விண்வெளி அதிசயங்களை இனி சென்னையிலிருந்து பார்க்க முடியும்.. தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு!
சென்னை: விண்வெளி அதிசயங்களை சென்னையிலிருந்து கண்டுகளிக்கும் வகையிலும், மாணவர்களுக்கான அறிவியல் ஆர்வத்தை தூண்டும் வகையிலும், சென்னையில் ரூ.100 கோடி மதிப்பீட்டில் அறிவியல் மையம் அமைக்கப்படும் என்று தமிழக அரசு பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
சிங்கப்பூர் அறிவியல் மையத்துடன் இணைந்து நவீன முறையில் இந்த மையம் வடிவமைக்கப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்திருக்கிறார்.

பட்ஜெட் தாக்கலின்போது இது குறித்து அவர் பேசியதாவது, "மாணவர்களிடையே அறிவியல் சிந்தனை வளர்த்திடவும், இளைய தலைமுறையினருக்கு புதிய தொழில்நுட்பங்களை தொடர்ந்து அறிமுகம் செய்து வைக்கும் நோக்கத்தோடு, சிங்கப்பூர் அறிவியல் மையத்துடன் இணைந்து நவீன முறையில் வடிவமைக்கப்பட்ட சென்னை அறிவியல் மையம் உருவாக்கப்படும்.
இம்மையத்தில் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் மட்டுமன்றி விண்வெளி, வானவியல் துறைகளின் மெய்நிகர் மாதிரிகளும் இடம்பெறும். குழந்தைகளுக்கான அறிவியல் பூங்கா, நவீன வானவியல் தொலைநோக்கு வசதிகள் ஆழ்கடல் உயிரினங்கள் மற்றும் விண்வெளி நகர்வுகளை ஆழ்ந்து உணரக்கூடிய டிஜிட்டல் திரை அனுபவ அரங்குகள், அறிவியல் மாநாட்டு கூடங்கள், பார்வையாளர்களுக்கான பசுமை புல்வெளி என அனைத்து வசதிகளும் கூடிய பிரம்மாண்ட 'சென்னை அறிவியல் மையம்' 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் மற்றும் அரசு பங்களிப்புடன் உருவாக்கப்படும்.
நாள்தோறும் மாறிவரும் தொழில்நுட்பம், புதிய கண்டுபிடிப்புகள், புத்தாக்க சிந்தனை தொழில்துறை வளர்ச்சி ஆகியவற்றிற்கு ஆணிவேராகவும் அடித்தளமாக இருப்பது அடிப்படை அறிவியல். காலநிலை மாற்றம் உலக வெப்பமயமாதல், புதுப்பிக்கத்தக்க மின்சக்தி சேமிப்பு தேவை, உலகெங்கும் பரவி வரும் நோய்கள் என பல்வேறு சவால்கள் உருவாகி வருகின்றன.
இவைகளுக்கான தீர்வுகளை நோக்கிய பயணத்தில்.. புதிய பார்வையுடன் அணுகும் அடிப்படை அறிவியல் ஆராய்ச்சிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட துறைகளின் வளர்ச்சியில் தமிழ்நாடு சிறந்து விளங்குவதை போன்று, அடிப்படை அறிவியல் மற்றும் கணித ஆராய்ச்சி சூழலும் தமிழ்நாட்டில் மேம்பட வேண்டும் என்று கல்வியாளர்கள் கருதுவதை நமது அரசு கவனமாக பரிசீலித்து.. தமிழகத்தில் சென்னை மற்றும் கோவையில் 2 அடிப்படை அறிவியல் மற்றும் ஆராய்ச்சி மையங்களை Indian institute of science, Tata institute of science போன்ற நாட்டின் புகழ் பெற்ற ஆய்வு நிறுவனங்களுடன் இணைந்து உருவாக்கிட 100 கோடி ரூபாய் நிதி வழங்கப்படும்" என்று கூறியுள்ளார்.
இந்த அறிவிப்பு சென்னை மக்களுக்கு வரபிரசாதமாக அமைந்திருக்கிறது. சென்னையில் பிர்லா கோளரங்கம் இருந்தாலும் கூட, சில வானியல் அதிசயங்களை பார்ப்பதற்கு அது போதுமானதாக இல்லை என்று சொல்லப்பட்டு வருகிறது. எனவே சென்னைக்கு அருகே திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வைனு பாப்பு கோளரங்கத்துக்குதான் மக்கள் அதிகம் செல்கின்றனர். இங்குள்ள மிகப்பெரிய தொலை நோக்கிய கொண்டு பல்வேறு வானியல் அதிசயங்களை பார்க்க முடியும்.
இந்நிலையில் சென்னைியல் அறிவியல் மையம் அமைக்கப்படும் என்கிற அறிவிப்பு, வைனு பாப்பு கோளரங்கத்திற்கு மாற்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மக்கள் இனி சென்னையிலேயே வானியல் அதிசயத்தை கண்டு களிக்கலாம்.












Click it and Unblock the Notifications