அரசு பஸ் TN 45 M 4853-ல் நைசா ஏறிய நபர்.. இரவில் முகப்பில் மின்னிய வார்த்தை.. திடுக்கிட்ட திருச்சி
சென்னை: திருச்சியில் இருந்து தேனி மாவட்டம் கம்பம் நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்தின் எல்.இ.டி (LED) தகவல் பலகையில், வழித்தடப் பெயருக்குப் பதிலாக நடிகர் விஜய்யின் 'தமிழக வெற்றிக் கழகம்' (TVK) என்ற பெயர் ஆங்கிலத்தில் தோன்றியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் தற்போது தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
திருச்சி, திண்டுக்கல் மற்றும் தேனி போன்ற முக்கிய நகரங்களுக்கு இடையே இயக்கப்படும் TN 45 M 4853 பதிவு எண் கொண்ட அந்த அதிவிரைவுப் பேருந்து, 2 நாட்களுக்கு முன்பு வழக்கம்போல பயணிகளுடன் சாலையில் சென்று கொண்டிருந்தது.

ஆனால், அந்த பஸ்ஸின் முகப்பில் இருந்த டிஜிட்டல் வழித்தடப் பலகையில் ஊர் பெயர்களுக்குப் பதிலாக, "தமிழக வெற்றிக் கழகம்" என்ற அரசியல் கட்சியின் பெயர் ஆங்கிலத்தில் மின்னியது அனைவரையும் அதிர வைத்தது.
திருச்சி அரசு பேருந்து
இதைப் பார்த்த பொதுமக்கள் மற்றும் பயணிகள் தொடக்கத்தில் பெரும் குழப்பத்திற்கு ஆளானார்கள். ஒரு அரசுப் பேருந்திலேயே அரசியல் கட்சியின் பெயர் அதிகாரப்பூர்வமாக விளம்பரப்படுத்தப்படுகிறதா அல்லது இது ஏதேனும் திட்டமிட்ட செயலா என்ற கேள்விகள் எழுந்தன.
சாலையில் சென்றவர்கள் இந்த விசித்திரக் காட்சியைத் தங்கள் செல்போன்களில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பகிர, அது காட்டுத்தீயாய் பரவி அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. அரசுப் பேருந்தின் தொழில்நுட்ப கட்டமைப்பில் இத்தகைய மாற்றம் எப்படி நிகழ்ந்தது என்பது குறித்து போக்குவரத்துத் துறை அதிகாரிகள் உடனடியாக விசாரணையைத் தொடங்கினர்.
போக்குவரத்துத் துறை நடத்திய தீவிர விசாரணையில், இது தற்செயலாக நடந்த தொழில்நுட்பக் கோளாறு அல்ல என்பதும், ஒரு திட்டமிடப்பட்ட மர்மச் செயல் என்பதும் வெளிச்சத்திற்கு வந்தது.
டிஜிட்டல் பலகை சேவைகள்
அடையாளம் தெரியாத நபர்கள் அந்தப் பேருந்தின் டிஜிட்டல் வழித்தடப் பலகையைக் கட்டுப்படுத்தும் மென்பொருள் பலகையை (Motherboard) ஹேக் செய்துள்ளனர். நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, பேருந்தின் தொழில்நுட்பக் கட்டமைப்பிற்குள் புகுந்து வழித்தட விவரங்களை நீக்கிவிட்டு, அரசியல் கட்சியின் பெயரைப் பதிவேற்றியது அதிகாரிகளுக்குப் பெரும் சவாலாக அமைந்தது. சைபர் பாதுகாப்பில் உள்ள ஓட்டையைப் பயன்படுத்தி இத்தகைய ஊடுருவல் நடத்தப்பட்டுள்ளது கண்டறியப்பட்டது.
விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததையடுத்து, அந்தப் பேருந்தின் டிஜிட்டல் பலகையில் இருந்த மென்பொருள் அமைப்பு முழுமையாகச் சரிசெய்யப்பட்டு, பாதிக்கப்பட்ட மதர்போர்டு மாற்றப்பட்டது. அதன்பின்னர், மீண்டும் சரியான வழித்தட விவரங்கள் அப்லோடு செய்யப்பட்டு பேருந்து இயக்கப்பட்டது. மேலும், இதுபோன்ற குழப்பமான சம்பவங்கள் இனி நிகழாமல் இருக்கவும், டிஜிட்டல் பலகை சேவைகளை வழங்கும் தனியார் நிறுவனங்கள் கூடுதல் பாதுகாப்புடன் செயல்படவும் போக்குவரத்துத் துறை கடுமையான அறிவுறுத்தல்களை வழங்கியது.
வைஃபை வசதி, புளூடூத்
எனினும், அரசு நிறுவனத்தின் பொதுச் சேவையைத் தனிநபர் ஒருவர் சட்டவிரோதமாகக் கையாண்டது, பொதுப்போக்குவரத்துத் துறையின் சைபர் பாதுகாப்பு குறித்த அச்சத்தை ஏற்படுத்தி விட்டது.
இந்தச் சட்டவிரோதச் செயலில் ஈடுபட்ட மர்ம நபர்களைக் கண்டறிந்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் தரப்பில் கோரிக்கைகள் எழுந்தன.. அரசுப் பேருந்திலேயே அரசியல் விளம்பரம் செய்யப்படுகிறதா அல்லது யாராவது வேண்டுமென்றே செய்த சதியா எனப் பல்வேறு கேள்விகளும் எழுப்பப்பட்டன.
இந்நிலையில், இந்த சம்பவம் தொழில்நுட்பக் கோளாறு அல்ல, திட்டமிட்ட ஹேக்கிங் செயல் என்பதை உறுதி செய்த போக்குவரத்துக் கழக அதிகாரிகள், இது குறித்து போலீசில் புகார் அளித்தனர். பேருந்தில் உள்ள வைஃபை (Wi-Fi) வசதி அல்லது புளூடூத் (Bluetooth) தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, மர்ம நபர்கள் எல்.இ.டி ஸ்கிரீனின் கட்டுப்பாட்டைத் தங்கள் வசம் எடுத்து இந்தப் பெயரை மாற்றியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
பாஸ்வேர்டுகள் பாதுகாப்பு
இது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிவு செய்து, பேருந்து நிறுத்தங்களில் நின்றிருந்தபோது யாராவது சந்தேகப்படும்படியாக செயல்பட்டார்களா அல்லது பேருந்திற்குள் இருந்தே யாராவது கைவரிசை காட்டினார்களா என்பது குறித்துத் தீவிரமாக விசாரணையை தற்போது நடத்தி வருகின்றனர்.
அதுமட்டுமல்ல, இதுபோன்ற சம்பவங்கள் இனி மற்ற பேருந்துகளில் நடக்காமல் இருக்க, எல்.இ.டி திரைகளுக்கான பாஸ்வேர்டு-களை பலப்படுத்தவும், பாதுகாப்பு வசதிகளை மேம்படுத்தவும் தொழில்நுட்பக் குழுவினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அரசுப் பேருந்தில் நடந்த இந்தத் துணிகரச் செயல் திருச்சியில் பெரும் பரபரப்பை விடாமல் ஏற்படுத்தி வருகிறது.












Click it and Unblock the Notifications