60,000 ஏக்கர் நிலம்.. வாடகைக்கு விடுகிறது ரயில்வே.. ரயில்வே ஸ்டேஷன் கிட்டயே விசால இடம் ரெடி! சூப்பர்
சென்னை : பொதுமக்களின் நன்மைக்காகவும், வசதிக்காகவும், ரயில்வே எத்தனையோ வகையான அறிவிப்புகளை, சலுகைகளை செய்து தந்து வருகிறது. அதேசமயம், தெற்கு ரயில்வேயின் வருமானத்தை பெருக்குவதற்கான பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.. அந்தவகையில், இப்போதும் ஒரு புதுவிதமான முயற்சி மேற்கொள்ளப்பட உள்ளன. இதுகுறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் சொல்வது என்ன? 60 ஆயிரம் ஏக்கர் காலி நிலங்களில் என்ன செய்ய போகிறது? இதுகுறித்து சுருக்கமாக இங்கே பார்ப்போம்.
ரயில்வே துறைக்கு வருமானம் ஈட்டவேண்டுமானால், ரயில் பயணிகளின் கட்டணத்தை உயர்த்துவது வழக்கமான நடைமுறையாகும்.. ஆனால், சமீபகாலமாகவே கட்டணம் உயர்த்தப்படவில்லை..

ரயில் பயணிகளின் கட்டணத்தை உயர்த்தாமல், அதேசமயம் வருவாயையும் ஈட்டுவதற்காக ரயில்வே நிர்வாகம் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. அந்தவகையில், காலி ரயில் பெட்டிகளை உணவகமாக மாற்றி, ரயில் நிலையத்தில் உணவகம் நடத்த திட்டமிடப்பட்டது.. இதையடுத்துதான், சென்னை சென்ட்ரல், பெரம்பூர் மற்றும் பொத்தேரி ஆகிய 3 ரயில்வே ஸ்டேஷன்களில் ரயில் பெட்டி உணவகம் அமைக்க முடிவானது.
60 ஆயிரம் ஏக்கர்
அதேபோல, தெற்கு ரயில்வேயில் 60 ஆயிரம் ஏக்கர் நிலம் காலியாக உள்ளதாக தெரிகிறது.. குறிப்பாக சென்னை, திருச்சி, மதுரை, சேலம், திருவனந்தபுரம் கோட்டங்களுக்கு உட்பட்ட ரயில் நிலையங்கள் அருகே காலியாக உள்ள இடங்களை, வாடகைக்கு விடவும் ரயில்வே திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.
காலியாக உள்ள இடங்களில், நிகழ்ச்சிகள் நடத்த, தனியார் நிறுவனங்கள் மற்றும் பொது மக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.. எனவே, இங்கு திருமணம், பிறந்த நாள், குடும்ப விழாக்கள், பயிற்சி வகுப்புகள், விளையாட்டு போட்டிகள், கலை நிகழ்ச்சிகள், கண்காட்சிகள், இப்படி எதுவேண்டுமானாலும் நடத்தி கொள்ளலாம்.
கட்டணம் அல்லது நீண்ட கால குத்தகை
இதுகுறித்து, தெற்கு ரயில்வே அதிகாரிகள் சொல்லும்போது, "கட்டண உயர்வு தவிர, ரயில்வேயில் மாற்று வழிகளில் வருவாயை பெருக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். அந்த வகையில், சென்னை, திருச்சி, மதுரை, சேலம் உள்ளிட்ட கோட்டங்களில், 150க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்களின் அருகே காலியிடம் உள்ளன.
எனவே, பொது மக்கள் அல்லது தனியார் நிறுவனங்கள், அமைப்புகள் தங்களது நிகழ்ச்சிகள், விழாக்களை நடத்தி கொள்ளலாம். இதற்காக அந்தந்த ரயில் கோட்ட தலைமை அலுவலகத்தை தொடர்பு கொண்டு ரிசர்வ் செய்து கொள்ளலாம்.
சென்னை கோட்டத்தில் 18 ரயில் நிலையங்கள்
சென்னை கோட்டத்தில் விக்கிரவாண்டி, திண்டிவனம், வண்டலுார், பொத்தேரி, சிங்கப்பெருமாள்கோவில், காஞ்சிபுரம், அரக்கோணம், ஜோலார்பேட்டை, கூடுவாஞ்சேரி உட்பட, 18 ரயில் நிலையங்கள் அருகே காலியாக உள்ள இடங்களை, வாடகைக்கு விட தேர்வாகியிருக்கிறது.
காலி இடங்கள் மட்டுமே ரயில்வே தரப்பில் வழங்கப்படும். மற்றபடி, வாடகைக்கு எடுப்போர், அவர்களின் நிகழ்ச்சிகளுக்கு ஏற்றார் போல, அந்த இடத்தை பயன்படுத்தி கொள்ள வேண்டும். நிலத்துக்கான வாடகை அல்லது நீண்ட கால குத்தகை அடிப்படையில், கட்டணம் வசூலிக்கப்படும்... விருப்பமுள்ளவர்கள், சென்னை, திருச்சி, மதுரை, சேலம், திருவனந்தபுரம் கோட்ட தலைமை அலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம்" என்று தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications