அடியோடு மாறும் அரசு பேருந்துகள்.. சென்னைக்கு "500" பஸ்கள்.. போக்குவரத்து கழகம் ஸ்வீட் அப்டேட்
சென்னை: தமிழகம் முழுவதும் சுமார் 7 ஆயிரம் புதிய பஸ்களை வாங்க தமிழக அரசு போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் 1,000 மின்சார பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதில் முதற்கட்டமாக 500 மின்சார பேருந்துகள் விரைவில் பயன்பாட்டுக்கு வர இருக்கிறது என தெரிவித்துள்ளது.
தமிழக அரசு பேருந்துகளில் சமீப காலமாக உரிய பராமரிப்பு இன்றி இருப்பதாக பயணிகள் தரப்பில் தொடர் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. அண்மையில், அரசு பேருந்தின் இருக்கை கழன்று விழுந்ததது. இதில் பேருந்தின் கண்டக்டர் காயம் அடைந்தார்.

அதேபோல, மழைக்காலங்களில் குடை பிடித்தபடி பயணிகள் பயணம் செய்வது.. சீட்டுக்கள் சேதம் அடைந்து இருப்பது... படிக்கட்டுகள் உடைந்து விழுவது போன்ற காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. இந்த நிலையில், தமிழகம் முழுவதும் சுமார் 7 ஆயிரம் புதிய பஸ்களை வாங்க தமிழக அரசு போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு அரசு பொதுப்போக்குவரத்து சாலை மார்க்கமாக 8 போக்குவரத்து கழகங்களில் 20,220 பேருந்துகள் மூலமாக 10,125 வழித்தடங்களில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில், தினசரி 18,228 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இதேபோல் வார இறுதி நாட்களில் பொதுமக்களின் வசதி கருதி அதிக சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகிறது.
நாள் ஒன்றுக்கு 1.76 கோடி பேர் பயணம் செய்து பயன் பெருகிறார்கள். இதேபோல், விடியல் பயணம் திட்டத்தின் மூலம் மகளிருக்காக இயக்கப்பட்ட கட்டணமில்லா 7,169 பேருந்துகள் மூலம் தினசரி 51.74 லட்ச பெண் பயணிகள் பயன்பெற்றுள்ளனர். கோவிட் கொரோனா காலத்தில் குறிப்பாக 2020 - 2022 ஆம் ஆண்டுகளில் போதிய வருமானம் இன்றி அரசு போக்குவரத்து பேருந்துகள் இயக்கப்பட்டதால், அரசுக்கு போதிய வருமானம் இல்லாமல் அதிக நிதி நெருக்கடி ஏற்பட்டது.
இதன் காரணமாக கடந்த சில ஆண்டுகளாக புதிய பேருந்துகள் வாங்க இயலாத சூழல் இருந்தது. இப்படிப்பட்ட நிதி நெருக்கடியை சரி செய்து புதிய பேருந்துகள் வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் 2023 - 2024 ஆம் நிதி ஆண்டில் 1,000 புதிய பேருந்துகளும், தற்போதைய நிதி ஆண்டில் 3,000 புதிய பேருந்துகளும்,
மேலும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் கீழ் 16 புதிய பேருந்துகள், ஜெர்மன் வளர்ச்சி குழுவின் உதவியுடன் 2660 புதிய பேருந்துகள் என மொத்தம் 7,682 புதிய பேருந்துகளை வாங்க அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது என்றும், மீதம் இருக்கும் 7,030 பேருந்துகள் இந்த நிதி ஆண்டுக்குள் பயன்பாட்டுக்கு வரும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.
சென்னையில் 1,000 மின்சார பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதில் முதற்கட்டமாக 500 மின்சார பேருந்துகள் விரைவில் பயன்பாட்டுக்கு வர இருக்கிறது என தெரிவித்துள்ளது. பொதுமக்களுக்கு விபத்தின்றி பாதுகாப்பான சேவையை உறுதி செய்யும் வகையில் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications