வருத்தம் தான்.. ஆனாலும் சந்தோஷம் தான்! அடுத்த 5 ஆண்டு டார்கெட்.. அண்ணாமலை அறிக்கையில் சொன்ன தகவல்
சென்னை: தேசிய ஜனநாயகக் கூட்டணி, தமிழக அரசியலில் தவிர்க்கவியலாத சக்தியாகத் தொடர, தமிழக மக்கள் பெரும் ஆதரவளித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில், மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களை ஆதரித்து, தமிழகத்தின் அனைத்துத்தொகுதிகளிலும், தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குப் பெருமளவில் வாக்களித்த தமிழக மக்கள் அனைவருக்கும், இதயப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இம்முறை நமது மக்களின் பிரிதிநிதிகளாக பாராளுமன்றம் செல்லமுடியவில்லை என்ற வருத்தம் இருந்தாலும், வரும் காலங்களில் உங்களின் அன்பையும் அங்கீகாரத்தையும் பெற எங்கள் உழைப்பை இரட்டிப்பாக்குவோம்.
நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்கள், கடந்த பத்து ஆண்டுகளாக, நாட்டின் வளங்களையோ, சாமானிய மக்கள் வரிப்பணத்தையோ சுரண்டாமல், ஒரு மத்திய அமைச்சர் மீது கூட ஊழல் குற்றச்சாட்டு இல்லாத நல்லாட்சியை வழங்கியிருக்கிறார் என்பது நமக்கெல்லாம் பெருமை. மேலும், நாட்டின் உட்கட்டமைப்பு, விவசாயம், சாமானிய மக்கள், பெண்கள் மற்றும் இளைஞர் மேம்பாடு சார்ந்த திட்டங்களைச் செயல்படுத்தி, இடைத்தரகர்கள் இல்லாமல், அனைத்துப் பலன்களும் நேரடியாக மக்களைச் சென்றடைய வழிவகை செய்திருக்கிறார்.
நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்களின் நலத்திட்டங்கள், தமிழகத்தின் அனைத்துத் தரப்பு பொதுமக்களையும் சென்றடைந்திருக்கிறது என்பதை தற்போதைய தேர்தல் முடிவுகளில், தமிழகம் முழுவதும் பரவலாகக் கிடைத்துள்ள வாக்குகள் மூலம் அறிய முடிகிறது. மத்தியில் மீண்டும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையவிருப்பதில் பெரு மகிழ்ச்சி கொள்கிறோம். நமது தேசிய ஜனநாயகக் கூட்டணி, தமிழக அரசியலில் தவிர்க்கவியலாத சக்தியாகத் தொடர, தமிழக மக்கள் பெரும் ஆதரவளித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
நமது பிரதமர் அவர்களின் அடுத்த ஐந்து ஆண்டு கால ஆட்சி, நமது குழந்தைகளின் எதிர்காலத்தை முன்னிறுத்தியதாக அமையும். எங்கள் மீது நம்பிக்கை வைத்து, வாக்களித்துள்ள அனைவருக்கும், மீண்டும் ஒரு முறை நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழக மக்கள் நலனுக்கான குரலாய், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குரலும், தமிழக பாஜகவின் குரலும் தொடர்ந்து ஒலிக்கும்.
தேர்தல் பணிகளில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு, தன்னலமின்றி கடுமையாக உழைத்த தமிழக பாஜக சொந்தங்கள், தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சித் தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அனைவருக்கும் தலைவணங்கி நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். வரும் காலங்களில், நமது மக்கள் நலனுக்கான நமது உழைப்பை இரட்டிப்பாக்குவோம். நம் உழைப்பிற்கு, நமது மக்கள் நிச்சயம் அங்கீகாரம் அளிப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.” என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications