ஆளாளுக்கு கிளம்பிட்டாங்களே! திமுக-அதிமுகவுக்கு குடைச்சல் கொடுக்கும் கூட்டணி! 2026ல் பீகார் மாடலா?
சென்னை: சமீபகாலமாகவே ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற குரல் தமிழகத்தில் கேட்க தொடங்கி இருக்கிறது. அதிமுக கூட்டணியில் பாஜக, கூட்டணிக்கு வரலாம் என சொல்லப்படும் பாஜக, தேமுதிக, திமுக கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் என ஆளாளுக்கு கூட்டணியில் கூடுதல் சீட், ஆட்சி அதிகாரத்தில் பங்கு என பேசி வருவது கூட்டணிக்கு தலைமை தாங்கும் கட்சிகளை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது. ஆனால், பீகார், ஆந்திராவைப் போல கூட்டணி ஆட்சி தமிழகத்தில் மலர சாத்தியமில்லை என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
2026 சட்டமன்ற தேர்தலுக்கு தமிழ்நாடு தயாராகி வரும் நிலையில் கூட்டணியை பலப்படுத்தும் முயற்சிகளில் அதிமுக ஈடுபட்டுள்ளது. பாமக, அதிமுக கூட்டணிக்கு வருவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்ட நிலையில், தேமுதிக பிடி கொடுக்காமல் பேசி வருகிறது.
கடந்த மாநிலங்களவை தேர்தலில் தேமுதிகவுக்கு ஒரு சீட்டை ஒதுக்காததால் தான் பிரேமலதா விஜயகாந்த் அதிருப்தியில் இருக்கிறார். கடந்த காலங்களில் திமுகவை மிகக் கடுமையாக விமர்சித்து வந்த அவர் தற்போது மோதல் போக்கை கைவிட்டு இணக்கமாக பேசி வருகிறார்.

தமிழக அரசியல்
இடையில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்ததும் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களாகவே ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற கோரிக்கை தமிழகத்தில் வலுத்து வருகிறது. ஆந்திரா, பீகார், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் மாநிலக் கட்சிகளை உடைத்து புது கூட்டணி அமைத்த பாஜக அங்கெல்லாம் ஆட்சியில் பங்கெடுத்து உள்ளது. இந்த நிலையில் தமிழகத்திலும் கூட்டணி ஆட்சி என பாஜக தலைவர்கள் பேசி வருகிறார்கள்.
பாமக தேமுதிக
இதற்கிடையே தொண்டர்களை சந்தித்து வரும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், அடுத்த ஆண்டு நீங்கள் எல்லாம் அமைச்சராக போகிறீர்கள் என பேசி தொண்டர்களை உற்சாகப்படுத்து வருகின்றனர். திமுக கூட்டணியிலும், தங்கள் பங்குக்கு காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் ஆட்சி அதிகாரத்தில் பங்கு, கூடுதல் இடங்களை கேட்போம் என பேசி வருகின்றனர். இப்படி கூட்டணி கட்சிகள் இதுவரை இல்லாத அளவு முழக்கத்தை முன்னெடுத்து இருப்பதால் தலைமை தாங்கும் கட்சிகள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளன.
ஆட்சி அதிகாரத்தில் பங்கு
ஆனால் தமிழகத்தில் தற்போதைய சூழலில் கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பில்லை என்று சொல்கின்றனர். திமுகவோ, அதிமுகவோ தனித்து போட்டியிட்டாலும், கூட்டணி அமைத்து போட்டியிட்டாலும் பெரும்பாலான தொகுதிகளில் வெற்றி பெற்று தனித்து ஆட்சியைப் பிடித்திருக்கின்றன. திமுகவுக்கு போதிய சட்டமன்ற உறுப்பினர்கள் இல்லாத போது கூட சில கட்சிகள் வெளியில் இருந்து தான் ஆதரவு அளித்தனர். கூட்டணி ஆட்சிக்கு திமுக சம்மதிக்கவும் இல்லை. அதிமுகவும் அப்படித்தான் காங்கிரஸ் காலத்திலும் சரி அதற்கு பிறகு அதிமுக, திமுக ஆட்சி காலங்களிலும் கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை.
கூட்டணி ஆட்சி
ஆனால், "பீகார் ஃபார்முலாவை தமிழ்நாட்டில் புகுத்த பாஜக துடிக்கிறது. அதிமுகவை பலவீனமாக்கி குறைந்த தொகுதிகளில் வெற்றி பெற செய்து ஆட்சியில் பங்கெடுக்கலாம் என்பதுதான் பாஜகவின் எண்ணம். ஆனால் தமிழகத்தை பொறுத்தவரை எந்த கட்சியாக இருந்தாலும் பலத்த ஆதரவை தருவார்கள். எதிர்க்கட்சியை ஓட விடுவார்கள் என்பது தான் வரலாறு. கூட்டணி ஆட்சிக்கு தமிழகத்தில் சாத்தியம் இல்லை. தற்போது மட்டுமல்ல எப்போதுமே சாத்தியமில்லை" என்கின்றனர் தமிழக அரசியலை நுட்பமாக கவனித்து வரும் அரசியல் பார்வையாளர்கள்.












Click it and Unblock the Notifications