அரசு ஊழியர்களுக்கு சூப்பர்.. ஆசிரியர் ஓய்வூதிய பலன்களை 30 நாளில் வழங்க உத்தரவு.. அப்ப "இவர்களுக்கு"?
சென்னை: ஆசிரியர் ஓய்வூதிய பலன்கள் எப்போது வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவிவந்த நிலையில், அதுகுறித்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
பள்ளிக்கல்வி இயக்குநர் க.அறிவொளி, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு, சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியிருக்கிறார்.
ஆசிரியர்கள்: அந்த சுற்றறிக்கையில், "தமிழகத்தில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரிந்த தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களுக்கு பணியில் இருந்து ஓய்வு பெற்ற 30 நாட்களுக்குள் அனைத்து ஓய்வூதிய பலன்களையும் பெற்று தருவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.

அதில் பணிக்காலத்துக்கு உட்படாத முந்தைய அல்லது பிந்தைய பள்ளி சார்ந்த தணிக்கை தடைகளுக்காக ஓய்வூதிய பலன்களை நிறுத்தி வைக்கக் கூடாது என்பன உட்பட பல்வேறு அம்சங்கள் கூறப்பட்டுள்ளன. அவற்றை பின்பற்றி ஆசிரியர்களின் பணிக்காலத்துக்கு தணிக்கை அறிக்கை பெற்றபின்னர், தனிப்பட்ட அரசு நிதி சார்ந்த தணிக்கை தடை நிலுவை ஏதும் இல்லையெனில் உடனடியாக 30 நாட்களுக்குள் ஓய்வூதிய பலன்களை பெற்று வழங்க வேண்டும்.
துரித நடவடிக்கைகள்: இந்த விவகாரத்தில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் தாமதமின்றி துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்" என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
முறையாக ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு, ஒரு மாதத்திற்குள் அவர்களுக்கான பணப்பலன், ஓய்வூதிய பலன் அளிப்பது தொடர்பான பணிகளை முடிக்க வேண்டும், ஆசிரியர்களுக்கு, பள்ளி சார்ந்த பணிகளில், பள்ளி கணக்கிலான நிதி பயன்பாட்டில் தணிக்கை குழு தடை இருந்தால், அவர்களுக்கு ஓய்வூதியத்தை நிறுத்த வேண்டாம் என்று அரசு தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறது.
ஆசிரியர்கள்: ஆனாலும், ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் பள்ளி நிதியை தனிப்பட்ட பொறுப்பில் பயன்படுத்தியதில், கணக்கு தணிக்கை ஆட்சேபனை இருந்தால், அவர்களுக்கான ஓய்வூதிய பலனை நிறுத்தி வைக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளதாம்.. இந்த உத்தரவால், பள்ளி சார் நிதி பயன்பாட்டில், தணிக்கை குழு தடையிலிருக்கும் ஆசிரியர்களுக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.












Click it and Unblock the Notifications