தேர்தல் அதிகாரியாக இருந்தவர் தலைமை செயலராக நியமனம்.. மே.வ CM சுவேந்து அதிகாரியின் சர்ச்சை நியமனம்
கொல்கத்தா: மேற்கு வங்கத்தின் தேர்தல் அதிகாரியாக பணியாற்றி வந்த மனோஜ் அகர்வாலை அம்மாநிலத்தின் தலைமைச் செயலராக நியமித்துள்ளார் முதலமைச்சர் சுவேந்து அதிகாரி. இவரது பதவிக்காலத்தில்தான் பெரிதும் எதிர்ப்புக்கு உள்ளான எஸ்.ஐ.ஆர் பணிகள் மற்றும் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றுள்ளது.
மேற்கு வங்க சட்டசபைத் தேர்தலில் மொத்தமுள்ள 294 உறுப்பினர்களைக் கொண்ட சட்டப்பேரவையில் 207 இடங்களைக் கைப்பற்றியதன் மூலம், அம்மாநிலத்தில் திரிணாமூல் காங்கிரஸின் 15 ஆண்டுக்கால ஆட்சியை பாஜக முடிவுக்குக் கொண்டுவந்தது. வாக்கு எண்ணிக்கையில் மிகப் பெரும் அளவில் முறைகேடுகள் நடைபெற்றதாகக் குற்றஞ்சாட்டி முதல்வர் பதவியிலிருந்து விலக மாட்டேன் என மமதா பானர்ஜி கூறி வந்தார்.

ஒரு காலத்தில் மேற்குவங்க சட்டப்பேரவையில் பாஜக-வுக்கு 3 எம்எல்ஏக்கள் மட்டுமே இருந்தனர். இந்த எண்ணிக்கை கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 77 எம்எல்ஏக்களாக உயர்ந்தது. தற்போதைய சட்டப்பேரவைத் தேர்தலில் 207 பாஜக எம்எல்ஏக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர்.
பவானிபூர் தொகுதியில் திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜியை எதிர்த்துப் போட்டியிட்டு சுவேந்து அதிகாரி வெற்றி பெற்றார். ஒரு காலத்தில் மம்தாவின் நம்பிக்கைக்குரிய தளபதியாக இருந்த சுவேந்து அதிகாரி, 2020 டிசம்பரில் பாஜகவில் இணைந்தார். கடந்த 2021 தேர்தலில், நந்திகிராம் தொகுதியில் மம்தா பானர்ஜியை வீழ்த்தி தேசிய அரசியலை அதிர வைத்தார். இப்போது திரிணாமூல் காங்கிரஸை வீழ்த்தி ஆட்சியைப் பிடித்துள்ளார்.
இதையடுத்து நேற்று பதவியேற்பு விழா நடைபெற்றது. கொல்கத்தாவின் பிரிகேட் பரேடு மைதானத்தில் நடைபெற்ற இந்த விழாவில் ஆளுநர் ஆர்.என். ரவி அவருக்குப் பதவிப் பிரமாணமும் ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். மேற்கு வங்கத்தில் பாஜக முதன்முறையாக ஆட்சி அமைத்துள்ளது. இதன் மூலம் மேற்கு வங்கத்தில் பாஜகவின் முதல் முதல்வர் என்ற பெருமையை சுவேந்து அதிகாரி பெற்றார்.
மேற்கு வங்க முதல்வராகப் பதவியேற்ற சிறிது நேரத்திலேயே பாஜகவின் மூத்த தலைவரும், அக்கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவருமான திலீப் கோஷ், புதிய அமைச்சரவையில் அமைச்சராகப் பதவியேற்றார். அத்துடன், பாஜக எம்எல்ஏக்களான அக்னிமித்ரா பால், அசோக் கீர்த்தனியா, நிசித் பிரமாணிக் மற்றும் க்ஷுதிராம் துடு ஆகியோரும் அமைச்சர்களாகப் பதவியேற்றனர்.
இந்நிலையில் மேற்கு வங்கத்தின் தேர்தல் அதிகாரியாக பணியாற்றி வந்த மனோஜ் அகர்வாலை அம்மாநிலத்தின் தலைமைச் செயலாளராக நியமித்தார் முதலமைச்சர் சுவேந்து அதிகாரி. இவரது பதவிக்காலத்தில்தான் பெரிதும் எதிர்ப்புக்கு உள்ளான எஸ்.ஐ.ஆர் பணிகள் மற்றும் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. தலைமை தேர்தல் அதிகாரியாகப் பணியாற்றியவரையே தேர்தலுக்குப் பின் தலைமைச் செயலராக நியமித்துள்ளது சர்ச்சையைக் கிளப்பிவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications