அதிமுக பொதுக்குழு கூட்டம்.. ஓபிஎஸ் மேல்முறையீட்டு மனுவை ஜூலை 28இல் விசாரிக்கும் சுப்ரீம் கோர்ட்!
சென்னை: அதிமுக பொதுக்குழு தொடர்பான ஓபிஎஸின் மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் வரும் ஜூலை 28இல் விசாரிக்க உள்ளது.

அதிமுகவின் உட்கட்சி விவகாரம் தான் கடந்த சில வாரங்களாகவே பெரும் பேசுபொருளாகி உள்ளது. ஒற்றை தலைமை தொடர்பான விவாதம் இன்னும் ஓய்ந்தபாடு இல்லை.
கடந்த மாதம் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவிலேயே ஒற்றை தலைமை குறித்த தீர்மானம் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
இருப்பினும், கடைசி நேரத்தில் ஒற்றை தலைமை குறித்த தீர்மானம் கொண்டுவரப்படவில்லை. இதையடுத்து இந்த மாதம் ஜூலை 11ஆம் தேதி அதிமுக பொதுக்குழு நடத்தப்பட்டது.
இதற்கிடையே இந்த பொதுக்குழுக் கூட்டத்திற்குத் தடை கோரி ஓபிஎஸ் தரப்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதற்குத் தடை விதிக்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.
சட்ட விதிகளுக்குட்பட்டு பொதுக்குழுவை நடத்தவில்லை என்றால் உச்சநீதிமன்றம் தான் அந்த உத்தரவின் பாதுகாவலர் என்ற அடிப்படையில் பரிசீலிக்க முடியுமே தவிர உயர் நீதிமன்றம் அல்ல என்றும் நீதிபதி தெரிவித்தார்.
இதையடுத்து ஓ. பன்னீர்செல்வம் சார்பில் இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் சட்ட விதிகள் மீறப்பட்டு இருந்ததாகத் தனது மனுவில் ஓபிஎஸ் கூறி இருந்தார்.
இந்தச் சூழலில் இந்த மேல்முறையீட்டு மனுவை வரும் ஜூலை 28ஆம் தேதி உச்ச நீதிமன்றம் விசாரிக்கிறது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா தலைமையிலான அமர்வு ஓபிஎஸ் மனுவை விசாரிக்க உள்ளது.












Click it and Unblock the Notifications