சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் வேகமாக வந்த சிமெண்ட் லாரி.. நண்பனுடன் போன மாணவிக்கு சோகம்
சென்னை: திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை-பெரியபாளையம் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற சென்னையைச் சேர்ந்த கல்லூரி மாணவர்-மாணவி டிராக்டர் மோதிய விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர்.
சென்னை -- திருப்பதி தேசிய நெடுஞ்சாலை என்பது மிக அதிக வாகனங்கள் செல்லும் நெரிசலான சாலையாகும். குறிப்பாக சென்னைக்கு வெளியில் உள்ள பகுதியான பெரியபாளையம் - ஊத்துக்கோட்டை வரை, 18 கி.மீ., தொலைவிற்கு சாலை மிகவும் சிக்கலானது ஆகும்.

இங்கு அரியப்பாக்கம், ஆத்துப்பாக்கம், தண்டலம், சூளைமேனி, பாலவாக்கம், பேரண்டூர், தாராட்சி, தொம்பரம்பேடு உள்பட பல்வேறு கிராமங்கள் உள்ளன. சென்னையில் இருந்து திருப்பதி, கடப்பா, கர்நுால், பெங்களூர் ஹைதராபாத் ஆகிய பகுதிகளுக்குச் செல்லும் வாகனங்கள் இந்த சாலையை பயன்படுத்துகிறார்கள். இந்த சாலையில் அடிக்கடி விபத்துகள் நிகழ்கிறது.
இந்நிலையில் ஊத்துக்கோட்டை-பெரியபாளையம் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற சென்னையைச் சேர்ந்த கல்லூரி மாணவர்-மாணவி டிராக்டர் மோதிய விபத்தில் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை எருக்கஞ்சேரி, சர்மா நகர் பகுதியைச் சேர்ந்த 21 வயதாகும் கார்த்திக், தனியார் கல்லூரியில் பி.பி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவரும் திருவள்ளூர் ஈக்காடு வி.எம்.என் தெருவில் வசித்து வந்த ஜெயலலிதா (19) என்ற பெண்ணும் நண்பர்களாக பழகி வந்துள்ளனர். ஜெயலலிதா வேப்பம்பட்டு பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் 2-ம் ஆண்டு படித்து வந்திருக்கிறார்.
இந்நிலையில், செவ்வாய்கிழமை அன்று ஊத்துக்கோட்டையில் உள்ள நண்பர் வீட்டிற்கு கார்த்திக் மற்றும் ஜெயலலிதா ஆகிய இருவரும் ஒரு மோட்டார் சைக்கிளில் சென்று விட்டு திரும்பிக் கொண்டிருந்தனர். திருவள்ளர் மாவட்டம் ஊத்துக்கோட்டை-பெரியபாளையம் நெடுஞ்சாலையில் தண்டலம் பஜார் வீதியில் சாலையோரம் நின்ற சிமெண்ட் கல் ஏற்றிய டிராக்டர் மீது மோட்டார் சைக்கிள் பயங்கரமாக மோதியது. இதில், கார்த்திக் மற்றும் ஜெயலலிதா இருவரும் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இது குறித்து பெரியபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications