தமிழக பட்ஜெட் 2025: மூன்றாம் பாலினத்தவருக்கு மாதம் ரூ.1000..ஊர்காவல் படையில் வேலை! சூப்பர் அறிவிப்பு
சென்னை: பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே 2025-2026ஆம் நிதியாண்டுக்கான பொது பட்ஜெட்டை தமிழக சட்டசபையில் தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். இந்நிலையில், மூன்றாம் பாலினத்தவரின் சமூக மேம்பாட்டை உறுதி செய்ய உயர்கல்வி செல்லும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் எனவும், ஊர்க்காவல் படையில் மூன்றாம் பாலினத்தவர்களை இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று 2025-2026 ஆம் நிதி ஆண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முதல் நாளான இன்று தமிழகத்தின் பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்துள்ளார்.

நாளை வேளாண் துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்படும்.
எனவே தேர்தலுக்கு முன்பாக திமுக அரசின் முழு பட்ஜெட் இது. இந்நிலையில் 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு இந்த பட்ஜெட்டில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. சொன்னது போல பல முக்கிய அம்சங்கள் பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ளது. எல்லார்க்கும் எல்லாம் என்ற முழக்கத்தோடு இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதாக நிதியமைச்சர் தங்கம் கூறி தனது பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
இந்த பட்ஜெட்டில் மகளிர் நலன் சார்ந்த பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. ஏற்கனவே தமிழ் புதல்வன், புதுமைப் பெண் திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் அரசு கல்லூரிகளில் பயின்று உயர் கல்வி பயிலும் மாணவர்கள் மாணவ, மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் உயர் கல்வி பயிலும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு.
மேலும் காவல்துறைக்கு உதவுவதற்காக ஊர்க்காவல் படை தமிழகத்தில் செயல்பட்டு வருகிறது. இவர்கள் திருவிழா காலங்கள் மற்றும் பிற நிகழ்வுகளின் போது பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். தற்போது ஆண்களும் பெண்களும் ஊர்க்காவல் படையில் பணியாற்றி வரும் நிலையில் இந்த நிதியாண்டில் ஊர்க் காவல் படையில் மூன்றாம் பாலினத்தவர்களையும் இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், சென்னை மற்றும் தாம்பரத்தில் முதற்கட்டமாக மூன்றாம் பாலினத்தவர் ஊர்க்காவல் படையில் இணைக்கப்படுவார்கள் என்று அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார்.
மேலும் ஏற்கனவே ஊர்க்காவல் படையில் பணியாற்றி வருபவர்களுக்கு இணையான ஊதியம் அவர்களுக்கு வழங்கப்படும் என்று அறிவிப்பையும் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தனது பட்ஜெட் உரையில் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications