குலத்தொழில் vs பிராமணர்.. பிடிஆர் பேச்சுக்கு நாராயணன் திருப்பதி கொடுத்த பதிலடி
சென்னை : பிரதமர் நரேந்திர மோடியால் விரைவில் துவங்கி வைக்கப்பட உள்ள விஸ்வகர்மா திட்டத்திற்கு எதிராக பேசிய தமிழக அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு தமிழக பாஜக துணை தலைவர் திருப்பதி நாராயணன் பதிலடி கொடுத்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி தனது சுதந்திர தின உரையில் அறிவித்த படி PM Vishwakarma என்ற பெயரில் திட்டம் நாளை மறுதினம் தொடங்கி வைக்கப்பட உள்ளது. இந்த திட்டத்திற்கு 13,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பிரதமரின் விஸ்வகர்மா யோஜனா திட்டத்தின் கீழ் சேர்ந்தால், அந்த கைவினைக் கலைஞர்கள் மற்றும் கைவினைத் தொழிலாளர்களுக்கு 'பிரதமர் விஸ்வகர்மா சான்றிதழ்' மற்றும் அடையாள அட்டை வழங்கப்படும். மேலும் முதல் தவணையாக ரூ. 1 லட்சம் வரை வட்டியில்லாக் கடன் அவர்களுக்குவழங்கப்படும். பிறகு இரண்டாம் தவணையாக ரூ. 2 லட்சம் வரை 5% வட்டியுடன் கடன் வழங்கப்பட உள்ளது.
பிரதமரின் விஸ்வகர்மா யோஜனா திட்டத்தின் கீழ் கல் தச்சர்கள், காலணி தைப்பவர், காலணி செய்பவர், தச்சர், பொற்கொல்லர், குயவர், சிற்பிகள், கொத்தனார், கயிறு செய்பவர், முடி திருத்தும் தொழிலாளர், பூமாலைகள் கட்டுபவர், சலவைத் தொழிலாளர், டெய்லர் உட்பட, 18 வகையான தொழில்களில் ஈடுபடுவோர் பயன் பெற உள்ளார்கள்.
மேலும் பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தின் கீழ் தொழிற்கலைஞர்களுக்கு பயிற்சி வழங்கும் திட்டம் இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
அடிப்படைப் பயிற்சிகள், மேம்பட்ட பயிற்சிகள் என இரு விதங்களில் பயிற்சிகள் வழங்கப்படும் என்றும் இந்தப் பயிற்சி பெறுவோருக்கு தினமும் 500 ரூபாய் நிதியுதவியாக வழங்கப்படும் என்றும் பயிற்சி பெற்ற பின்னர் தொழிற்கருவிகளை வாங்க 15,000 ரூபாய் நிதியுதவியாக வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் நாளை மறுதினம் பிரதமர் நரேந்திர மோடியால் விஸ்வகர்மா திட்டம் தொடங்கி வைக்கப்பட உள்ளது.
பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தை கடுமையாக விமர்சித்த தமிழக அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், குலக்கல்வி மாடலின் மறுவடிவம் என்றார். இது தொடர்பாக அண்மையில் அவர் பேசிய வீடியோவில், குலக்கல்வி என்ற மாடலை, அதாவது அப்பா செய்ததைதான் நாம் செய்ய வேண்டும் என்பதை உடைத்துக்காட்டியதே அந்த உயர் ஜாதியினர் தான்.
அர்ச்சகர்களாக இருந்தவர்களுக்கு என்றைக்கு முன்சீப் வேலையும், கலெக்டர் வேலையும்,நீதிபதி வேலையும், ஆடிட்டர் வேலையும், பேங்க் வேலையும், வக்கீல் வேலையும் கிடைத்ததோ, அதைவிட்டுவிட்டு அவர்கள் அங்கே போய்விட்டார்கள். அப்படி என்றால், நீங்கள் பிறந்ததற்கும், செய்யும் வேலைக்கும் சம்பந்தம் இல்லை என்று நமக்கெல்லாம் எடுத்துக்காட்டாக இருந்தவர்கள் உயர் ஜாதியினர்.
ஆனால் இன்னுமே நம்மிடம் வந்து குலக்கல்வி கொண்டு வந்து அப்பா செய்ததைதான் செய்ய வேண்டும் என்று சொல்வது எப்படி நியாயம் என்று நாம் கேட்போம்" இவ்வாறு பிடிஆர் கூறியிருக்கிறார்.
இதற்கு பதிலடி கொடுத்துள்ள பாஜக மாநில துணை தலைவர் திருப்பதி நாராயணன், அப்படியானால், குலத்தொழிலை பின்பற்ற வேண்டிய அவசியமில்லை என்று உணர்த்தியவர்கள் பிராமணர்கள் என்று தானே அர்த்தம்?
தங்கள் குலத்தொழிலான அர்ச்சகர் தொழிலை விட்டு சட்டம் உள்ளிட்ட பணிகளுக்கு பிராமணர்கள் சென்றதால் அந்த தொழிலுக்கு மற்ற ஜாதியினர் சென்று விட்டனர் என்று தானே பொருள்?
3. 3% உள்ள ஜாதியினர் அனைத்து அரசுப்பணியிலும் இருக்க வாய்ப்பில்லை. அப்படி இருந்தால் அவர்கள் 3% இல்லை, 30% உள்ளனர் என்றே கருதப்படும். 3% என்பது பொய்யா?
அப்படியானால், கடந்த 60 வருடங்களாக பிராமணர் அல்லாதவர்கள் படித்தவர்கள் என்று மார் தட்டி கொள்ளும் திராவிட மாடலுக்கு ஒரு கேள்வி? ஏன் படித்த பிராமணர் அல்லாதவர்கள் அர்ச்சகர்களாக கருவறைக்குள் இருக்கவில்லை? 97% இருந்தும், முழு பெரும்பான்மை இருந்தும், ஆட்சி, அதிகாரம் இருந்தும் ஏன் நடக்கவில்லை? ஏன் என்றால், விரும்பவில்லை. ஏன் விரும்பவில்லை என்றால், அந்த தொழிலில் வருமானம் இல்லை.
இந்தியா முழுவதும் மற்ற மாநிலங்களில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர்களாக உள்ளார்கள். தமிழகத்தில் 60 ஆண்டு கால திராவிட மாடல் ஆட்சியில் மட்டும் தான் அது நடைபெறவில்லை." இவ்வாறு கூறியுள்ளார்,.












Click it and Unblock the Notifications