வக்பு வாரியத் தலைவர் பதவியிலிருந்து அப்துல் ரகுமானை நீக்க வேண்டும்! தடதடக்கும் தடா ரஹீம்!
சென்னை: தமிழ்நாடு வக்பு வாரியத் தலைவர் பதவியிலிருந்து முஸ்லீம் லீக் கட்சியை சேர்ந்த அப்துல் ரகுமானை நீக்க வேண்டும் என இந்திய தேசிய லீக் மாநில தலைவர் தடா ரஹீம் போர்க்கொடி உயர்த்தியுள்ளார்.
வக்புக்கு நிர்வாகத்திற்கு சொந்தமான இடத்தை தனக்கு வேண்டிய பெண் ஒருவருக்கு, மிக குறைந்த விலையில் தரை வாடகைக்கு விட அப்துல் ரகுமான் வலியுறுத்திய ஆடியோ லீக் ஆகியிருப்பதாக ரஹீம் தெரிவித்துள்ளார். மேலும், இது குறித்து முதலமைச்சர்க்கு எழுதியுள்ள கடிதத்தில் தடா ரஹீம் கூறியிருப்பதாவது;
வக்பு வாரியம்: ''தமிழ்நாடு வக்பு வாரியத்தின் தலைவராக அப்துல் ரகுமான் இருந்து வருகிறார். இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் மாநில பொறுப்பில் இருக்கும் அப்துல் ரகுமான் அவர்களுக்கு, ஆளும் திமுக அரசு கூட்டணியில் இருப்பதால் வக்பு வாரியத்தின் தலைவராக பொறுப்பை அவருக்கு வழங்கியுள்ளீர்கள். இந்நிலையில் இவர் வக்பு வாரியத்தின் தலைவராக பொறுப்பேற்ற முதல் பல்வேறு முறைகேடுகள் தொடர்ந்து நடந்த வண்ணம் உள்ளது. ''

வேண்டிய பெண் ஒருவருக்கு: ''குறிப்பாக வக்பு சொத்துக்களை தனியாருக்கு தருவது, சட்டத்திற்கு புறம்பாக நிர்வாகங்களை களைப்பது என்பன உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் தற்போது தனக்கு வேண்டிய பெண் ஒருவருக்கு வாரியத் தலைவர் அப்துல் ரகுமான், பதவியை தவறாக பயன்படுத்தி வக்புக்கு நிர்வாகத்திற்கு சொந்தமான இடத்தினை மிககுறைந்த விலையில் தரை வாடகைக்கு விட வற்புறுத்தி உள்ள ஆடியோ சமூக வலைதளங்களில் வந்து கொண்டு இருக்கிறது. ''
பாஜகவுக்கு மறைமுக உதவி: ''நாங்கள் விசாரணை செய்ததில் அந்த பெண், திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் பகுதியில் இருக்கும் பாஜக பிரமுகரான அனந்தராமன் உறவினர் என்பது தெரிய வந்துள்ளது. மேலும் கூட்டணியில் இருந்து கொண்டு மறைமுகமாக பாஜகவிற்கு உதவும் இந்த போக்கு இஸ்லாமிய விரோத போக்கையே காட்டுகிறது. ஆனந்தராமன் ஐடி நிறுவனத்தில் தான் பாஜகவின் பல்வேறு ஐடி பணிகள் நடைபெறுகிறது. இப்படி மறைமுகமாக பாஜகவிற்கு ஆதரவாக திமுக இருப்பதை மிகவும் வன்மையாக கண்டிக்கிறோம்.''
வக்பு இடங்கள்: ''வக்பு வாரிய தலைவர் அப்துல் ரகுமான் அவர்கள் அந்த பெண்ணை தனது வாகனத்தில் அழைத்து சென்று வக்பு இடங்களை சுற்றி காண்பித்து உள்ளார். அவருக்கும் அந்த பெண்ணிற்கும் உள்ள தொடர்புகள் குறித்து நாங்கள் பேச விரும்பவில்லை. அதே நேரத்தில் வகபு வாரிய தலைவராக இருந்து கொண்டு கடந்த 10ம் தேதி வள்ளியூர் பயணத்தை திட்டமிட்டு இருந்த அப்துல் ரகுமான், அவரின் ஆடியோ லீக் ஆனதை தொடர்ந்து வள்ளியூர் பயணத்தை ரத்து செய்து உள்ளார். எந்த நோக்கத்திற்காக வள்ளியூர் பயணம் திட்டமிடப்பட்டது என்பதை விசாரிக்க வேண்டும்.''
ரயில் எண்: ''ரயில் எண்: 20635 மூலம் 10.10.2023 அன்று வள்ளியூர் சென்றடைந்து 11.10.2023 அன்று 12634 ரயில் மூலம் வள்ளியூரில் இருந்து சென்னை வந்தடைந்தல் என்று பயணத்திட்டம் அமைத்து இறுதியில் பயணத்தை ரத்து செய்துள்ள ஆதாரங்கள் எங்களிடம் உள்ளது. எனவே இதற்கு முழுமையான விசாரனை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கிடையில் வக்பு வாரிய தலைவர் ஜனாப் அப்துல் ரகுமான் ஆடியோவில் பேசியது ''நான் தான்" என்று ஒப்புக் கொண்டு உள்ளார்.''
ரூ.2000 கோடி ஊழல் : ''ரூ.2000 கோடி ஊழல் தொடர்பாக அஜ்மல் கான் உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்த மனு மீது நடவடிக்கை எடுக்க சொல்லி பரிவு 97 யின் கீழ் உத்தரவு வழங்கியும் அதை நிறைவேற்றாத வக்பு வாரிய தலைவர் மற்றும் வாரிய உறுப்பினர்கள் மீது பிரிவு 9 கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிகார துஷ்பிரோயகம் செய்து தனக்கு வேண்டப்பட்டவர்க்கு நிலத்தினை ஒதுக்கச் சொல்லி வற்புறுத்தி உள்ளது வக்பு சட்டத்திற்கும், அரசு ஊழியரின் நடத்தை விதிகளுக்கும் எதிரானது. எனவே அவரை உடனே பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்ற கேட்டுக் கொள்கிறோம்.''
மேலும் கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக வக்பு இடங்களில் வசிக்கும் ஏழை எளிய மக்களை அப்புறப்படுத்தாமல் அவர்களுக்கு வக்பு சட்டத்திற்கு உட்பட்டு அவர்கள் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.''












Click it and Unblock the Notifications