18 மணிநேரம் தடையில்லா மின்சாரம்.. விவசாயிகளுக்கு சூப்பர் திட்டத்தை அறிவித்த முதலமைச்சர் விஜய்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: டெல்டா மாவட்டங்களில் பாசனத்திற்காக இன்று மேட்டூர் அணையிலிருந்து நீர் திறக்கப்பட இருந்தது. ஆனால், போதுமான நீர் இருப்பு இல்லாததால், நீர் திறக்கப்படவில்லை. இந்நிலையில், குறுவை நெல் சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில் டெல்டா மற்றும் டெல்டா அல்லாத மாவட்டங்களில் ரூ.134.83 கோடி மதிப்பீட்டில் குறுவை சிறப்புத் தொகுப்புத் திட்டத்தை முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.

இது குறித்து விடுக்கப்பட்டிருக்கும் அறிவிப்பில், "தமிழ்நாட்டில் நெல் சாகுபடி, மாநிலத்தின் உணவுப் பாதுகாப்பிற்கும். விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கும் முக்கியப் பங்காற்றி வருகிறது.

Vijay tamil nadu TVK

டெல்டா மாவட்டங்கள்

குறிப்பாக காவிரி டெல்டா மாவட்டங்கள் மற்றும் டெல்டா அல்லாத மாவட்டங்களில் குறுவை, கார் மற்றும் சொர்ணவாரிப் பருவங்களில் மேற்கொள்ளப்படும் நெல் சாகுபடியை ஊக்குவித்து, நெல் உற்பத்தி மற்றும் உற்பத்தித் திறனை அதிகரிக்கும் நோக்கில் 2026-ஆம் ஆண்டில், 134.83 கோடி ரூபாய் மதிப்பீட்டில் குறுவை சிறப்புத் தொகுப்புத் திட்டம் செயல்படுத்தப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் அறிவித்துள்ளார்.

நெற்பயிர் சாகுபடி

தமிழ்நாட்டில் சராசரியாக 52.72 இலட்சம் ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. இதில், காவிரி டெல்டா பகுதிகளான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களின் அனைத்துப் பகுதிகளிலும், கடலூர். திருச்சி மற்றும் அரியலூர் மாவட்டங்களில் சில பகுதிகளிலும் நெற்பயிரே முதன்மையாக சாகுபடி செய்யப்படுகிறது.

டெல்டா அல்லாத மாவட்டங்கள்

டெல்டா மாவட்டங்களில் ஆண்டுக்கு 20.65 இலட்சம் ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. இதில், குறுவைப் பருவத்தில் மட்டும் சராசரியாக 5.14 இலட்சம் ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. மேலும். டெல்டா அல்லாத இதர மாவட்டங்களில், ஆண்டுக்கு 32.07 இலட்சம் ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இதில், கார் / குறுவை / சொர்ணவாரிப் பருவத்தில் மட்டும் சராசரியாக 5.48 இலட்சம் ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது.

மேட்டூர் அணை

ஆண்டுதோறும் தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, கடலூர் (பகுதி), திருச்சி (பகுதி), அரியலூர் (பகுதி) ஆகிய டெல்டா மாவட்டங்களில் குறுவை நெல் சாகுபடி செய்வதற்கு, மேட்டூர் அணை ஜுன் 12-ஆம் நாளன்று திறப்பது வழக்கமாகும். இந்நிலையில், நடப்பு தென்மேற்குப் பருவத்தில் 'எல்நினோ' எனும் நிகழ்வால் மழை அளவு 90 சதவீதத்திற்கும் குறைவாக இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது தென்மேற்குப் பருவமழை தாமதமாகும் நிலையில் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைவாகவே உள்ளது. இதனால் தற்போது மேட்டூர் அணையில் நீர்மட்டம் 79.56 அடி (நீர் இருப்பு: 41.52 டிஎம்சி) மட்டுமே உள்ளது. எனவே, இன்று (ஜுன் 12) மேட்டூர் அணையைத் திறப்பதற்கான சாத்தியக்கூறு இல்லாத நிலை உள்ளது.

குறுவை சிறப்புத் தொகுப்புத் திட்டம்

இதனால், காவிரி டெல்டா மாவட்டங்களில் இயல்பாக நெல் சாகுபடி மேற்கொள்ளும் 5 இலட்சம் ஏக்கரில் சாகுபடி செய்வதற்கான வாய்ப்பு மிகவும் குறைவாகவே உள்ளது. எனினும், டெல்டா மாவட்டங்களில் வடிமுனைக் குழாய்க் கிணறுகள் (Filter Points) மூலம் 3.55 இலட்சம் ஏக்கர் வரை சாகுபடி மேற்கொள்ள இயலும் என்பதாலும், டெல்டா அல்லாத மாவட்டங்களில் தற்போது மழைப்பொழிவு சீராக இல்லாத நிலையிலும் விவசாயிகள் தங்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாத்திட கார் / குறுவை /சொர்ணவாரிப் பருவத்தில் நெல் சாகுபடி செய்வதை ஊக்குவிக்கவும், நெல் உற்பத்தியை அதிகரித்து, விவசாயிகள் பயனடையும் வகையில் 2026-ஆம் ஆண்டிற்கான குறுவை சிறப்புத் தொகுப்புத் திட்டம் செயல்படுத்தப்படும்

134.83 கோடி ரூபாய்

இதன்படி, வடிமுனைக் மாவட்டங்களில் குறுவை குழாய்களைக் கொண்டு டெல்டா சாகுபடி செய்யும் விவசாயிகளை ஊக்குவிப்பதற்காக 77.50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடும், டெல்டா அல்லாத மாவட்டங்களில் கார், குறுவை மற்றும் சொர்ணவாரி நெல் சாகுபடியை ஊக்குவிப்பதற்காக 57.33 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடும் என மொத்தம் 134.83 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உழவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் குறுவை சிறப்புத் தொகுப்புத் திட்டம் செயல்படுத்தப்படும்.

விதை உற்பத்திக்கான ஊக்கத்தொகை

இத்திட்டத்தில், நெல் இயந்திர நடவு / நேரடி நெல் விதைப்பிற்கான ஊக்கத்தொகை, உயிர் உரங்கள், நெல் நுண்ணூட்ட உரக்கலவை, விதை நெல் விநியோக மானியம் மற்றும் புதிதாக வெளியிடப்பட்ட நெல் இரகங்களின் சான்று விதை உற்பத்திக்கான ஊக்கத்தொகை ஆகிய இனங்களுக்கு 134.83 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடாக டெல்டா மற்றும் டெல்டா அல்லாத மாவட்டங்களின் குறுவை சிறப்புத் தொகுப்புத் திட்டம் செயல்படுத்தப்படும் என ஜோசப் விஜய் அறிவித்துள்ளார்.

உணவுப் பாதுகாப்பை வலுப்படுத்த திட்டம்

நீர் இத்திட்டத்தின் மூலம், இயந்திரமயமாக்கல் ஊக்குவிக்கப்படுவதுடன், மேலாண்மை மேம்படுத்தப்படும். தரமான விதைகள் மற்றும் தொழில்நுட்பங்கள் பயன்பாட்டின் மூலம் நெல் சாகுபடியின் பரப்பு, உற்பத்தி மற்றும் உற்பத்தித்திறன் அதிகரிக்கப்படுவதுடன், விவசாயிகளின் வருமானத்தை உயர்த்தி, மாநிலத்தின் உணவுப் பாதுகாப்பை வலுப்படுத்த இத்திட்டம் உறுதுணையாக அமையும்.

வாய்க்கால்கள் தூர்வாரும் பணிகள்

மேலும், வேளாண் பொறியியல் துறை வாயிலாக டெல்டா மாவட்டங்களில் உள்ள 2,325 கி.மீ. நீளமுள்ள C மற்றும் D வாய்க்கால்கள் 10 கோடி ரூபாய் செலவில் தூர் வாரப்பட்டுள்ளன. மேலும், நீர்வளத்துறை மூலமாக 100 கோடி ரூபாய் செலவில் 4.971 கி.மீ. நீளமுள்ள A மற்றும் B வாய்க்கால்கள் தூர்வாரும் பணிகள் தொடங்கப்பட்டு தற்போது வரை 97 சதவீதப் பணிகள் முடிவுற்றுள்ளன.

மும்முனை மின்சாரம்

மேலும், குறுவை சாகுபடிக்கு 10.714 மெட்ரிக் டன் நெல் விதைகள் மற்றும் 4.02 இலட்சம் மெட்ரிக் டன் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. அத்துடன் விவசாயிகள் பயன்பெறும் வகையில் தடையில்லா மும்முனை மின்சாரம் நாளொன்றுக்கு 18 மணிநேரம் வழங்கப்படும். எனவே, டெல்டா மற்றும் டெல்டா அல்லாத மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் குறுவை சிறப்புத் தொகுப்புத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உதவிகளைப் பெற்றுப் பயனடையுமாறு முதலமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+