சென்னையில் அட்டூழியம்-அரசு பேருந்து ஓட்டுனரை தாக்கிய பள்ளி மாணவர்கள்-பேருந்தை நிறுத்தி போராட்டம்!
சென்னை: சென்னை அரசு மாநகர பேருந்து ஓட்டுனரை பள்ளி மாணவர்கள் தாக்கியதால், 20 க்கும் மேற்பட்ட பேருந்தை ஆங்காங்கே நிறுத்தி பேருந்து ஓட்டுநர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சென்னையில் சில இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Recommended Video
சென்னை தியாகராயர் நகரில் இருந்து மாநகர பேருந்து ஒன்று, இன்று காலை திருவள்ளூர் நோக்கி வந்து கொண்டிருந்தது. அந்த பேருந்தை பூந்தமல்லி காட்டுப்பாக்கத்தை சேர்ந்த துரை என்பவர் ஓட்டி வந்தார். நடத்துனராக செங்கல்பட்டு மாவட்டம் பொன்விளைந்த களத்தூர் பகுதியை சேர்ந்த காத்தவராயன் என்பவர் பணியாற்றினார். அந்த பேருந்து, திருவள்ளூரை அடுத்த அரண்வாயல் குப்பம் பகுதி பேருந்து நிறுத்தத்தில் நிற்காமல் சென்றது. ஓட்டுநர் பேருந்தை நிறுத்தவில்லை என கூறப்படுகிறது.

பேருந்து நிறுத்தத்தில் பேருந்து நிற்காமல் சென்றதால் அங்கிருந்த பள்ளி மாணவர்கள் ஆத்திரமடைந்தனர். பேருந்தை வழிமறித்து ஓட்டுநர் துரையை தகாத வார்த்தையால் பேசியதோடு, அவரை கடுமையாக தாக்கி விட்டு, அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இதனால் அதிர்ச்சியடைந்த ஓட்டுநர் துரை, பேருந்தை அங்கேயே விட்டுவிட்டு நடத்துனருடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதைத்தொடர்ந்து அவருக்கு ஆதரவாக. திருவள்ளூர் மற்றும் பூந்தமல்லியில் இருந்து வந்த 20 க்கும் மேற்பட்ட மாநகர பேருந்து ஓட்டுநர்களும் பேருந்தை ஆங்காங்கே நிறுத்திவிட்டு, ஓட்டுநர் துரை தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக பஸ் பயணிகள் அனைவரும் அவதியுற்றனர். மேலும் பஸ்கள் நிறுத்தப்பட்டதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
போலீசார் பேச்சுவார்த்தை
இந்த சம்பவம் பற்றிய தகவல் அறிந்ததும் செவ்வாபேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட மாநகர பஸ் டிரைவர் மற்றும் நடத்துனரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர் அப்போது அவர்கள் குற்றவாளிகளை கைது செய்வதாக உறுதியளித்தனர். அதை தொடர்ந்து சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற போராட்டத்தை கைவிட்டு விட்டு மாநகர பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் மீண்டும் பேருந்தை இயக்கினர்.
அரசு பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களின் இந்த திடீர் போராட்டம் காரணமாக அந்த வழியாக அரை மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் அலுவலகங்களுக்கு பணிக்குச் செல்பவர்கள் கடும் அவதிக்கு ஆளாகினர். மேலும், பேருந்து இயக்கப்படாததால், பேருந்தில் பயணிகளும் குறித்த நேரத்திற்கு அலுவலகம் மற்றும் இதர பணிகளுக்குச் செல்ல முடியாமல் தவித்தனர்.












Click it and Unblock the Notifications