தொடையை காட்டி.. பெண் பத்திரிகையாளர்கள் குறித்து ஆபாச சைகை! மீண்டும் சர்ச்சையில் எஸ்வி சேகர்! கண்டனம்
சென்னை: பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் குற்றவாளி என நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்ட பிரபல நகைச்சுவை நடிகரும் முன்னாள் எம்எல்ஏவுமான எஸ்.வி.சேகர் மீண்டும் சர்ச்சையில் சிக்கி இருக்கிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற நாடகத்தில் பெண் பத்திரிகையாளர் போல ஒருவரை நடிக்க வைத்து பத்திரிக்கையாளர்கள் என்றால் ரொம்ப திமிர் பிடித்தவர்கள் என பேசியதோடு, ஆபாசமாகவும் அருவருக்கத்தக்க வகையிலும் சைகை காட்டியதாக புகார் எழுந்துள்ளது. இந்த நிலையில் எஸ்வி சேகர் செயலுக்கு சென்னை பத்திரிக்கையாளர் மன்றம் கண்டனங்களை தெரிவித்துள்ளது.
சின்னத்திரை, சினிமா, நாடகம் என பல ஆண்டுகளாக பிரபல நடிகராக வலம் வருபவர் எஸ்வி சேகர். அதிமுக சார்பாக எம்எல்ஏவாகவும் சட்டசபைக்கு சென்றவர். தொடர்ந்து பாஜகவிலும் பயணித்த அவர் அண்ணாமலையுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக வெளியேறினார். கடந்த சில நாட்களாக திமுக மேடைகளிலும் அவர் பேச்சாளராக பங்கேற்று வருகிறார்.

முன்னதாக கடந்த 201 ஆம் ஆண்டு பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறாக பேசி சர்ச்சையில் சிக்கினார் எஸ்வி சேகர். வழக்கை விசாரித்த நீதிமன்றம் அவருக்கு ஒரு மாத சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது. தற்போது அந்த வழக்கு தொடர்பாக எஸ்வி சேகர் மேல்முறையீடு செய்திருக்கிறார்.
இந்த நிலையில் தான் பெண் பத்திரிக்கையாளர்கள் குறித்து அவதூறாக பேசி மீண்டும் சர்ச்சையில் சிக்கி இருக்கிறார் எஸ்வி சேகர். கடந்த 27ஆம் தேதி சென்னை நாரத கானா சபாவில் நாடகம் ஒன்று நடைபெற்றது. அதில் அரசியல்வாதி கேரக்டரில் எஸ்வி சேகர் நடித்துள்ளார். அப்போது பெண் பத்திரிகையாளர் ஒருவர் அவரிடம் பேட்டி எடுக்க வருவதாக காட்சி அமைக்கப்பட்டு இருந்தது. அப்போது பெண் பத்திரிக்கையாளரை உட்காருங்க என எஸ்.வி சேகர் சொல்ல அங்கு நாற்காலி எதுவும் இல்லையே நான் எப்படி உட்காருவது என பெண் பத்திரிக்கையாளர் கேரக்டரில் நடித்த பெண் கேட்பார்.
அப்போது தன் தொடையை தட்டி இவ்வளவு இடம் இருக்கிறது.. இந்த பத்திரிகை காரங்களே ரொம்ப திமிரு புடிச்சவங்க.. இவ்வளவு இடம் இருக்கே? இங்க உட்கார கூடாதா? என கேட்டிருப்பார். இந்த நிலையில் பெண் பத்திரிக்கையாளர்கள் குறித்து அவதூறாக பேசியதோடு தனது தொடையில் உட்கார வேண்டும் என்பது போல் அவர் செய்த சைகை ஆபாசமாகவும் அருவருப்பாக இருப்பதாகவும் விமர்சனங்கள் எழுந்தது. தொடர்ந்து எஸ்.வி.சேகர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பத்திரிகையாளர்களும் சமூக வலைதள வாசிகளும் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்த நிலையில் எஸ்வி சேகர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை பத்திரிகையாளர் மன்றம் வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக வெளியாகியுள்ள அறிக்கையில்,"பெண் பத்திரிகையாளர்களை மீண்டும் இழிவுபடுத்தியுள்ள எஸ்.வி.சேகரை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வன்மையாக கண்டிக்கிறது.
கடந்த 2018ஆம் ஆண்டு பத்திரிகையாளர்களை மிகவும் கீழ்த்தரமாக சித்தரிக்கும் பதிவு ஒன்றை நடிகர் எஸ்.வி.சேகர் தன்னுடைய முகநூலில் மறுபதிவிட்டிருந்தார். இந்தப் பதிவு பத்திரிகையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பத்திரிகையாளர்களும் பத்திரிகையாளர் அமைப்புகளும் கடும் கண்டனத்தை பதிவு செய்தனர். என்.வி.சேகரை கண்டன ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டது.
ரொம்ப தப்பு இது ! pic.twitter.com/4u4xrnBZgB
— Prashanth Rangaswamy (@itisprashanth) April 1, 2025
பெண் பத்திரிகையாளர்களை இழிவுபடுத்தும் வகையில் செயல்பட்ட எஸ்.வி.சேகர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியது. இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம் எஸ்.வி.சேகருக்கு ஒரு மாத சிறை தண்டனை மற்றும் அபராதம் விடுத்தது. இதை எதிர்த்து எஸ்.வி.சேகர் உயர்நீதிமன்றத்தின் தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தற்போது, நிவாரணம் கோரி உச்சநீதிமன்றத்தை எஸ்.வி.சேகர் நாடியுள்ளார்.
இந்தநிலையில் எஸ்.வி.சேகர் நாடகத்தில் சமீபத்தில் பத்திரிகையாளர்களை மோசமாக சித்தரிக்கும் வகையிலும்,அவர்கள பாலியல்ரீதியாக இழிவுபடுத்தும் வகையிலும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த முறை பெண் பத்திரிகையாளர்களை இழிவுபடுத்தும் வகையில் பதிவிட்டதற்கு, பத்திரிகையாளர்கள் மத்தியிலும், நீடுமன்றத்திலும் மன்னிப்பு கேட்ட எஸ்.வி.சேகர் தற்போத அதே தவறை மீண்டும் செய்துள்ளார்.
இதன்மூலம், தான் செய்த தவறை எஸ்.வி.சேகர் உணரவில்லை என்பது உறுதியாகிறது. மேலும், தான் செய்வது என்வென்பதை அறிந்தே அவர் செய்துள்ளார் என்பதும் தெளிவாகிறது. ஆகவே, பெண் பத்திரிகையாளர்களை மீண்டும் கீழ்த்தரமாக பேசியுள்ள எஸ்.வி.சேகரை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வன்மையாக கண்டிக்கிறது.
எஸ்.வி.சேகர் நடத்திய நாடகத்தில் பெண் பத்திரிகையாளர்களுக்கு எதிராக இடம்பெற்று காட்சி தொடர்பாக எஸ்.வி.சேகர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று வலியுறத்துறோம். அதேபோல், உச்சத்திமன்றத்தில் எஸ்.வி.சேகர் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு காவல்துறை சார்பாக மனுதாக்கல் செய்ய வேண்டும் என்றும் சென்னை பத்திரிகையாளர் மன்றம் வலியுறுத்துகிறது." என கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications