பெற்றோர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. கட்டிய ஸ்கூல் பீஸை திரும்ப பெற வாய்ப்பு! வெளியான முக்கிய அறிவிப்பு!
சென்னை: 2025-26 கல்வியாண்டுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டம் (RTE Act) அடிப்படையில் மாணவர் சேர்க்கை தொடங்கப்படுவதாக தமிழ்நாடு அரசு கூறியுள்ளது. தமிழகத்துக்கு தேவையான நிதியை மத்திய அரசு விடுவித்துள்ள நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் மூலம், மாநிலம் முழுவதும் உள்ள 8,000-க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளில் சுமார் 1.1 லட்சம் மாணவர்கள் இலவசமாக சேர்க்கை பெற வாய்ப்பு பெறுகின்றனர். இத்திட்டத்தின் முக்கியத்துவம் என்னவெனில், மாணவர்கள் எல்கேஜி அல்லது 1ஆம் வகுப்பில் சேர்ந்து, 8ஆம் வகுப்பு வரை எந்தவித கட்டணமும் இல்லாமல் கல்வி பயில முடியும் என்பது தான்.
இந்த திட்டத்தின் கீழ் சிறுபான்மை அந்தஸ்து பெறாத அனைத்து தனியார் பள்ளிகளும் நர்சரி, பிரைமரி, மெட்ரிக், ஐசிஎஸ்இ மற்றும் சிபிஎஸ்இ போன்றவை தங்கள் மொத்த மாணவர்கள் எண்ணிக்கையில் 25 சதவீதம் ஆளவுக்கு மாணவர்களை இலவசமாக சேர்க்க வேண்டும்.
ஆர்டிஇ சேர்க்கை
அதற்கான விண்ணப்பதாரர்களாக பொருளாதாரத்தில் நலிந்தோர் மற்றும் சமூக ரீதியாக வாய்ப்பு மறுக்கப்பட்டோர், ஆதரவற்றவர்கள், எச்ஐவியால் பாதிக்கப்பட்டவர், 3ஆம் பாலினத்தவர், மாற்றுத்திறனாளிகள், துப்புரவுத் தொழிலாளர்களின் குழந்தைகள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்திற்கு குறைவாக இருக்க வேண்டும். வருமானச் சான்றிதழ், இருப்பிடம், சாதிச் சான்றிதழ் உள்ளிட்டவை தேவையான ஆவணங்களாக இருக்கின்றன. எனவே, பெற்றோர்கள் இந்த ஆவணங்களை முன்கூட்டியே தயார் செய்து வைத்திருக்க வேண்டும்.
இலவச கல்வி
விண்ணப்பதாரர்கள் rte.tnschools.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். ஒருவர் அதிகபட்சம் தங்கள் இருப்பிடத்துக்கு அருகில் உள்ள 5 பள்ளிகளை தேர்வு செய்யலாம். ஒரு பள்ளிக்கு நிர்ணயிக்கப்பட்ட எண்ணிக்கையை விட அதிகமான விண்ணப்பங்கள் வந்தால், மாணவர்கள் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த வாய்ப்பை பெற விரும்பும் பெற்றோர் மற்றும் பாதுகாவலர்கள், விண்ணப்ப பதிவுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை கவனமாகக் கண்காணிக்க வேண்டும். மேலும் மாணவ-மாணவிகள் நேர்மையான முறையில் தேர்வாகி, கல்வியில் முன்னேறுவதற்கான படியாக இந்த RTE திட்டம் அமைந்திருக்கும் நிலையில், பெற்றோர்கள் தற்போது அதற்கு விண்ணப்பிக்க தயாராகி வந்தனர்.

தமிழ்நாடு அரசு
ஆனால் மத்திய அரசு தமிழகத்திற்கு தேவையான நிதியை ஒதுக்கவில்லை என தமிழ்நாடு அரசு கட்டாய கல்வி உரிமைச் சட்டம் தொடர்பான மாணவர் சேர்க்கையை நிறுத்தி வைத்திருந்தது. இந்த நிலையில் தான் தற்போது 2025 2026 ஆம் கல்வியாண்டிற்கான இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் படி மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்டு இருப்பதாக தமிழ்நாடு அரசு கூறியிருக்கிறது. மத்திய அரசு நிதியை விடுவித்ததை தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஆர்டிஇ சேர்க்கை 2025
அதன்படி, தமிழ்நாடு அரசு, குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டமான Right to Education (RTE) Act, 2009-ன் கீழ் 2025-26 கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைமுறைகளை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது, சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுகள் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற மேல்முறையீட்டு நடவடிக்கைகளின் பின்னணியில் மத்திய அரசு மாநிலத்திற்கான நிதியை விடுவித்ததைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையாகும்.
மத்திய அரசு
சென்னை உயர்நீதிமன்றம், மத்திய அரசு வழங்கும் RTE நிதியை "ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி" (Samagra Shiksha) திட்டத்திலிருந்து பிரித்து வழங்க உத்தரவிட்டது. மேலும், தேசிய கல்விக் கொள்கை (NEP 2020) அல்லது PM SHRI பள்ளித் திட்ட ஒப்பந்தம் ஆகியவற்றுடன் நிதி வழங்கல் இணைக்கப்படக் கூடாது என்றும் தெளிவாக கூறியது. இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் சிறப்பு மேல்முறையீடு மனு தாக்கல் செய்தது. உச்ச நீதிமன்றத்தின் தலையீட்டின் பின்னர் மத்திய அரசு தனது நிதி பங்கினை விடுவித்தது. இதனால், புதிய கல்வியாண்டுக்கான RTE சேர்க்கை பணிகள் தற்போது துவங்கியுள்ளன.
கல்வி உரிமை சட்டம்
RTE சட்டம் 2009 மற்றும் தமிழ்நாடு RTE விதிகள் 2011 படி, சிறுபான்மை அல்லாத அனைத்து தனியார் பள்ளிகளிலும் நுழைவு வகுப்புகள் (LKG அல்லது 1ஆம் வகுப்பு) மாணவர்களில் 25% இடங்கள் RTE மாணவர்களுக்கு ஒதுக்கப்படும். மாணவர் சேர்க்கை முழுமையாக அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் ஆன்லைனில் நடைபெறும். ஏற்கனவே அதே பள்ளியில் கல்வி பயிலும் தகுதியான மாணவர்களை பதிவு செய்ய 10 நாட்கள் கால அவகாசம் வழங்கப்படும்.
முன்னுரிமை
சேர்க்கை செய்யும் போது பின்வரும் பிரிவுகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்:. ஆதரவற்றோர், எச்.ஐ.வி. பாதிக்கப்பட்டோர், மாற்றுப் பாலினத்தவர், தூய்மைப் பணியாளர்களின் குழந்தைகள், மாற்றுத் திறனாளிகள், விண்ணப்பங்கள் ஒதுக்கீட்டைவிட அதிகமாக இருந்தால் குலுக்கல் (Random Selection) முறையில் தேர்வு செய்யப்படும்,
கட்டணம் வசூலிக்கக் கூடாது
RTE மாணவர்களிடமிருந்து எந்த வகையிலும் கட்டணம் வசூலிக்கக் கூடாது. ஏற்கனவே வசூலிக்கப்பட்டிருந்தால் 7 நாட்களுக்குள் திருப்பிச் செலுத்த பள்ளிகள் கடமைப்பட்டுள்ளன. மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தலைமையிலான சிறப்பு குழுக்கள் மூலம் சேர்க்கை நடைமுறை கண்காணிக்கப்படும். அதோடு, புகார்கள் பதிவு செய்ய தனிப்பட்ட ஹெல்ப்லைன் எண் மற்றும் மின்னஞ்சல் வசதி ஏற்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications