வரும்.. ஆனா வராது! பொங்கல் பரிசு தொகை ரூ.1000 என்னாச்சு? திமுக கூட்டணியில் எழுந்த கோரிக்கை குரல்!
சென்னை: தமிழ்நாடு அரசின் சார்பில் பொங்கல் பரிசு தொகுப்பு அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு பொங்கல் பரிசு தொகுப்பாக வழங்கப்படும் என அரசு அறிவித்திருக்கிறது. அதே நேரத்தில் பணப்பரிசு வழங்கப்படாது என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கூறி உள்ளார். இந்நிலையில் பொங்கல் பரிசு தொகை வழங்க வேண்டுமென திமுக கூட்டணியில் உள்ள கூட்டணி கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
2025-ஆம் ஆண்டு தைப்பொங்கலைச் சிறப்பாகக் கொண்டாடும் வகையில் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்குத் தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழுக்கரும்பு வழங்கிட அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இதன் மூலம் 2,20,94,585 அரிசி குடும்ப அட்டைதாரர்களும், இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினர்களும் பயன்பெறுவார்கள். இதனால் அரசுக்கு ரூபாய் 249.76 கோடி செலவு ஏற்படும். மேலும், பொங்கல் திருநாளை முன்னிட்டு வழங்கப்படவுள்ள இலவச வேட்டி சேலைகள் அனைத்தும் தயார் செய்யப்பட்டு. அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
பொங்கல் பரிசு தொகுப்பு:
பொங்கல் பரிசுத் தொகுப்புடன் இவற்றையும் சேர்த்து வழங்குவதற்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் பணப்பரிசு வழங்குவது தொடர்பான அறிவிப்பு இல்லை. இதனால் மக்கள் கடும் ஏமாற்றமடைந்த நிலையில், நடப்பாண்டில் பொங்கல் பரிசுத் தொகை வழங்குவதில், நிதிச்சுமை காரணமாக கடினமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்திருந்தார்.
பொங்கல் ரொக்க பரிசு:
கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் 500 ரூபாய் முதல் பொங்கல் பரிசு தொகுப்புடன் ரொக்க பரிசும் வழங்கப்பட்டு வருகிறது. கடைசியாக 2021 இல் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக இருந்தபோது குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக 2500 ரூபாய், அரிசி, சர்க்கரை, கரும்பு உள்ளிட்டவை வழங்கப்பட்டது. தொடர்ந்து திமுக ஆட்சி அமைந்த பிறகு 2022 ஆம் ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்பு தரமற்று வழங்கப்பட்டதாக புகார் எழுந்த நிலையில் 2023ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை உடன் ஆயிரம் ரூபாய் ரொக்க பரிசு வழங்கப்பட்டது.
மக்கள் ஏமாற்றம்:
இந்த நிலையில் இந்த ஆண்டும் ரொக்க பரிசு வழங்கப்படும் என எதிர்பார்த்திருந்த நிலையில் அது தொடர்பான அறிவிப்பு வெளியாகவில்லை. இதனால் குடும்ப அட்டைதாரர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இந்த நிலையில், பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பொங்கல் ரொக்கப் பரிசு வழங்க அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
திமுக கூட்டணி கட்சிகள்:
இந்த நிலையில் திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளை பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புடன் ரொக்க பரிசையும் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோரும் மக்களுக்கு பொங்கல் பரிசு வழங்க வேண்டும் என அறிக்கை வாயிலாக வலியுறுத்தியுள்ளனர்.
அரசு அறிவிக்குமா?:
கடந்த ஆண்டு வரை பொங்கல் பரிசு தொகுப்பு உடன் ரொக்க பரிசும் வழங்கப்பட்ட நிலையில் தற்போது வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டு இருப்பது மக்களை ஏமாற்றத்திற்கு உள்ளாக்கியுள்ளது எனவும், பல திட்டங்களுக்கு பணம் ஒதுக்கப்பட்டிருக்கும் நிலையில் ஆண்டுக்கு ஒரு முறை பொங்கல் பரிசு வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். அதே நேரத்தில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று பொங்கல் பரிசு தொகுப்பு உடன் ரொக்கப் பரிசு வழங்க தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிடலாம் எனவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications