சுப்ரஜா கொடுத்த ‘நன்றி பரிசு’.. அடடே.. அசந்துபோன முதல்வர் ஸ்டாலின்.. மாணவிக்கு பாராட்டு!
சென்னை : பெண்களுக்கான இலவச பேருந்து பயணச்சீட்டுகளைக் கொண்டு முதலமைச்சர் ஸ்டாலினின் உருவப் படத்தினை வரைந்த மாணவி சுப்ரஜா, அதனை முதல்வர் ஸ்டாலினிடம் காட்டி அவரை அசத்தினார்.
பெண்களுக்கு அரசுப் பேருந்துகளில் இலவச பயண திட்டம் தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் லட்சக்கணக்கான பெண்கள் பயனடைந்து வருகின்றனர்.
இந்நிலையில், மாணவி சுப்ரஜா, பெண்களுக்கான இலவச பேருந்து பயணச்சீட்டுகளைக் கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் படத்தை வரைந்து ட்விட்டரில் வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில், மாணவி சுப்ரஜா, முதல்வர் ஸ்டாலினை இன்று நேரில் சந்தித்து தான் வரைந்த புகைப்படத்தை அவரிடம் காண்பித்து வாழ்த்து பெற்றார்.

ஸ்டாலினின் முதல் கையெழுத்து
திமுகவின் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், தமிழக முதல்வராக கடந்த ஆண்டு மே மாதம் 7அம் தேதி பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலின், ஆட்சிப் பொறுப்புக்கு வந்த அன்றே நகரப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என்ற திட்டத்தைச் செயல்படுத்த கையெழுத்திட்டார். தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழகக் கட்டுப்பாட்டில் இயங்கும் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் பயணம் செய்யும் பெண்களுக்கு இலவச பயணத் திட்டம் 2021 மே 8ஆம் தேதி முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

பெண்கள் அமோக வரவேற்பு
பெண்களைத் தொடர்ந்து திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவரது உதவியாளர்களும் நகரப் பேருந்துகளில் கட்டணமின்றி பயணிக்கலாம் என இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டது. முதல்வர் ஸ்டாலினின் இந்த சீரிய திட்டத்தால் பல லட்சக்கணக்கான பெண்கள் நாள்தோறும் பயன்பெற்று வருகின்றனர். இத்திட்டம் பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. பயணம் இலவசம் என்றாலும் எந்தெந்த வழித்தடத்தில், எந்தெந்த பிரிவில் எவ்வளவு பேர் பயணித்தனர் என்ற புள்ளி விவரத்திற்காக கட்டணமில்லா பேருந்துச் சீட்டு வழங்கப்பட்டு வருகிறது.

கட்டணமில்லா டிக்கெட்
தான் நகரப் பேருந்துகளில் பயணிக்கும்போது வழங்கப்பட்ட டிக்கெட்களை சேகரித்து வந்த சுப்ரஜா சரவணன் என்ற மாணவி அந்த டிக்கெட்களை வைத்தே ஸ்டாலின் ஓவியத்தை வரைந்தார். மிகச்சிறிய பொருட்களில் ஓவியங்கள் வரையும் மைக்ரோ ஆர்ட்டிஸ்ட்டான சுப்ரஜா, இலவச பயணச்சீட்டுகளை கொண்டு ஸ்டாலின் உருவத்தை வரைந்த காட்சியை வீடியோவாகப் பதிவு செய்து ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

முதல்வரை சந்தித்த சுப்ரஜா
இந்நிலையில், இன்று சென்னை கலைவாணர் அரங்கத்தில், மாணவி சுப்ரஜா, பெண்களுக்கான இலவச பேருந்து பயணச்சீட்டுகளைக் கொண்டு வரைந்த முதலமைச்சர் ஸ்டாலின் உருவப் படத்தினை முதலமைச்சர் ஸ்டாலினிடமே சென்று காண்பித்தார். இலவச பயணச்சீட்டுகளைக் கொண்டே வரைந்தது பற்றி முதல்வர் ஸ்டாலினிடம் விளக்கினார் சுப்ரஜா.

பாராட்டிய ஸ்டாலின்
தான் செயல்படுத்தி வரும் திட்டமான 'மகளிருக்கு இலவச பயணம்' இலவச டிக்கெட்களின் மூலம் உருவாக்கப்பட்ட அந்த ஓவியத்தை வியந்து பார்த்தார் முதல்வர் ஸ்டாலின். இதையடுத்து இலவச பயண டிக்கெட்களைக் கொண்டே தனது ஓவியத்தை வரைந்து தனக்கு 'நன்றிப் பரிசாக' அளித்த மாணவி சுப்ரஜாவை மகிழ்ச்சியோடு பாராட்டி வாழ்த்தினார் முதல்வர் ஸ்டாலின்.












Click it and Unblock the Notifications