அச்சமற்று இருங்கள்...கொரோனா பெருந்தொற்றில் இருந்து எளிதில் மீண்டுவிடலாம் - நம்பிக்கை வார்த்தைகள்
கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட போதும் அச்சமற்று மருந்து மாத்திரைகளுக்கு அப்பால் நான் என்னென்ன செய்தேன்என்று முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் எழுத்தாளர்
சென்னை: அச்சமற்று இருத்தல், மிக கவனமாக உடலின் மாற்றங்களை கவனித்துக்கொள்ளுதல், நமக்கான மருந்துகளை எடுத்துக்கொள்வதில் நுண்ணுர்வுடன் இருத்தல் , நன்றாக சாப்பிடுதல், நன்றாக ஓய்வெடுத்தல் , மூச்சுப் பயிற்சி செய்தல் இவைகளெல்லாம் ஒரு சேர இருந்தால் கொரோனாவில் இருந்து மீண்டு விடலாம் என்று நம்பிக்கையுடன் கூறியுள்ளார் எழுத்தாளர் பிரபாகர்
எனக்கு கொரோனா எளிமையான தாக்குதலாக வந்து விட்டுப் போய்விட்டதா? அல்லது நான் மேற்கொண்ட சில நடவடிக்கைகளும் எடுத்துக் கொண்ட மாற்று மருந்துகளும் நோயை அடுத்த கட்டத்திற்கு கொண்டு போகாமல் சரி பண்ணியதா என்று எனக்குத் துள்ளியமாகத் தெரியவில்லை. ஆனாலும் மருந்து மாத்திரைகளுக்கு அப்பால் நான் என்னென்ன செய்தேன் என்று பதிவிடுவது இந்த பதிவில் மிக முக்கியமானது என்று நினைக்கிறேன்.
கொரோனா பரிசோதனை செய்வதற்கு இரண்டு மூன்று நாட்களுக்கு முன்பே நண்பர் செந்தமிழனின் "பெருந்தொற்று-மரபில் வழியுண்டு" என்கிற காணொளியைக் கேட்டிருந்தேன். நண்பர் செந்தெமிழன் தற்கால சூழலில் தமிழ் மரபு குறித்தும் தற்சார்பு வாழ்வு குறித்தும் மிகத் துல்லியமான சிந்தனைகளை பதிவு செய்து வருகிற சிந்தனையாளர்.

கொரோனா நுண்ணுயிரியை நாம் ஒன்றும் செய்ய முடியாது. ஆனால் நுரையீரலில் கபம் மிகாமல் இருந்தால் கொரோனா நுண்கிருமி எந்த பாதிப்பையும் உண்டாக்க முடியாது என்று ஒரு கருத்தை சொல்லியிருந்தார்.
நுரையீரலில் கபம் மிகுவதை தடுக்க எட்டு குப்பைமேனி இலையையும் நான்கு மிளகையும் , ஒரு குவளை நீரில் போட்டு கொதிக்க வைத்து ஐந்து நாட்கள் குடிக்க சொல்லியிருந்தார். நான் அதை செய்தேன். ஐந்து நாட்களில் நுரையீரலில் சளியற்ற தன்மையை உணர்ந்தேன்.
கபம் சேராமல் இருக்க அவர் சொன்ன மேலும் சில வாழ்க்கை ஒழுங்குகளையும் கடைபிடித்தேன். இரண்டாவதாக உடல் நலம் குறித்து தொடர்ந்து ஆக்கப்பூர்வமான விஷயங்களைப் பேசி வருகிற "ஓசை செல்லா" அவர்களின் பதிவுகளை தொடர்ந்து வாசித்து வந்தேன்.
கொரோனாவுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர் சொன்ன, தினசரி காலையில் சுக்கு காஃபி, மதியானம் திப்பிலி ரசம், இரவில் ஒரு முறை மஞ்சள்பொடியை மூக்குப் பொடி போல எடுத்து மூக்கில் வைத்து சுவாசிப்பது.. இதையும் சில தினங்கள் செய்தேன். ஆஸ்த்துமாவிற்காக தொடர்ந்து இன்ஹேலர் பயன்படுத்தி வந்த நான் அந்த நாட்களில் இன்ஹேலர் இல்லாமல் நன்றாக சுவாசித்தேன்.
கபசுரக்குடிநீர் சில நாட்கள் குடித்தேன். தினசரி இரண்டு முறை நொச்சி இலை, மஞ்சள் போட்டு ஆவி பிடித்தேன். அவ்வப்பொழுது சுடுநீரில் உப்பு போட்டு கொப்பளித்தேன்.
எனது யோகா ஆசிரியர் ( எங்களின் ஹவுஸ் ஓனர் மேடம்) சொல்லிக் கொடுத்த கொரோனாவிற்கான சிறப்பு யோகா மற்றும் சுவாசப் பயிற்சிகளை செய்தேன்.
கொரோனா தொற்று எனக்கு தீவிரமான அடுத்த கட்டத்திற்கு போகாமல் இருந்ததற்கு இவைகளுக்கும் பங்கிருப்பதாகவே நான் உறுதியாக நம்புகிறேன்.
அச்சமற்று இருத்தல், மிக கவனமாக உடலின் மாற்றங்களை கவனித்துக்கொள்ளுதல், நமக்கான மருந்துகளை எடுத்துக்கொள்வதில் நுண்ணுர்வுடன் இருத்தல் , நன்றாக சாப்பிடுதல், நன்றாக ஓய்வெடுத்தல் , மூச்சுப் பயிற்சி செய்தல் இவைகளெல்லாம் ஒரு சேர இருந்தால் கொரோனாவில் இருந்து மீண்டு விடலாம் என்று நம்புகிறேன்.
உங்கள் அனுபவம்
மக்களே இவரது அனுபவ கதையை படித்திருப்பீர்கள், இனி நீங்களோ, உங்கள் குடும்பத்தினரோ கொரோனாவை வென்றது எப்படி என்பதை மக்களுக்கு தெரிவியுங்கள். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்ள உங்கள் கதைகள் நிச்சயம் அவர்களுக்கு உதவும். நீங்கள் உங்கள் அனுபவங்களை [email protected] மெயிலில் பகிருங்கள். மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்துங்கள். நம்பிக்கை தான் நம் வலிமை- கொரோனாவை வெல்வோம். இதுவும் கடந்து போகும்.












Click it and Unblock the Notifications