"எடப்பாடிக்கு இது வெற்றியே கிடையாதுங்க.." நீதிமன்ற தீர்ப்பு நகலுடன் புட்டு புட்டு வைத்த புகழேந்தி!
உச்ச நீதிமன்ற தீர்ப்பில் பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் குறித்து எங்கேயுமே சொல்லவில்லை. எல்லாமே எடப்பாடியிடம் போய்விட்டது என்று சொல்வது தவறானது என்று புகழேந்தி தெரிவித்துள்ளார்.
சென்னை: நீதிமன்ற தீர்ப்பு நகல் கிடைத்துள்ளது. உச்ச நீதிமன்ற தீர்ப்பில் பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் குறித்து எங்கேயுமே சொல்லவில்லை என்றும் எல்லாமே எடப்பாடியிடம் போய்விட்டது என்று சொல்வது தவறானது என்றும் ஓ பன்னீர் செல்வம் ஆதரவாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுக்குழு வழக்கில் பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் உச்ச நீதிமன்றம் நேற்று தீர்ப்பு அளித்தது. கடந்த ஜூலை 11 ஆம் தேதி கூட்டிய பொதுக்குழு செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பினை வழங்கியது.
உச்ச நீதிமன்ற தீர்ப்பு எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமிக்கு இது வெற்றியே கிடையாது என்று ஓ பன்னீர் செல்வம் ஆதரவாளர் புகழேந்தி கூறியுள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பின் போது புகழேந்தி கூறியதாவது:-

விளையாட்டுத்தனமாக பேசவில்லை
உச்ச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்கிறேன். அதே நேரத்தில் தீர்ப்பின் முழு நகல் கைக்கு வரும் வரை நான் எதுவும் சொல்லவில்லை என்று சொல்லியிருந்தேன். நீதிமன்ற தீர்ப்பு நகல் கிடைத்துள்ளது. உச்ச நீதிமன்ற தீர்ப்பில் பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் குறித்து எங்கேயுமே சொல்லவில்லை. யார் வேண்டும் என்றாலும் என்னுடன் விவாதம் நடத்த வரலாம். நான் விளையாட்டுத்தனமாக பேசிக்கொண்டு இல்லை. ஒரு இடத்தில் தீர்மானம் பற்றி எதுவும் சொல்லாத நீதிபதிகள் இது குறித்த முடிவை சிவில் வழக்கில் பார்த்து கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டனர்.

விவாதிக்க தயராக இருக்கிறேன்
சிவில் வழக்கு எங்கு நிலுவையில் இருக்கோ அங்கு போய் பாருங்க..என்று சொல்லப்பட்டுள்ளது. பொதுக்குழு நடந்தது சரி என்று மட்டுமே உச்ச நீதிமன்ற தீர்ப்பு சொல்லியிருக்கிறது. தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்தது என எதையுமே உச்ச நீதிமன்றம் ஒப்புக்கொள்ளவில்லை. யார் வேண்டும் என்றாலும் வரட்டும். நான் விவாதிக்க தயராக இருக்கிறேன்.

வழக்கு போட முடியும்
அதிமுகவில் உள்ள எந்த ஒரு தொண்டனும் வழக்கு போடலாம். பொதுச்செயலாளராக ஜெயலலிதா வகித்த பதவியை வகிக்க விட மாட்டோம் என்று வழக்கு போட முடியும். நானும் வழக்கு தொடுக்க உள்ளேன். ஓபிஎஸ் தனியாகிவிட்டார். தோற்று விட்டார். ஒன்னுமே இல்லை. எல்லாமே எடப்பாடியிடம் போய்விட்டது என்று சொல்வது தவறானது ஆகும். சில கட்சிகளின் தலைவர்கள்.. நான் ஓபனாகவே சொல்கிறேன். திருமாவளவன் கூட வாழ்த்து தெரிவித்து மெசேஜ் போடுகிறார். எனக்கு மிகவும் அதிர்ச்சியாகவும் ஆச்சர்யமாகவும் இருந்தது.

2-வது இடத்திற்காக போராட்டம்
ஜிகே வாசனை விடுங்க.. அவர் கூட்டணியில் இருக்கிறார்.. எதையுமே தெரிந்து கொள்ளாமல்.. என்ன தீர்ப்பு என்று புரிந்து கொள்ளாமல்.. அதை எடுத்து பெருசு பண்ணி எல்லாத்தையும் ஜெயித்த மாதிரி சொல்கிறார்கள். ஈரோட்டில் என்ன நடக்கிறது என்று எனக்குத்தான் தெரியும். அங்கு பணமழை பொழியுது. அது எல்லாருக்கும் தெரியும். ஈரோடு கிழக்கு தொகுதியில் 2-வது இடத்திற்காக பழனிசாமி போராடுகிறார். சீமானுக்கும் அவருக்கும் இடையேதான் 2-வது இடத்திற்காக போராட்டம் நடக்கிறது. தீய சக்தியிடம் இரட்டை இலை கிடைத்துவிட்டது.

நீதிபதிகள் எங்கேயுமே சொல்லவில்லை
தொடர் தோல்விகளை சந்தித்தது. நகராட்சி மாநகராட்சி பேரூராட்சி எல்லாவற்றிலும். ஆட்சி போனது. ஒரு இடத்தில் மட்டும் எம்.பியில் வெற்றி பெற முடிந்தது. மிகக்குறைந்த வாக்குகளை இபிஎஸ் பெறுவதை 2 ஆம் தேதி காண முடியும். தீர்ப்பு ஒன்னும் வேலைக்கு ஆகாது. வேலைக்கு ஆகாது என்றால் இந்த தீர்ப்பால் பொதுக்குழு செல்லும், அவ்வளவுதானே தவிர வேறு எந்த உரிமையையும் இந்த தீர்ப்பு கொடுக்கவில்லை. தீர்மானங்களை பற்றி நீதிபதிகள் எங்கேயுமே சொல்லவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications