வெறும் 6 நிமிஷம்.. பொசுக்குனு சர்ப்ரைஸ்.. அடுத்தடுத்த மகிழ்ச்சி.. 100% வாக்குப்பதிவை நோக்கி தமிழகம்
சென்னை: இன்று வாக்குப்பதிவு தினம் என்பதால், அனைவருமே கட்டாயம் ஓட்டுப்போட வேண்டும் என்பதற்காக பொது போக்குவரத்தில் பல்வேறு அதிரடிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மக்களவை தேர்தல் இன்று ஏப்ரல் 19-ந்தேதி முதல் ஜுன் 1-ந்தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது. தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடந்து கொண்டிருக்கிறது.

வாக்குப்பதிவு: 100 சதவீத வாக்குப்பதிவினை வலியுறுத்தி, மாநிலம் முழுவதும் பல்வேறு சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை தேர்தல் ஆணையமும், மாவட்ட நிர்வாகமும், சமூக ஆர்வலர்களும் மேற்கொண்டனர். அதேபோல, இந்த தேர்தலில் அனைவருமே வாக்களிக்க வேண்டும் என்பதற்காக, சிறப்பு ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையமும், தமிழக அரசும் செய்து வருகிறது..
குறிப்பாக, மூத்த குடிமக்கள், மாற்று திறனாளிகள் வாக்களிக்கும் வகையிலும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.. மூத்த குடிமக்கள், கண்பார்வை குறைபாடு மற்றும் உடலியக்க குறைபாடு கொண்டவர்களுக்கு பொதுபோக்குவரத்தில் இலவச பயணச்சீட்டு வழங்கப்பட்டு வருகிறது.. அதன்படி, இவர்கள் அனைவரும் வாக்களிப்பதற்காக, சாதாரண அரசு நகர சேவை பஸ்களில் இன்று இலவச பயணச்சீட்டில் பயணிக்கலாம்.
சிறப்பு பஸ்கள்: அதேபோல, வாக்களிக்க வெளி ஊர்களுக்கு செல்வோருக்கு வசதியாக சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன.. மற்றொருபக்கம், சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன.
குறிப்பாக சென்னை தாம்பரம் - நெல்லை இடையே நேற்றிரவு 9.50 மணிக்கு சிறப்பு ரயில் (06007), மறுமார்க்கமாக 7 மணிக்கு நெல்லையில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுவதாகவும், பொதுமக்கள் அனைவரும் இந்த வசதியை பயன்படுத்தி கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்றும் தென்னக ரயில்வே அறிவிப்பு வெளியிட்டிருந்தது..
மெட்ரோ: அதேபோல, மெட்ரோ ரயிலும் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.. இன்று சென்னையில் மெட்ரோ ரெயில்கள், இன்று வெள்ளிக்கிழமை அட்டவணை இல்லாமல், நாளை சனிக்கிழமை அட்டவணைப்படி இயக்கப்படும் என்று மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அதன்படி, "நெரிசல் மிகு நேரமான காலை 8 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5மணி முதல் இரவு 8 மணி வரையிலும் 6 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். அதிகாலை 5 மணி முதல் காலை 8 மணி வரையிலும், காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். இரவு 10 முதல் 11 மணி வரை மெட்ரோ ரயில்கள் 15 நிமிட இடைவெளியில் ரயில்கள் இயக்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications