ஆளுநர் அதிர்ச்சி அடையும் அளவுக்கு உச்சநீதிமன்றம் பயன்படுத்திய அதிகாரம்!பேரறிவாளன் வழக்கிலும் இதேதான்
சென்னை: பேரறிவாளன் வழக்கில் சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்திய உச்சநீதிமன்றம், அதன் பிறகு தற்போது ஆளுநர் வழக்கில் அது போன்ற சிறப்பு அதிகாரமான 142 சட்டவிதியை பயன்படுத்தி தீர்ப்பளித்துள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 31 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத் தண்டனை அனுபவித்து வந்த பேரறிவாளன் கடந்த 2022 ஆம் ஆண்டு விடுதலை செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

அரசமைப்பு சட்டத்தின் 142ஆவது பிரிவின் கீழ் வழங்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி, அவரது மேல்முறையீட்டு மனு மீது உச்சநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி, ஜெயக்குமார், ராபர்ட் பயஸ், ரவிசந்திரன் ஆகிய 7 பேர் சிறைத் தண்டனை அனுபவித்து வந்தனர்.
31 ஆண்டுகள்
31 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்த பேரறிவாளன் தன்னை விடுவிக்குமாறு உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் நீதிபதி எல்.நாகேஸ்வரராவ் தலைமையிலான நீதிபதிகள் பி.ஆர்.கவாய், ஏ.எஸ்.போபண்ணா ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பு அளித்தனர்.
பேரறிவாளன்
இந்த விவகாரத்திலும் பேரறிவாளனை விடுதலை செய்ய தமிழக அமைச்சரவை 2018ஆம் ஆண்டு ஆளுநருக்கு பரிந்துரை செய்தும் அதை இரண்டரை ஆண்டுகள் முடிவெடுக்காமல் இருந்தார். இந்த தாமதம் ஏன் என்பதே உச்சநீதிமன்றம் விசாரிக்கத் தொடங்கியதும் தான் தெரியவந்தது.
குடியரசுத் தலைவர்
அதாவது இந்த மசோதாவை குடியரசுத் தலைவர் பரிந்துரைக்கு ஆளுநர் அனுப்பிவைத்திருந்தாராம். இந்த விஷயங்களை கவனத்தில் கொண்டு அரசமைப்புச் சட்டத்தின் 142 ஆவது பிரிவின் கீழ் எங்களுக்கு உள்ள அதிகாரத்தை பயன்படுத்தி பேரறிவாளனை விடுதலை செய்வதாக அறிவித்தனர்.
142 சட்டம்
இந்த வழக்கிற்கு பிறகு சிறப்பு அதிகாரமான 142 ஐ உச்சநீதிமன்றம் ஆளுநர் வழக்கில் பயன்படுத்தியுள்ளது. தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. தமிழக சட்டபையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் கிடப்பில் போடுவது , துணை வேந்தர்கள் நியமனத்தில் குறுக்கீடு உள்ளிட்டவைகளை முன்வைத்து இந்த வழக்கு தொடரப்பட்டது.
தீர்ப்பு
இதன் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது. நீதிபதிகள் பர்திவாலா, மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்தது. அப்போது மாநில சட்டசபையில் நிறைவேற்றும் மசோதாக்களை ஆளுநர் திருப்பி அனுப்பினால் மசோதாவை மீண்டும் சட்டசபையில் நிறைவேற்றி ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பும் போது குடியரசுத் தலைவரக்கு அனுப்ப அதிகாரம் இருக்கிறதா? மாநில அரசின் அதிகாரத்தின் அதிகாரத்திற்கு அப்பாற்பட்ட மசோதாக்களை மட்டுமே அனுப்ப முடியுமா?
10 மசோதாக்கள்
அனைத்து மசோதாக்களையும் ஜனாதிபதிக்கு பரிந்துரைக்க இயலுமா? உள்ளிட்ட கேள்விகளை நீதிபதிகள் எழுப்பினர். மேலும் ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயல்பாடுகள் நேர்மையானதாக இல்லை. அரசியல் சாசனத்திற்கு விரோதமானது. தமிழக அரசின் 10 மசோதாக்களை நிறுத்தி வைத்து குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பி வைத்தது சட்டவிரோதம் என தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவியை பதவி நீக்கக் கோரி ஆங்காங்கே எதிர்ப்புகள் எழுந்துள்ளன. அவராகவே பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. திராவிடர் கழக தலைவர் வீரமணியும், ஆளுநர் பதவி விலக வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். அது போல் ஆளுநர் பதவி விலகக் கோரி இன்று மாலை 5 மணிக்கு பெரியார் படிப்பகம் அருகே அனைத்து கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.












Click it and Unblock the Notifications