வன்னியரும் தலித் மக்களும் ஒன்று சேரணும்..சேர விடாமல் சதி நடக்கிறது! மேடையில் முழங்கிய ஆம்ஸ்ட்ராங்
சென்னை: சென்னையில் படுகொலை செய்யப்பட்டிருக்கும் தமிழக பகுஜன் சமாஜ் கட்சி தலைவரும் வழக்கறிஞருமான ஆம்ஸ்ட்ராங் மறைவுக்கு பல அரசியல் கட்சி தலைவர்களும் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் வன்னியர்-தலித் மக்கள் ஒற்றுமைக்காக அவர் பல ஆண்டுகளுக்கு முன்பே குரல் கொடுத்தவர் என அவர் பேசிய வீடியோ ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவரான ஆம்ஸ்ட்ராங், நேற்று பெரம்பூர் பகுதியில் தான் வசிக்கும் வீட்டு அருகே இருந்தபோது படுகொலை செய்யப்பட்டார். மூன்று இருசக்கர வாகனங்கள் வந்த ஆறு பேர் கொண்ட மர்ம கும்பல் அவரை சரமாரியாக வெட்டி சாய்த்தது.

ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். ஒரு தேசிய கட்சியின் மாநில தலைவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் சென்னை மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதனையடுத்து ஆம்ஸ்ட்ராங்க் கொலை சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் இந்த கொலை சம்பவம் தொடர்பாக எட்டு பேர் அண்ணா நகர் காவல் நிலையத்தில் சரணடைந்திருக்கின்றனர். தற்போது ஆம்ஸ்ட்ராங்கின் கொலை சம்பவத்தை அடுத்து பெரம்பூர், செம்பியம் உள்ளிட்ட பல பகுதிகளில் பதற்றம் நிலவுவதால் அங்கு போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் வன்னியர்-தலித் மக்கள் ஒற்றுமைக்காக அவர் பல ஆண்டுகளுக்கு முன்பே குரல் கொடுத்தவர் என அவர் பேசிய வீடியோ ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது. தமிழகம் முழுவதும் அறியப்படாத தலைவராக இருந்தாலும் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட வட மாவட்டங்களில் நன்கு அறியப்பட்ட நபராக ஆம்ஸ்ட்ராங் இருந்திருக்கிறார். குறிப்பாக சட்டக்கல்லூரி மாணவர்களுக்காகவும் அப்பகுதி தலித் மக்களுக்காகவும் நிறைய போராட்டங்களை முன்னெடுத்துச் சென்றிருப்பவர்.
அதே நேரத்தில் தலித் அரசியல்வாதி என்பதற்காக மற்ற சாதி தலைவர்களையோ சமுதாய தலைவர்களையோ விமர்சிக்காமல் அனைவருடனும் இணக்கமாகவே இருந்தார். குறிப்பாக தமிழகத்தில் நிகழும் சாதி அரசியலுக்கு எதிரானவராக ஆம்ஸ்ட்ராங் அறியப்படுகிறார். குறிப்பாக வட மாவட்டங்களில் வன்னியர்கள் தலித் மக்கள் இடையேயான மோதல் போக்குக்கு முடிவு கட்டும் வகையில் பல மேடைகளில் அவர் பேசியிருக்கிறார்.
இப்போது ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டிருக்கும் நிலையில் அவர் பேசிய பழைய வீடியோ ஒன்றை சமூக வலைதளங்களில் ட்ரெண்டாக்கி வருகின்றனர் அவரது ஆதரவாளர்கள். அது மட்டுமல்லாமல் பாமகவினரும் ஆம்ஸ்ட்ராங் மறைவுக்கு சமூகவலை தளங்களில் இரங்கல் தெரிவித்து வருவதோடு தலித் மக்களும் வன்னியர்களும் ஒன்றாக சேர வேண்டும் என குரல் கொடுத்தவர் ஆம்ஸ்ட்ராங் என புகழாரம் சூட்டி வருகின்றனர். இது தொடர்பாக அவர்கள் வீடியோ ஒன்றையும் பதிவிட்டு இருக்கின்றனர். அந்த வீடியோ பல ஆண்டுகளுக்கு முன்பே எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
அந்த வீடியோவில் பேசும் ஆம்ஸ்ட்ராங்,”வடமாவட்டங்களில் பல பகுதிகளில் வன்னியர்களும் தலித் மக்களும் சம அளவில் வசிக்கின்றனர். கும்மிடிப்பூண்டியில் 46 சதவீதம் தலித் மக்கள் என்றால் வன்னியர்கள் 36 சதவீதம் வசிக்கின்றனர். பல தொகுதிகளில் இருவரும் சரிசமமான அளவில் வசிக்கின்றனர். வாக்குப்பெட்டியை பொருத்தவரை கிட்டத்தட்ட 45 சதவீதத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் வன்னியர்கள் தலித் மக்களின் வாக்குகளாக இருக்கிறது.
ஆனால் இவர்கள் ஒன்று சேர்ந்தால் அரசியல் புரட்சி ஏற்பட்டுவிடும் என்பதற்காக திட்டமிட்டு சதி நடக்கிறது. இருவரையும் எதிர் போல வைத்துக் கொள்ள வேண்டும் என பல கட்சிகள் அரசியல் செய்து வருகின்றன. இந்த அரசியலுக்கு முடிவு கட்டும் போது தான் தமிழின் ஆதி குடிகள் அதிகாரத்திற்கு வர முடியும்" என பேசியிருக்கிறார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.












Click it and Unblock the Notifications