ஒரே கன்ப்ஃயூசன்..கைகொடுக்குமா கோபி? செங்கோட்டையன் கொடி நாட்டுவாரா? நான்முனை போட்டியால் எகிறிய பிரஷர்
சென்னை: 2026 சட்டமன்றத் தேர்தல் களம் நாளுக்கு நாள் பரபரப்பாக மாறி வருகிறது. ஸ்டார் வேட்பாளர்களின் தொகுதிகள் தமிழக அளவில் கவனிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த பத்து தேர்தல்களில் ஒன்பது முறை வென்ற கேஏ செங்கோட்டையனின் கோபிசெட்டிபாளையம் சட்டமன்றத் தொகுதியில் வெற்றி வாய்ப்பு யாருக்கு? என்பது குறித்து பார்க்கலாம். அதிமுகவில் ஆதிக்கம் செலுத்திய கேஏ செங்கோட்டையன் தற்போது தமிழக வெற்றி கழகத்தின் வேட்பாளராக களம் இறங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.
பரபரப்புகளுக்கும் விறுவிறுப்புகளுக்கும் பஞ்சமில்லாமல் சென்று கொண்டிருக்கிறது தமிழக சட்டமன்ற தேர்தல் களம். அதிமுகவில் அதிருப்தியில் இருந்தவர்கள் திமுகவுக்கு தாவிய நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் திடீரென தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து அதிர்ச்சி கொடுத்தார் அதிமுகவின் மிக மூத்த சீனியர்களில் ஒருவரான செங்கோட்டையன்.

தற்போது அவரது சொந்த தொகுதியான கோபிசெட்டிபாளையம் தொகுதியில் களமிறங்குகிறார். இயற்கை வளம், கோயில்கள், அணைகள் என இயற்கை எழில் கொஞ்சும் கோபிசெட்டிபாளையத்தில் உயிர்நாடியே விவசாயம் தான்.
கோபிசெட்டிபாளையம்
கீழ்பவானி, அரக்கன் கோட்டை பாசனம் மூலம் அங்கு பெரும்பாலும் விவசாயமே பிரதான தொழிலாக உள்ளது. அரசியல் ரீதியாகவும் அதிமுகவின் கோட்டை கோபிசெட்டிபாளையம் என்றால் அது மிகையில்லை. இந்த தொகுதியின் தேர்தல் வரலாற்றைப் பார்த்தாலே, அதிமுகவின் ஆதிக்கம் மிகவும் தெளிவாக தெரிகிறது. 1977 முதல் 2021 வரை நடைபெற்ற தேர்தல்களில் பெரும்பாலான முறைகளில் அதிமுகவே வெற்றி பெற்றுள்ளது.
கே.ஏ.செங்கோட்டையன்
அதிலும் குறிப்பாக கே.ஏ.செங்கோட்டையன் இந்த தொகுதியில் 8 முறை சட்டப்பேரவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நீண்ட அரசியல் அனுபவம் அவருக்கு தொகுதியில் தனிப்பட்ட ஆதரவை உருவாக்கியதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த முறை நிலைமை முற்றிலும் மாறியுள்ளது. நீண்ட காலமாக இருந்த அதிமுகவிலிருந்து விலகிய செங்கோட்டையன், தற்போது தமிழக வெற்றி கழகம் சார்பில் போட்டியிடுவது, தேர்தல் களத்தில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
திமுக போட்டி
இதனால், அவரின் தனிப்பட்ட வாக்கு வங்கி எவ்வளவு? கட்சி வாங்கி எவ்வளவு? என்பது முக்கியமான கேள்வியாக மாறியுள்ளது. இதே நேரத்தில், திமுக சார்பில் என். நல்லசிவம் போட்டியிடுகிறார். இவர் மாவட்ட அரசியலில் பிசியாக இருந்தாலும், சட்டப்பேரவைத் தேர்தலில் முதன்முறையாக களம் காண்கிறார். அதிமுக வாக்குகள் பிரிய வாய்ப்பு மற்றும் கூட்டணி வாக்குகளை ஒருங்கிணைக்கும் திறன் ஆகியவற்றை பயன்படுத்தி, நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்த தொகுதியில் வெற்றி பெற வேண்டும் என்ற இலக்குடன் திமுக தீவிரமாக செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
வி.பி. பிரபு
மற்றொரு புறம், அதிமுக சார்பில் வி.பி. பிரபு என்ற புதுமுகம் களமிறங்கியுள்ளார். இந்த தொகுதியில் பல ஆண்டுகளாக இருந்த கட்சியின் வலுவான அடித்தளத்தை தக்கவைத்துக் கொண்டு, செங்கோட்டையனின் சவாலைக் கடந்தும் வெற்றி பெறுவது அவருக்கு பெரிய சோதனையாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக, செங்கோட்டையன் கட்சி மாறிய பின்னரும் அதிமு தொண்டர்களின் ஆதரவு, இந்த தேர்தலில் முக்கிய பங்காற்றும் என்று அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
நாம் தமிழர் கட்சி
மேலும், நாம் தமிழர் கட்சி சார்பில் மா.கி. சீதாலட்சுமியும் போட்டியிடுகிறார். இவர் கடந்த தேர்தலிலும் இந்த தொகுதியில் போட்டியிட்டு கணிசமான வாக்குகளை பெற்றிருந்தார். விவசாயிகள் அதிகம் உள்ள பகுதியில் மக்களுடன் எளிமையாக பழகும் தன்மை மற்றும் முந்தைய தேர்தல் அனுபவம் ஆகியவை இவருக்கு ஓரளவு ஆதரவாக அமையலாம் என கூறப்படுகிறது. அதே நேரத்தில், இவரது வாக்குகள் யாருடைய வெற்றியைப் பாதிக்கும் என்பது மிகப் பெரிய கேள்வி.
யுக்திகள் பலனளிக்குமா?
கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக இந்த தொகுதியில் முக்கிய அரசியல் தலைவராக விளங்கிய செங்கோட்டையன், இந்த முறை புதிய சின்னத்தில் போட்டியிடுவது மிகவும் முக்கியமான மாற்றமாக உள்ளது. தேர்தல் அறிவிப்புக்கு முன்பே அவர் பிரச்சாரத்தைத் தொடங்கியிருப்பதும், வாக்காளர்களை நேரடியாக சந்தித்து ஆதரவு கேட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது. தேர்தல் களத்தில் பல ஆண்டுகளாக அனுபவம் பெற்றவர் என்றாலும், புதிய கட்சி மற்றும் புதிய அரசியல் சூழலில் அவரது யுக்திகள் பலனளிக்குமா? என்பது இன்னும் கேள்விக்குறியாகவே உள்ளது.














Click it and Unblock the Notifications