ஒரு நாளைக்கு 8 லிட்டர் பால்.. 10,000 பெண்களுக்கு இலவச கறவை மாடுகள்! தமிழக அரசின் சர்ப்ரைஸ் அறிவிப்பு
சென்னை: கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் தமிழக அரசு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் 10,000 பெண்களுக்கு விலை இல்லாமல் கறவை மாடுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இந்தத் திட்டத்திற்காக 2026 - 2027 ஆம் நிதி ஆண்டிற்கு 57 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு இருக்கிறது. குறைந்தபட்சம் நாள் ஒன்றுக்கு 8 லிட்டர் பால் கறக்கும் திறன் உள்ள கலப்பின கறவை மாடுகள் வழங்கப்பட உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியாகியுள்ள அறிவிப்பில்," கடந்த சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடரின் போது தமிழக நிதி அமைச்சர் மரிய வில்சன் "தமிழ்நாடு பால் உற்பத்தியிலும், பால் கொள்முதல் செய்வதிலும், தேசிய அளவில் முன்னிலையில் உள்ளது.

பால் உற்பத்தியினை மேலும் அதிகரிக்கவும், ஊரகப் பகுதிகளில் வாழும் பெண்களின் வாழ்வாதாரத்தினை உறுதிசெய்திடவும், ஒவ்வொரு ஆண்டும் 10,000 தகுதிவாய்ந்த பெண்களுக்கு கறவைமாடுகள் விலையில்லாமல் வழங்கப்படும்" என்று அறிவித்தார்.
அந்த செயல்படுத்திடும் வகையில், அறிவிப்பினைச் ஊரகப் பகுதிகளில் வாழும் தகுதிவாய்ந்த 10,000 பெண்களுக்கு விலையில்லாமல் கறவை மாடுகள் வழங்குவதற்காக 2026-27ஆம் நிதி ஆண்டிற்கு 57 கோடி ரூபாய்க்கான நிர்வாக மற்றும் நிதி ஒப்பளிப்பு செய்து தமிழ்நாடு அரசால் ஆணையிடப்பட்டுள்ளது.
ஊரகப் பகுதிகளைச் சேர்ந்த பெண்களுக்கு விலையில்லாக் கறவை மாடுகளை வழங்கும் இத்திட்டமானது, சிறப்பான உற்பத்தித் திறன்கொண்ட பால் சொத்துகளை உருவாக்குவதன் மூலம் ஊரகப் பெண்களின் வாழ்வாதாரத்தையும் வருமானத்தையும் மேம்படுத்துதல், மாநிலத்தில் பால் உற்பத்தியை அதிகரித்தல், பால் கூட்டுறவு நிறுவனங்களை வலுப்படுத்துதல் ஆகியவை மேற்கொள்ளப்படவுள்ளது.
மேலும், அறிவியல்பூர்வமான பால் பண்ணை முறைகளை ஊக்குவித்தல், குடும்ப ஊட்டச்சத்து பாதுகாப்பை மேம்படுத்துதல் மற்றும் நிலையான வருமானம் ஈட்டும் நடவடிக்கைகள் மூலம் பெண்களுக்கு அதிகாரமளிப்பதை ஊக்குவித்தல் ஆகியவற்றை நோக்கங்களாகக் கொண்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ், ஒவ்வொரு பயனாளிக்கும் குறைந்தபட்சம் நாளொன்றுக்கு 8 லிட்டர் பால் கறக்கும் திறனுள்ள ஒரு ஆரோக்கியமான, அதிக பால் தரும் கலப்பினக் கறவை மாடு வழங்கப்படும். இதன்மூலம் பயனாளி குடும்பத்திற்கு வழக்கமான வருமான ஆதாரம் உறுதி செய்வதுடன், முறையான கால்நடை பராமரிப்பு மற்றும் அறிவியல் மேலாண்மை ஆகியவற்றின் மூலம், ஐந்தாண்டு காலத்தில் ஒவ்வொரு மாடும் மூன்று முதல் நான்கு கன்றுகளை ஈனும் என்று எதிர்பார்க்கப்படுவதால், இது நீண்ட காலச் சொத்து உருவாக்கம் மற்றும் நிலையான பொருளாதார நன்மைகளுக்கும் வழிவகுக்கும்" எனக் கூறப்பட்டுள்ளது.



Click it and Unblock the Notifications
