ஆளுநர் என்னதான் செய்கிறார்? 3வது முறையாக RN ரவியை கண்டித்த சுப்ரீம் கோர்ட்.. ஏற்கனவே என்ன நடந்தது?
சென்னை: 3வது முறையாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை கடுமையாக கண்டித்துள்ளது உச்ச நீதிமன்றம். இதற்கு முன்பு என்ன நடந்தது என்பதைப் பார்க்கலாம்.
பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் ஆளுநர்களுக்கும் அம்மாநில அரசுகளுக்கும் இடையே மோதல் அதிகரித்துள்ளது. மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர்கள் நீண்ட காலம் கிடப்பில் போடுவதாக எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் குற்றம்சாட்டி வருகின்றன. தமிழ்நாட்டில் ஆளுநர் - தமிழக அரசு இடையேயான மோதல் உச்சம் பெற்றுள்ளது.

ஆளுநர் ரவி - தமிழக அரசு மோதல் போக்கு: சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்க மறுத்து கிடப்பில் போட்டுள்ளதாகவும், ஆளுநர் ஒப்புதல் அளிக்க கால வரம்பு நிர்ணயம்செய்யக் கோரியும் தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு விசாரணை, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட் தலைமையிலான அமர்வு முன்பு நடைபெற்றது.
அப்போது, தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, நவம்பர் 13-ம் தேதி ஆளுநர் மசோதாக்களை திருப்பி அனுப்பியதாகவும், 18ஆம் தேதி அது மீண்டும் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்ப வைக்கப்பட்டதாகவும், விசாரணைக்கு ஒரு நாள் முன்னதாக 10 மசோதாக்கள் ஜனாதிபதியிடம் அனுப்பப்பட்டுள்ளதாக அரசுக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும் தெரிவித்தார். இது அரசியல் சாசனத்திற்கு புறம்பானது என்றும் அவர் வாதிட்டார்.
ஆளுநருக்கு அதிகாரம் இல்லை: இதையடுத்து, ஆளுநருக்கு அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பியது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு. முதல் முறை மசோதா ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டபோதே குடியரசுத் தலைவருக்கு அனுப்பி இருக்கலாம். மசோதாக்களை ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் வைத்து விட்டு பின்னர் சட்டமன்றத்துக்கு அனுப்பி, அது மீண்டும் நிறைவேற்றப்பட்ட பிறகு குடியரசு தலைவருக்கு அனுப்ப வேண்டிய தேவை என்ன?
மக்கள் பிரதிநிதிகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட குடியரசுத் தலைவருக்கான அதிகாரங்கள் விரிவானது. ஆனால், ஆளுநர் மத்திய அரசின் நாமினி மட்டுமே. அதை ஆளுநர் புரிந்து கொள்ள வேண்டும். சட்டத்தை செயலிழக்கச் செய்யவோ, முடக்கி வைக்கவோ ஆளுநருக்கு அதிகாரம் இல்லை" என சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் திட்டவட்டமாக தெரிவித்தனர்.
3 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தார் ஆளுநர்?: மேலும், தமிழக அரசு இந்த மசோதாக்களை கடந்த2020-ல் ஆளுநருக்கு அனுப்பியுள்ளது. அப்படியென்றால், இந்த மசோதாக்களை கிடப்பில் போட்டு ஆளுநர் 3 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தார். மாநில அரசுகள் உச்ச நீதிமன்றத்தை நாடும் வரை ஆளுநர்கள் எதற்காக காத்திருக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் கடுமையாக கண்டனம் தெரிவித்தது.
தொடர்ந்து, அடுத்தகட்ட விசாரணையின்போது, ஆளுநர் தரப்பில் இருந்து சில முன்னேற்றங்களை எதிர்பார்க்கிறோம். எல்லாவற்றையும் நீதிமன்றமே சொல்லிக் கொண்டிருக்க முடியாது. முதல்வரும், ஆளுநரும் சந்தித்துப்பேசி இந்த பிரச்சினைகளை முடிவுக்கு கொண்டு வர வேண்டும், ஆளுநர் தீர்வு காண வேண்டும், இல்லையென்றால் நாங்கள் உத்தரவு பிறப்பிக்க நேரிடும் என உச்ச நீதிமன்றம் ஆளுநருக்கு அறிவுறுத்தியது.
மீண்டும் சுப்ரீம் கோர்ட் கண்டனம்: இந்த நிலையில் தான், பொன்முடி விவகாரத்திலும் கடுமையாக ஆளுநர் ஆர் என் ரவியை விளாசியுள்ளது உச்ச நீதிமன்றம். பொன்முடிக்கு அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைக்க மறுப்பு தெரிவிப்பதாக ஆளுநர் ரவிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடுத்தது. தமிழக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு இணையாக ஆட்சி நடத்த ஆளுநர் ரவி முயற்சிக்கிறார். அரசியல் சாசனத்தில் 164 (1) பிரிவை ஆளுநர் ரவி அப்பட்டமாக மீறுகிறார் என தமிழக அரசு தெரிவித்தது.
இந்த வழக்கு விசாரணை இன்று நடைபெற்றபோது சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு, "ஆளுநர் என்ன செய்து கொண்டிருக்கிறார்? தமிழக ஆளுநரின் செயல்பாடு குறித்து நாங்கள் தீவிர கவலை கொண்டுள்ளோம். ஆளுநர் ரவி உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மீறியுள்ளார். பதவிப் பிரமாணம் செய்து வைக்க முடியாது என்று சொல்வது அவருடைய வேலை அல்ல.
என்ன உத்தரவு வரும்னு இப்போ சொல்லமாட்டோம்: உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்த பிறகும் பொன்முடிக்கு பதவியேற்பு நடத்தி வைக்க ஆளுநர் மறுப்பது ஏன்? நீதிமன்ற உத்தரவை மீறி பதவிப் பிரமாணம் செய்து வைக்க முடியாது என எப்படி கூறமுடியும். இந்த விவகாரத்தை உச்ச நீதிமன்றம் சாதாரணமாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆளுநர் மீது நடவடிக்கை எடுக்க நேரிடும்.
நாங்கள் கண்ணை மூடிக்கொண்டு இருக்கவில்லை. ஆளுநரின் செயல் அரசியல் சாசனத்துக்கு எதிரானது. அரசியல் சாசனத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் ஆளுநர் ரவி தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். ஆளுநருக்கு அறிவுரை சொல்பவர்கள் தகுந்த அறிவுரைகளை சொல்வதில்லை. அரசியல் சாசனப்படி ஆளுநர் செயல்படுகிறாரா என்பதை நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
பொன்முடிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைப்பது குறித்து பதிலளிக்க ஆளுநர் ரவிக்கு நாளை வரை அவகாசம். இல்லையென்றால், நாங்கள் என்ன உத்தரவிடுவோம் என்பதை இப்போது சொல்லப் போவதில்லை. ஆளுநரிடம் விளக்கம் கேட்டு மத்திய அரசு நிதிமன்றத்தில் பதிலளிக்க வேண்டும்" என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு ஆளுநருக்கு எதிராக கடுமையாகத் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications