ரேஷன் கார்டுக்கு ரூ.1000 குறித்து ஆலோசனை? முதல்வர் தலைமையில் ஜன.4ஆம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம்
சென்னை: தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் ஜன.4ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சில மாதங்களாகவே தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படும் எனக் கூறப்பட்டு வந்த நிலையில், அந்த மாற்றம் கடந்த வாரம் தான் நடைபெற்றது. உதயநிதி 35ஆவது அமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டார்.
அவர் மட்டுமில்லாமல், சீனியர் அமைச்சர்களின் துறைகளும் கூட மாற்றப்பட்டன. முத்துசாமி, பெரியகருப்பன், ஐ பெரியசாமி, ராஜகண்ணப்பன், காந்தி, பிடிஆர், மெய்யநாதன், மதிவேந்தன், சேகர்பாபு, ராமச்சந்திரன் என மொத்தம் 11 இலாக்காக்கள் மாற்றப்பட்டன.

உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞர் நலன், விளையாட்டுத்துறை வழங்கப்பட்டது. அதேபோல் சிறப்புத் திட்டச் செயலாக்கம் துறையும் உதயநிதிக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்தச் சூழலில் வரும் 4ஆம் தேதி தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் நடைபெறுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் ஜன. 4ஆம் தேதி காலை 11 மணிக்கு முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இந்த அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது.
இதில் பொங்கல் பரிசு பணம் ரூபாய் 1000 வழங்குவது குறித்து ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்தாண்டு ஆளுநர் உரையுடன் சட்டசபை கூட்டத் தொடர் தொடங்கும் நிலையில், ஆளுநர் உரையில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்தும் விவாதிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.
மேலும், அப்போது நடக்கும் சட்டசபை கூட்டத் தொடரில் தாக்கல் செய்ய வேண்டிய மசோதாக்கள் குறித்தும் அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications