநில தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

மாநில தேர்தல் ஆணையம்
இது தொடர்பாக மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு, தேர்தல்கள் 19.02.2022 அன்று ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. ஒரு மாநகராட்சி ஒரு மண்டலத் (Zone)-திற்கு ஒன்று, நகராட்சிக்கு மற்றும் ஒரு பேரூராட்சிக்கு தலா ஒரு பறக்கும் படை வீதத்தில், பறக்கும் படைக்கு ஓர் செயற் குற்றவியல் நீதிபதி (Executive Magistrate) மற்றும் இரண்டு அல்லது மூன்று காவல்துறை காவலர், வீடியோகிராஃபர் கொண்ட பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.

24 மணி நேரமும் பறக்கும் படைகள்
இப்பறக்கும் படைகள் மாதிரி நடத்தை விதி அமலில் உள்ளவரை 24 மணி நேரமும் இயங்க வேண்டும். 24 மணி நேரமும் இயங்குகின்ற வகையில், எட்டு மணி நேரத்திற்கு ஒரு முறை மாற்றுப்பணி (shift) என்று இயங்கக்கூடிய வகையில் தேவைக்கேற்ப மாவட்டங்களில் பறக்கும் படைகளை மாவட்ட தேர்தல் அலுவலர்கள் அமைத்துள்ளனர், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்கள் நேர்மையாக நடைபெற மாதிரி நடத்தை விதி அமலில் உள்ளதைப் பறக்கும் படைகள் கண்டிப்பாக உறுதி செய்தல் வேண்டும்.

எவ்வளவு பணம் எடுத்துச் செல்லலாம்
மாதிரி நடத்தை விதி மீறல்கள், அச்சுறுத்தல், மிரட்டுதல், சமுக விரோத செயல்கள், வாக்காளர்களுக்கு மது மற்றும் பணம் லஞ்சமாக வழங்குதல் தொடர்பான புகார்களின் மீது முழு கவனம் செலுத்துவது பறக்கும் படைகளின் கடமையாகும். வேட்பாளரோ அல்லது அவரது முகவரோ அல்லது கட்சி தொண்டரோ, பொது மக்களோ, தகுதியான ஆவணங்கள் இல்லாமல் ரூ 50,000/-க்கு மேல் பணத்தை வாகனத்தில் எடுத்துச் சென்றாலோ, ரூ.10,000/-க்கு மேல் மதிப்புள்ள விளம்பரத் தட்டிகள், தேர்தல் பொருட்கள், போதைப் பொருட்கள், மது, ஆயுதங்கள் அல்லது அன்பளிப்பு பொருட்கள் அவற்றினை பறக்கும் படைகள் ஆய்வின் போது பறிமுதல் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. பறக்கும் படைகளின் ஆய்வு மற்றும் பறிமுதல் செய்யும் அனைத்து நிகழ்வுகளையும் வீடியோ குழுவினால் பதிவு செய்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

1650 பறக்கும் படைகள்
தற்போது 550 குழுக்கள் (8 மணி நேரத்திற்கு ஒரு குழு வீதம்) என மொத்தம் 1.650 எண்ணிக்கையில் பறக்கும் படை இயங்கி வருகிறது. பறிமுதல் செய்யப்படும் பணம் முழுவதும் நீதிமன்றத்தின் உத்தரவின்படி கருவூலத்தில் செலுத்த வேண்டும். பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை அலுவலக நேரத்திற்கு பின்பும், விடுமுறை நாட்களிலும் கருவூலத்தில் செலுத்துவதற்குக் கருவூல அலுவலகத்திற்கு மாவட்ட தேர்தல் அலுவலர்களால் தேவையான அறிவுரைகள் வழங்கப்பட வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது" என்று அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications