கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் கிடைத்ததுமே.. பூரித்த முதல்வர் முக ஸ்டாலின்.. கொடுத்த ரியாக்ஷன்!
சென்னை: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கிய உச்ச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்கிறேன். அரவிந்த் கெஜ்ரிவாலின் விடுதலை, நீதியை அடையாளப்படுத்துவது மட்டும் இன்றி நமது இந்திய கூட்டமைப்பை பலப்படுத்துகிறது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறையால் கடந்த மாதம் 21 ஆம் தேதி கைது செய்யப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் அளித்தது. தேர்தல் காலம் என்பதால் பிரசாரம் செய்ய ஏதுவாக ஜூன் 01 ஆம் தேதி வரை உச்ச நீதிமன்றம் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் அளித்தது.

இந்த நிலையில், டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கிய உச்ச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்கிறேன் என்று முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முதல்வர் முக ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது: -
அநீதிக்கு எதிரான இந்த வெற்றி நமது ஜனநாயகத்தை வலுப்படுத்தும். டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளருமான கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கிய உச்ச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்கிறேன். அரவிந்த் கெஜ்ரிவாலின் விடுதலை, நீதியை அடையாளப்படுத்துவது மட்டும் இன்றி நமது இந்திய கூட்டமைப்பை பலப்படுத்துகிறது. இது தேர்தல்களில் வெற்றி பெறுவதற்கான நமது வேகத்தை உயர்த்துகிறது" என்று பதிவிட்டுள்ளார்.
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கடந்த மார்ச் 21- ஆம் தேதி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். அவர் டெல்லி திகார் சிறையில் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளார். தான் கைது செய்யப்பட்டதை எதிர்த்து அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
அம்மனு, நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, திபங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நிலுவையில் உள்ளது. தேர்தல் பிரசாரம் செய்வதற்காக அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் அளிப்பது குறித்து பரிசீலிப்பதாக நீதிபதிகள் கூறினர். இதற்கு அமலாக்கத்துறை கடும் எதிர்ப்பு தெரிவித்தது. நேற்று இது தொடர்பாக அமலாக்கத்துறை 44 பக்கங்கள் கொண்ட பிரமாண பத்திரத்தை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.
அதில், எத்தனையோ அரசியல்வாதிகள், சிறையில் இருந்துகொண்டே தேர்தலில் போட்டியிட்ட முன்னுதாரணங்கள் இருக்கின்றன. சிலர் வெற்றியும் பெற்றுள்ளனர். ஆனால், தேர்தல் பிரசாரம் செய்வதற்காக எந்த அரசியல்வாதிக்கும் ஜாமீன் அளிக்கப்பட்டது இல்லை. அவர் வேட்பாளராக இருந்தாலும்கூட ஜாமீன் கொடுக்கப்பட்டது இல்லை. எனவே கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் அளிக்க கூடாது என்று கூறியிருந்தது.












Click it and Unblock the Notifications