"சர்ப்ரைஸ்".. ஆட்டத்தை கலைத்தாடும் "மேலிடம்".. நங்கூரத்தை நச்சுன்னு போட்ட பாஜக.. தாமரை மலர்ந்துடுமோ
தேசிய தூய்மை பணி ஆணையத்தின் தலைவராக தமிழகத்தை சேர்ந்த ம.வெங்கடேசன் நியமிக்கப்பட்டுள்ளார்
சென்னை: தேசிய தூய்மை பணி ஆணையத்தின் தலைவராக தமிழகத்தை சேர்ந்த ம.வெங்கடேசன் 2-வது முறையாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.. இந்த நியமனமானது மிகுந்த கவனத்தை பெற்று வருகிறது.
மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் நேற்றைய தினம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில், தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
தேசிய தூய்மைப் பணியாளர் ஆணையத்தின் தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த ம.வெங்கடேசன், துணைத் தலைவராக ஜெய்ப்பூரை சேர்ந்த அஞ்சனா பன்வார், உறுப்பினராக கேரளாவை சேர்ந்த பி.பி.வாவா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் 2025-ம் ஆண்டு மார்ச் மாதம் 31-ம் தேதி வரை பதவியில் இருப்பார்கள்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

யார் இந்த ம.வெங்கடேசன்?
தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர் ம.வெங்கடேசன்.. சென்னையில் வசித்து வருகிறார். இவர் மிகச்சிறந்த எழுத்தாளர்.. "இந்துத்துவ அம்பேத்கர்", "எம்ஜிஆர் என்கிற இந்து" உள்ளிட்ட பல்வேறு நூல்களை எழுதியுள்ளார். அதேசமயம், இந்துத்துவா சிந்தனையில் திராவிட அரசியலுக்கு எதிராக பல்வேறு நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார்... பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார். கடந்த 2021-ம் ஆண்டு மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் தேசிய தூய்மைப் பணியாளர் ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டவர்.. 2022-ம் ஆண்டு மார்ச் வரை இந்த பதவியில் நீடித்தார்...

ஸ்ட்ராங் நபர்
இப்போது 2-வது முறையாக மறுபடியும் தேசிய தூய்மைப் பணியாளர் ஆணையத்தின் தலைவராக வெங்கடேசன் நியமிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து ம.வெங்கடேசன் சொல்லும்போது, "நான் ஏற்கெனவே ஆணையத்தின் தலைவராக இருந்தபோது 24 மாநிலங்களில் 120 மாவட்டங்களில் பயணம் மேற்கொண்டு ஆய்வு கூட்டம் நடத்தி, தூய்மை பணியாளர்களுக்கான பிரச்சினைகளைத் தீர்க்க நடவடிக்கை எடுத்திருக்கிறேன். அந்த வகையில், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் ஒப்பந்தப் பணியாளர்களுக்கு சரியான நேரத்தில் ஊதியம் வழங்குவது, இஎஸ்ஐ, பிஃஎப், வார விடுமுறை உள்ளிட்ட பிரச்சினைகளில் தீர்வு காண நடவடிக்கை எடுப்பேன். அதன்படி, தூய்மை பணியாளர்களின் உரிமையை பெற்று தர பணிசெய்வேன்" என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

10 தாமரைகள்
அடுத்தடுத்து தமிழ்நாட்டை சேர்ந்தவர்களுக்கு, மேலிட பாஜக மூலம் முக்கிய பொறுப்புகளும், பதவிகளும் கிடைத்து வருவது, பலரது கவனத்தையும் திரும்பி பார்க்க வைத்து வருகிறது.. இதற்கெல்லாம் காரணம், வரப்போகும் எம்பி தேர்தல்தான் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.. வரும் எம்பி தேர்தலில், தமிழகத்தில் எப்படியாவது 10 தாமரைகளை மலர வைத்துவிட வேண்டும் என்பதில் மிக மிக தீவிரம் காட்டி வருகிறது டெல்லி மேலிடம்.. இதற்காக தமிழகத்தின் மிக பிரபலமானவர்களுக்கு பதவிகள் அல்லது பொறுப்புகளை தந்து வருவதையும் தொடர்ச்சியாக செய்து வருகிறது..

ராதாகிருஷ்ணன்
இளையராஜாவுக்கு எம்பி பதவி தரப்பட்டதில் இருந்தே, பாஜக தன்னுடைய கணக்கை ஆரம்பித்துவிட்டதாகவும், அது இப்போது வேகம் எடுத்து வருவதாகவும் சொல்கிறார்கள். அந்தவகையில், தமிழகத்தின் மேற்கு மற்றும் தெற்கு மாவட்டங்களில் உள்ள தொகுதிகளுக்கு பாஜக குறி வைத்துள்ளதாக கூறப்பட்டு வரும்நிலையில், தமிழகத்தை சேர்ந்த பாஜக அபிமானிகளுக்கு பதவிகள் தானாகவே கையில் வந்து விழ துவங்கி உள்ளதாக தெரிகிறது.. சில நாட்களுக்கு முன்புதான், பாஜக மூத்த தலைவராக இருந்த சிபி ராதாகிருஷ்ணனுக்கு ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் பதவி வழங்கப்பட்டது.. இதற்கு பிறகு, நேற்று முன்தினம் குஷ்புவிற்கு, தேசிய பெண்கள் ஆணைய உறுப்பினர் பதவி தரப்பட்டது.. இப்போது, அந்தவரிசையில் ம.வெங்கடேசனுக்கு பதவி வழங்கப்பட்டுள்ளது..

ஹேப்பி பாஜக
தமிழக மக்களிடம் பிரபலமானவர்கள், தமிழக மக்களின் நன்மதிப்பை பெற்றவர்கள் என ஒவ்வொரு துறையிலும் உள்ள பிரபலங்களை, பார்த்து பார்த்து காய்களை நகர்த்தி வருகிறது பாஜக.. தமிழகத்தில் பாஜகவுக்கான அடித்தளத்தை வலுவாக கட்டமைப்பதற்கான முயற்சியாகவே இவையெல்லாம் கருதப்படுகிறது.. இந்த பதவிகள் வழங்கப்படுவதின் பின்னணியில் ஆயிரம் அரசியல் கணக்குகள் சொல்லப்பட்டாலும், நம் தமிழக பிரபலங்கள் தேசிய அளவில் கவனம் பெற்று வருவதும், அடுத்தடுத்த நிலைக்கு அவர்கள் உயர்ந்து செல்வதும், மகிழ்ச்சியை நமக்குள் ஏற்படுத்தி வருவதை மறுக்க முடியாது.. ஆனால், அதேசமயம், பிரபலங்களை குறிவைத்து, அவர்களுக்காக ஒதுக்கப்படும் பதவிகளும், பொறுப்புகளும், வாக்குகளாக பாஜகவுக்கு திரும்ப கிடைக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் நாம் பார்க்க வேண்டும்..!!












Click it and Unblock the Notifications