தார்ச்சட்டியுடன் எழும்பூருக்கு கிளம்பிட்டாரு கி.வீரமணி.. இதோ வீதிக்கே வந்துவிட்டாரு.. வைகோ பூரிப்பு

கி.வீரமணியின் போராட்டத்துக்கு மதிமுக வைகோ வாழ்த்து தெரிவித்துள்ளார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: "மோடி அரசின் தமிழர் விரோதச் செயல்பாடுகளை கண்டித்து மாபெரும் விழிப்பு உணர்வுப் பிரச்சாரத்தை நடத்தி முடித்த சூட்டோடு, வாய்மை போருக்கு இளையவராக, அண்ணன் கி.வீரமணி தார்ச் சட்டி, தூரிகை ஏந்தி, நம்மீது திணிக்கப்பட்டுள்ள இந்தி பெயர்களை அழிக்க இதோ வீதிக்கு வந்து விட்டார், அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள்" என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பூரிப்புடன் தெரிவித்துள்ளார்.

நாகர்கோவில் முதல் சென்னை வரை 21 நாட்கள் தேசிய கல்வி கொள்கை எதிர்ப்பு மற்றும் மாநில உரிமை மீட்பு, நீட் தேர்வு எதிர்ப்பு குறித்து திராவிடர் கழகம் சார்பில் பரப்புரை பயணம் பொதுக் கூட்டம் நடைபெற்று வருகிறது.

அதன்படி, ஒவ்வொரு மாவட்டத்திலும் திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி தலைமையில் கூட்டம் நடைபெற்று வருகிறது.. அங்கெல்லாம் ஆளும் பாஜகவை வீரமணி கடுமையாக தாக்கி பேசி வருகிறார்.

தார்ச்சட்டி

தார்ச்சட்டி

குறிப்பாக வீரமணி பேசும்போது, "ஆங்கிலத்துக்கு பதில் இந்தியை கொண்டு வருவதாக அமித்ஷா சொல்கிறார். அவர்கள் இந்தி எதிர்ப்பு போராட்டத்தை மீண்டும் கொண்டு வர பார்க்கின்றனர். இந்திக்கு எதிராக தார்சட்டி தூக்கி போராடிய இயக்கம் திராவிடர் கழகம். வரும் ஏப்ரல் 30 ஆம் தேதி சென்னையில் தார்சட்டி தூக்கி இந்தி எழுத்துக்களை அழிக்கும் போராட்டத்தை நடத்துவோம்" என்று அறிவித்திருந்தார்.

 வீரமணிக்கு வாழ்த்து

வீரமணிக்கு வாழ்த்து

இந்த தார்சட்டிஏந்தி இந்தி எழுத்தை அழிக்கும் போராட்டத்துக்குதான், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆதரவு தந்துள்ளதுடன், கி.வீரமணிக்கும் தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டுள்ளார்.. இது குறித்து வைகோ வெளியிட்டுள்ள அந்த வாழ்த்து அறிக்கை இதுதான்: "எப்பக்கம் புகுந்து வரும் இந்தி எத்தனைப் பட்டாளம் கூட்டி வரும் இந்தி" என்னும் உணர்வு, கழக இளைஞர் அணிப் பட்டாளத்தைத் திரட்டிக் கொண்டு, எழும்பூர் தொடர்வண்டி நிலையத்தில், இந்திப் பெயர் அழிப்பு அறப்போரில் நாளை களம் காண்கின்றார், தமிழர் தலைவர் மானமிகு அண்ணன் ஆசிரியர் கி.வீரமணி!

 திணிப்பு

திணிப்பு

கொளுத்துகின்ற வெயிலையும், உடல்நலக் குறைவையும் பொருட்படுத்தாது, மோடி அரசின் தமிழர் விரோதச் செயல்பாடுகளைக் கண்டித்து மாபெரும் விழிப்பு உணர்வுப் பிரச்சாரத்தை நடத்தி முடித்த சூட்டோடு, வாய்மைப் போருக்கு இளையவராக, அண்ணன் கி.வீரமணி அவர்கள் தார்ச் சட்டி, தூரிகை ஏந்தி, நம்மீது திணிக்கப்பட்டுள்ள இந்திப் பெயர்களை அழிக்க இதோ வீதிக்கு வந்து விட்டார்.

சமஸ்கிருதம்

சமஸ்கிருதம்

இந்திக்கு ஆதரவாக அமித் ஷாக்கள் கொக்கரிக்கும் காலம் இது! இந்தியையும் - சமஸ்கிருதத்தையும் 'ஒரே மொழி; ஒரே நாடு' என்று முழங்கிக் கொண்டே நாடு முழுக்க முரட்டுத்தனமாகத் திணித்து வரும் மோடி அரசின் காலம் இது! பெரியாரும், அண்ணாவும், கலைஞரும் தொடர் வண்டி நிலையங்களில் இந்தி எழுத்துகளை தார் பூசி அழித்ததால்தான், முதலாவது இடத்தில் தமிழ்ப் பெயர் இடம்பெற முடிந்தது!

 தார்ச்சட்டி

தார்ச்சட்டி

1985 ஆம் ஆண்டில், இதே போல எழும்பூர் தொடர்வண்டி நிலையத்திற்கு, இந்திப் பெயர் அழிக்க திராவிடர் கழகத் தோழர்களோடு ஆசிரியர் அண்ணன் கி.வீரமணி அவர்கள் எழுச்சி நடைபோட்டு அணி வகுத்ததும், வீரமணி வென்றிடுக! வெற்றி மணி ஒலித்திடுக! என்று முரசொலித்து, தார்ச் சட்டியையும், தூரிகையையும் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் ஆசிரியர் வீரமணி அவர்களிடம் அளித்து, உரிமைப் போரைத் துவக்கி வைத்தது என் நெஞ்சில் நிழலாடுகின்றது! சரித்திரம் திரும்புகின்றது! (History repeats itself) என்ற சொற்றொடருக்கு ஏற்ப, மீண்டும் அதே இடத்தில் அறப்போர் தொடர்கின்றது.

முரட்டுத்தனம்

முரட்டுத்தனம்

கேரளம், ஆந்திரம், கர்நாடகம், மேற்கு வங்கம், வடகிழக்கு மாநிலங்கள் என நாடு முழுக்க இந்தி எதிர்ப்புக் கனல் மோடி அரசின் முரட்டுத்தனமான நடவடிக்கையை கனன்று எரிகின்ற வேளையில், திராவிடர் கழகம் நடத்தும் இந்த இந்தி எதிர்ப்புப் போராட்டம் இந்தியா முழுவதும் பற்றிப் பரவும் என்பதில் துளி அளவும் ஐயம் இல்லை! "ஓடிவந்த இந்திப் பெண்ணே கேள் -நீ; தேடிவந்த கோழையுள்ள நாடு இது அல்லவே!" என்ற பாவலர் பாலசுந்தரம் அவர்களின் பாடல் வரிகளுக்கு செயல் வடிவம் அளிக்கும் வகையில் திராவிடர் கழகம் நடத்திடும் இந்தி எதிர்ப்புப் போருக்கு மறுமலர்ச்சி திமுக வாழ்த்து உரைக்கின்றது.

 வாழ்த்துக்கள்

வாழ்த்துக்கள்

இந்தித் திணிப்புக்கு நிரந்தரத் தீர்வு காண, அரசு அமைப்புச் சட்டத்தின் 8 ஆவது அட்டவணையில் உள்ள அனைத்து மொழிகளையும் ஆட்சி மொழிகள் ஆக்கிட இந்தப் போராட்டம் பெரிதும் பயன்படும் என்ற உணர்வோடு, ஆசிரியர் அண்ணன் கி.வீரமணி அவர்களையும், அவருடன் களம் காணும் மொழிப்போர் மற்றவர்களையும் மறுமலர்ச்சி திமுகழகத்தின் சார்பில் மீண்டும் மீண்டும் வாழ்த்துகிறேன்; பாராட்டுகிறேன்" என தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+