பல்லாவரம் டூ கேளம்பாக்கம்... மாணவர்கள் தங்கியுள்ள அடுக்குமாடிகளில் ஏராளமான போலீசார் திடீர் சோதனை
சென்னை: சென்னை புறநகர் பகுதியான பழைய மாமல்லபுரம் சாலையில் உள்ள கேளம்பாக்கம், படூர், முட்டுக்காடு, நாவலூர், தாழம்பூர் பகுதிகளில் ஏராளமான தனியார் பல்கலைக்கழகங்கள், என்ஜினீயரிங் கல்லூரிகள், மருத்துவ கல்லூரிகள் உள்ளன. இந்த பகுதிகளில்
அறை எடுத்து தங்கி உள்ள கல்லூரி மாணர்களிடம் போதைப்பொருட்கள் உள்ளதா என போலீசார் நேற்று தீவிர சோதனை மேற்கொண்டனர்.
சென்னையில் உள்ள பழைய மாமல்லபுரம் சாலை என்பது ஐடி நிறுவனங்கள் மிக அதிகம் நிறைந்த பகுதிகளாக உள்ளன. அடையாறு தொடங்கி நாவலூர் வரை பல ஐடி நிறுவனங்கள் உள்ளன. அதேநேரம் ஓஎம்ஆர் சாலை என்பது கல்லூரிகள் அதிகம் உள்ள பகுதியாகும். கேளம்பாக்கம், படூர், முட்டுக்காடு, நாவலூர், தாழம்பூர் பகுதிகளில் ஏராளமான தனியார் பல்கலைக்கழகங்கள், என்ஜினீயரிங் கல்லூரிகள், மருத்துவ கல்லூரிகள், சட்டக்கல்லூரிகள் அமைந்துள்ளன. இந்த கல்லூரிகளில் படிக்கும் வெளியூர் மாணவ-மாணவிகள் தனியாக வீடு எடுத்தும், தங்கும் விடுதிகளிலும், பல அடுக்குமாடி குடியிருப்புகளிலும் தங்கி படித்து வருகிறார்கள்.

இப்படி அறை எடுத்து தங்கி படிக்கும் மாணவர்களை குறி வைத்து வட மாநில கும்பல் கஞ்சா, அபின், மெத்தபெட்டமைன் உள்ளிட்ட போதைப்பொருட்களை விற்பனை செய்து வருவதாக புகார் எழுந்தது. சென்னை புறநகர் பகுதிகளில் வார இறுதி மற்றும் பிறந்தநாள் கொண்டாட்டங்களின்போது சக மாணவர்களுக்கு கஞ்சா, அபின், மெத்தபெட்டமைன் போன்ற போதை பொருட்கள் வினியோகிக்கப்பட்டு பயன்படுத்தப்படுவதாகவும் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து போதைப்பொருட்கள் விநியோகத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும், மாணவர்களிடம் சோதனை நடத்த வேண்டும் என்றும் தாம்பரம் போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டார். இதன்பேரில் நேற்று காலை 6 மணி முதல் கேளம்பாக்கம் காவல்துறை உதவி கமிஷனர் வெங்கடேசன், தலைமையில் கேளம்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன், தாழம்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சார்லஸ் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட போலீசார் பழைய மாமல்லபுரம் சாலையில் உள்ள கேளம்பாக்கம் மற்றும் படூர் பகுதிகளில் மாணவர்கள் தங்கி உள்ள தனியார் விடுதிகளில் திடீர் ஆய்வு செய்தனர்-
மாணவர்கள் அறைகளில் போதைப்பொருட்களை பயன்படுத்துகிறார்களா?, அதிக பணம் கிடைக்கும் ஆசையில் வாங்கி யாரேனும் விற்பனை செய்கிறார்களா? எங்காவது பதுக்கி வைத்துள்ளார்களா? என தீவிரமாக போலீசார் சோதனையிட்டனர். ஓஎம்ஆர் பகுதியில் மட்டுமல்ல கல்லூரிகள் அதிகம் உள்ள பல்லாவரம் பகுதியில் சோதனை நடந்தது.
தாம்பரம் உதவி கமிஷனர் நெல்சன் தலைமையிலான, 30-க்கும் மேற்பட்ட போலீசார் பல்லாவரம் ஆர்.கே.வி. அவென்யூ, 2-வது தெருவில் தனியார் பல்கலைக் கழகத்தில் படித்து வரும் மாணவர்கள் தங்கியுள்ள அறைகளில் தீவிர சோதனை நடத்தினர். அப்போது அங்கு ஒரு அறையில் 20 கிராம் கஞ்சா இருந்தது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார், இது தொடர்பாக சூடான் நாட்டை சேர்ந்த முகமது அல்ஸ்மானே, முகமது ஹேதாம் எல்ராயா எல்சிக் ஆகியோரிடம் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதேபோல் செங்கல்பட்டு அருகே கூடுவாஞ்சேரி, பொத்தேரி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் கல்லூரி மாணவர்கள் தங்கியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் கல்லூரி அருகே உள்ள கடைகளிலும் நேற்று போலீசார் தீவிர சோதனை செய்தனர். இதில் சில இடங்களில் போதைப்பொருட்களை போலீசார் பறிமுதல் செய்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த சம்பவம் காரணமாக நேற்று சென்னை புறநகர் பகுதிகளில் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications