இடியோடு கோடை மழை பெய்யும்.. குடையோடு வெளியே போங்க.. வானிலை மையம் எச்சரிக்கை
செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், அரியலூர், கடலூர், நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னை : தமிழகத்தில் 20 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இடி மின்னலுடன் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 20-ந் தேதிக்கு மேல் வெயிலின் தாக்கம் அதிகரித்தது. ஈரோடு, மதுரையில் கடந்த வாரங்களில் 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது.
சென்னை, வேலூர், திருச்சி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு அடுத்தப்படியாக சேலத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. தமிழ்நாட்டில் கோடை வெயில் சுட்டெறிக்க தொடங்கிய நிலையில், கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. கடும் வெயிலால் அவதிப்பட்டு வந்த மக்களுக்கு திடீர் மழை மகிழ்ச்சியைத் தந்துள்ளது.

சேலத்தில் மழை
சேலத்தில் கடந்த சில நாட்களாக 96 முதல் 98 பாரன்ஹீட் வெப்பம் பதிவானது. இந்த வெப்ப மிகுதியின் காரணமாக கடந்த 2 நாட்களாக நள்ளிரவில் மழை பெய்து வருகிறது. மேலும் நேற்று நள்ளிரவில் மழை வெளுத்து வாங்கியது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை 2 மணி நேரம் விடாமல் கொட்டித்தீர்த்தது. இந்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது.

திருவாரூரில் மழை
திருவாரூர் மாவட்டத்தில் கூத்தாநல்லூர் மற்றும் வடபாதிமங்கலம் பகுதியில் கடந்த சில நாட்களாக கடுமையான வெயில் சுட்டெரித்தது. இதனால் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்தது. நேற்று காலை முதல் கடுமையான வெயில் சுட்டெரித்தது. நேற்று மதியம் திடீரென வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இதையடுத்து கூத்தாநல்லூர், வடபாதிமங்கலம், திருராமேஸ்வரம், கோரையாறு, பொதக்குடி, குலமாணிக்கம், அன்னுக்குடி, பெரியகொத்தூர், பூந்தாழங்குடி, கார்நாதன்கோவில், சித்தனங்குடி, ஓகைப்பேரையூர், பாரதிமூலங்குடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பரவலாக மழை செய்தது. இதனால் வெப்பத்தின் தாக்கம் சற்று குறைந்தது.

மிதமான மழைக்கு வாய்ப்பு
வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் நிகழ்வால் தமிழகத்தில் மழை தொடர்ந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தமிழ்நாட்டில் வரும் 25ஆம் தேதி மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெளுத்து வாங்கப்போகும் மழை
இந்த நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி சேலம், கடலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், கோவை, திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், சிவகங்கை, தேனி, தென்காசி மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications