இலங்கை கடற்படை தொடர்ந்து அத்துமீறல்.. உறுதியான நடவடிக்கை எடுங்க.. மத்திய அரசுக்கு ஸ்டாலின் கடிதம்
சென்னை: எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி நேற்று தமிழக மீனவர்கள் 11 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. இந்த நிலையில், இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திடத் தேவையான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வலியுறுத்தி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவது தொடர் கதையாகி வருகிறது. தொடர்ந்து எதிர்க்கட்சிகளும் இதற்கு ஒரு நிரந்தர தீர்வு காண கோரி தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று, நாகப்பட்டினம் மாவட்டம் அக்கரைப்பேட்டை மீனவ கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் 11 பேர் கடலுக்கு மீன்பிடிக்க சென்ற போது இலங்கை கடற்படை அவர்களை கைது செய்தது.

நெடுந்தீவு அருகே மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் 11 பேரையும் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி கைது செய்தனர். இந்நிலையில், இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திடத் தேவையான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வலியுறுத்தி மாண்புமிகு ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இதில் கூறப்பட்டிருப்பதாவது:- நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த 11 மீனவர்களும் அவர்களது மீன்பிடி விசைப்படகும் நேற்று (23-08-2024) இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டுள்ள சம்பவம் மிகுந்த கவலையளிப்பதாகக் தெரிவித்துள்ளார். நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த 11 மீனவர்கள் IND-TN-06-MM-1054 என்ற பதிவெண் கொண்ட விசைப்படகில் கோடியக்கரைக்கு தென்கிழக்கே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது நேற்று (23-08-2024) இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர்.
இதுபோன்ற நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருவதை, தான் ஏற்கனவே பலமுறை சுட்டிக்காட்டியுள்ளதாகவும், 2024-ஆம் ஆண்டில் மட்டும் இதுவரை 324 மீனவர்களும், 44 படகுகளும் இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டுள்ளனர். இதுபோன்ற தொடர் கைது நடவடிக்கைகளால் தமிழ்நாட்டு மீனவ சமூகத்தினர் பெரும் இன்னல்களைச் சந்தித்து வருவதுடன் அவர்களது வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படுகிறது.
மேலும், கடந்த இரண்டு வாரங்களில், இலங்கையைச் சேர்ந்த அடையாளம் தெரியாத நபர்கள் கடலில் மீனவர்களைத் தாக்கிய சம்பவங்களையும் இந்த கடிதத்தில் சுட்டிக் காட்டியுள்ளார். மேலும் இந்தப் பிரச்சினைக்கு உடனடியாகத் தீர்வு காண வேண்டியது அவசியம் என்று தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். எனவே, கைது செய்யப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விரைந்து விடுவிப்பதற்கு, உறுதியான தூதரக நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications