விடாமல் விரட்டும் எடப்பாடி பழனிசாமி.. சளைக்காமல் பதில் தரும் திமுக அமைச்சர்.. என்ன நடந்தது?
நகைக்கடன் தள்ளுபடி குறித்து ஐ பெரியசாமி புது தகவல் அளித்துள்ளார்
சென்னை: தமிழகம் முழுவதும் மொத்தம் எத்தனை பேருக்கு நகைக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமி அறிவித்துள்ளார்.
ஆட்சி வந்தால் கூட்டுறவு வங்கிகளில் வைக்கப்பட்டுள்ள நகை கடன்கள் ரத்து செய்யப்படும் என்று கடந்த சட்டசபை தேர்தல் பிரச்சாரத்திலும், திமுகவின் தேர்தல் அறிக்கையிலும் வாக்குறுதி தரப்பட்டிருந்தது.
அதன்படியே திமுக அரியணை ஏறிய நிலையில், கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்குள் நகைக் கடன் வாங்கியவர்களின் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று 110 விதியின் சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலினும் அறிவித்திருந்தார்.

அரசாணை
ஆனால், இந்த அறிவிப்பை செயல்படுத்துவது தொடர்பாக வெளியிடப்பட்ட அரசாணையில், ஓய்வூதியம் பெறுபவர்கள், அரசு ஊழியர்கள், ஐந்து சவரனுக்கு மேல் நகையை பிரித்து வைத்திருப்பவர்கள் உள்ளிட்டோருக்கு நகைக்கடன் தள்ளுபடி கிடையாது என்று நிபந்தனைகளும் அடுத்தடுத்து வெளியாகின.. இந்த நிபந்தனைகளின்கீழ், நகைக்கடன் தள்ளுபடி கோரி விண்ணப்பித்த 48 லட்சம் பேரில், 14.6 லட்சம் பேர் மட்டுமே இந்த தள்ளுபடியை பெறுவதற்கு தகுதியானவர்களாக அடையாளம் காணப்பட்டனர்.

கடன் தள்ளுபடி
ஆனால் கடன் தள்ளுபடிக்கான அறிவிப்பு வெளியாகாமலேயே இருந்தது.. அநேகமாக இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அனைவருக்கும் மார்ச் மாத இறுதிக்குள் நகைக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுவிடும் என்று கூட்டுறவு துறை அமைச்சர் ஐ.பெரியசாமி நேற்று முன்தினம் தெரிவித்திருந்தார்...

பயனாளிகள்
இந்நிலையில் நேற்று, தமிழகம் முழுவதும் மார்ச் 21 வரை மட்டும் மொத்தம் 1.03 லட்சம் பேருக்கு நகைக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டு, அதற்கான ஆவணங்களும், நகைகளும் பயனாளிகளுக்கு அளிக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார். அத்துடன் தகுதியான அனைவருக்கு இந்த கடன் தள்ளுபடி செய்யப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்... இது தொடர்பான மேலும் சில அறிவிப்புகளையும் விரைவில் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எடப்பாடி பழனிசாமி
எனினும் கடன் தள்ளுபடி விவகாரத்தை எதிர்க்கட்சிகள் கையில் எடுத்து வருகின்றன. நேற்றுமுன்தினம், நகைக்கடன் தள்ளுபடி எப்போது என்று அமைச்சர் விளக்கம் தந்த போதிலும், 5 சவரனுக்கு கீழ் வைத்த நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்ற திமுக வாக்குறுதி என்ன ஆனது? என்று பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விடாமல் கேள்வி எழுப்பி கொண்டே இருந்தார்.. கடந்த நகர்ப்புற தேர்தல் பிரச்சாரங்களிலும் சரி, திமுகவை கண்டித்து நடத்தப்படும் ஆர்ப்பாட்டங்களிலும் சரி, எடப்பாடி பழனிசாமி உட்பட அதிமுக தலைவர்கள் வைக்கப்படும் முக்கிய குற்றச்சாட்டாக நகைக்கடன் தள்ளுபடி இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications