நீட்டின் கோர முகத்தை அம்பலப்படுத்திய.. மாணவி ஜோதி ஸ்ரீதுர்காவின் மரணம்.. ஸ்டாலின் வேதனை
ஒரு தேர்வு மாணவ சமுதாயத்தின் மனங்களை நிலைகுலைய வைப்பதாக இருப்பதை அனிதா முதல் ஜோதிஸ்ரீ துர்கா மரணம் வரை உணர முடிவதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை: தற்கொலை என்பது தீர்வல்ல என்று மீண்டும் சொல்வதாகவும், நீட் என்பது ஒரு தேர்வே அல்ல என்பதை மீண்டும் மீண்டும் சொல்கிறேன் என்று மாணவி ஜோதிஸ்ரீ துர்காவின் தற்கொலை குறித்து திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கொரோனா பெருந்தொற்று பரவல் அச்சத்திற்கு இடையே நாளை நீட் தேர்வு நடைபெறுகிறது. பெரும் எதிர்ப்பு எழுந்த நிலையில் இந்த தேர்வு நடைபெறுவதால் மாணவர்கள் மன உளைச்சலுடனே இந்த தேர்வை எதிர்கொள்கின்றனர்.
நாடு முழுவதும் நாளை நடைபெறும் நீட் நுழைவுத் தேர்வை, 15 லட்சத்து 97 ஆயிரத்து 433 பேர் எழுத உள்ளனர்.
மருத்துவ கனவோடு நீட் தேர்வுக்கு படிக்கும் பல மாணவர்கள் அச்சத்தினால் எழுதாமல் விட்டு விடுகின்றனர். பலரோ படிக்கும் போதே மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொள்கின்றனர்.

கடந்த வாரம் நீட் தேர்வுக்கு தயாராகி வந்த அரியலூர் மாணவன் விக்னேஷ் என்பவர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
நீட் தேர்வை கண்டு அச்சப்பட வேண்டாம், தற்கொலை தீர்வாகாது என தமிழக முதல்வர், அரசியல் தலைவர்கள், கல்வியாளர்கள் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கி வந்தனர்.
இதனிடையே, நீட் தேர்வு எழுத தயாராகி வந்த மதுரையை சேர்ந்த மாணவி ஜோதி ஸ்ரீதுர்கா, தேர்வு அச்சம் காரணமாக இன்று காலை அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். நீட் தேர்வு பயத்தால் ஒரே வாரத்தில் இரு மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டிருப்பது தமிழகத்தில் மாணவர்கள், பெற்றோர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில், ஒரு தேர்வு மாணவ சமுதாயத்தின் மனங்களை நிலைகுலைய வைப்பதாக இருப்பதை அனிதா முதல் ஜோதிஸ்ரீ துர்கா மரணம் வரை உணர முடிவதாக திமுக தலைவர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

நீட் அச்சத்தினால் மதுரை மாணவி ஜோதிஸ்ரீ துர்கா தற்கொலை செய்தது அதிர்ச்சி! 'எல்லோருமே என்கிட்ட ரொம்ப எதிர்பார்த்துங்க, ஆனா எனக்குத்தான் பயமா இருக்கு என்று ஜோதிஸ்ரீ துர்கா பேசிய ஆடியோ, நீட் தேர்வின் கோர முகத்தை காட்டுகிறது. ஒரு தேர்வு மாணவ சமுதாயத்தின் மனங்களை நிலைகுலைய வைப்பதாக இருப்பதை அனிதா முதல் ஜோதிஸ்ரீ துர்கா மரணம் வரை உணர முடிகிறது.
தற்கொலை என்பது தீர்வல்ல என்று மீண்டும் சொல்கிறேன். நீட் என்பது ஒரு தேர்வே அல்ல என்பதை மீண்டும் மீண்டும் சொல்கிறேன்," எனக் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications