பெங்களூரை போல் தமிழகத்தையும் சிலிக்கான் வேலியாக மாற்றலாம்: டெய்லி ஹண்ட் செயல் இயக்குநர் ராவணன்
சென்னை: நாம் அனைவரும் இணைந்தால் தமிழ்நாட்டையும் சிலிக்கான் வேலியாக மாற்ற முடியும் என்று டெய்லிஹண்ட் செயல் இயக்குநர், ஒன் இந்தியாவின் தலைமை செயல் அதிகாரி ராவணன் நம்பிக்கை தெரிவித்தார்.
தமிழ்நாடு அரசு சார்பில் சென்னையில் UmagineTN 2025 வர்த்தக மாநாடு நேற்று தொடங்கியது. முதல்வர் ஸ்டாலின் இந்த மாநாட்டை தொடங்கி வைத்தார். தமிழ்நாட்டை ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்ற தமிழக அரசு முயன்று வருகிறது. அதற்கு வலு சேர்க்கும் வகையில் இந்த மாநாடு என்பது நடத்தப்பட்டது.

சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நேற்றும், இன்றும் மாநாடு நடந்தது. தொழில்துறை நிபுணர்கள், தொழிலதிபர்கள் பங்கேற்றனர். பல்வேறு துறை சார்ந்த அரங்குகள் அமைக்கப்பட்டு இருந்தன. மாணவர்கள் ஆர்வமாக வந்து அரங்குகளை பார்வையிட்டனர்.
இந்த UmagineTN 2025 மாநாட்டில் டெய்லிஹண்ட் செய்தி தளத்தின் செயல் இயக்குநர், ஒன் இந்தியா இணையதளத்தின் தலைமை செயல் அதிகாரி ராவணன் பங்கேற்றார். அதன்பிறகு அவர் UmagineTN 2025 போன்ற நிகழ்ச்சிகள் எவ்வளவு முக்கியம்?அந்த நிகழ்ச்சி ஏற்படுத்தும் தாக்கம் பற்றி எடுத்துரைத்தார். இதுதொடர்பாக அவரிடம் ஒன் இந்தியா செய்தி தளத்தில் பத்திரிகையாளர், "UmagineTN 2025' போன்ற நிகழ்ச்சி தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும், தொழில்நுட்ப வளர்ச்சிக்கும் எந்த அளவுக்கு உதவியாக இருக்கும்?'' என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு ராவணன், ‛‛சில மாநிலங்களில் அரசு சப்போர்ட் இன்றியே சில மாநிலங்கள் முன்னேறுகின்றன. உதாரணமாக பெங்களூர். பெங்களூரில் டெக்னாலஜியை பொறுத்தவரை நல்ல ஆர்கானிக் வளர்ச்சி என்பது இருந்துள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தவரை கல்விக்கான தலைநகராக உள்ளது. இங்கிருந்து டெக்னாலஜி சார்ந்த திறமைசாலிகள் வெளியே செல்கின்றனர். இந்த மாதிரியான திறமைசாலிகளை தமிழ்நாட்டிலேயே தக்கவைக்க ஒரு தொடக்கத்தை நாம் செய்ய வேண்டும்.

இதுபோன்ற நிகழ்வுகளின்போது சாதகமான விஷயம் என்னவென்றால் தமிழ்நாட்டில் இருந்து மக்கள் வருகின்றனர். ஐடி துறையில் சப்போர்ட், கட்டமைப்பு இருந்தால் இங்கே இருக்கலாம். 25 ஆண்டுகளுக்கு முன்பு நாம் எப்படி டைடல் பார்க் எனும் கான்செப்ட்டை ஆரம்பித்தோம். அது இந்தியாவுக்கே முன்னோடியான கான்செப்ட். அதுபோன்று இன்று தொடங்கி உள்ளோம். இன்று வந்த பேச்சாளர்களும் சரி, மாணவர்கள் சரி திறமைசாலிகளாக உள்ளனர்'' என்றார்.
அதன்பிறகு, ‛‛இப்போது நிறைய ஸ்டார்ட்அப் மற்றும் முத்திரை பதித்த நிறுவனங்கள் வருகின்றன. அவர்களுக்கு எந்த மாதிரியான வாய்ப்புகளை உருவாக்கி கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?'' என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு ராவணன், ‛‛பெங்களூரை உதாரணத்துக்கு எடுத்து கொள்கிறேன். பெங்களூரில் ஸ்டார்ட்அப் செழித்து வளர்ந்து வருகிறது வருவதற்கான சூழல் உள்ளது. திறமையாளர்கள், மூலதன முதலீடு, ரிசோர்சஸ் உள்ளிட்டவை ஒன்றாக கிடைக்கிறது. இதனால் தான் சிலிக்கான் வேலி என்று கூறுகிறோம்.
நான் நினைக்கிறேன் தமிழ்நாட்டையும் சிலிக்கான் வேலியாக மாற்றுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளது. இதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். அனைத்து துறை நிபுணர்களும், அரசு, மூலதன முதலீடு உள்ளிட்டவற்றை ஒன்றாக இணைத்தால் தமிழ்நாட்டையும் சிலிக்கான் வேலியாக மாற்ற முடியும். பெங்களூரை விட சிறப்பான வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும்'' என்றார்.
இதையடுத்து, ‛‛நிறைய இளைஞர்கள், மாணவர்களை இங்கே பார்க்கிறது. இது அவர்களுக்கு எவ்வளவு முக்கியம்?'' என்ற கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு ராவணன், ‛‛நாம் படிக்கும்போது இதுபோன்ற வாய்ப்பு என்பது கிடைக்கவில்லை. இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்கும்போது அவர்களுக்கு உத்வேகம் பிறக்கும். இப்போது கல்லூரி முடித்தவர்கள் ஸ்டார்ட்அப் தொடங்குகின்றனர். இன்னும் சிலர் கல்லூரி படிக்கும்போதே ஸ்டார்ட்அப் தொடங்குகின்றனர். அவர்களிடம் இருந்து உத்வேகம் கிடைக்கும். மாற்றி யோசிக்க தூண்டப்படுவார்கள். புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பொருளாதார வளர்ச்சிக்கு தொழில் முனைவோராக மாறுவது மிகவும் முக்கியம். இது உண்மையில் அவர்களுக்கு உத்வேகமாக இருக்கும் என்று பார்க்கிறேன்.
டெக்னாலஜி இப்போது ரொம்ப வேகமாக வளர்ந்து வருகிறது. 5 ஆண்டுகளுக்கு முன்பு க்ளவுட் பற்றி பேசினோம். இப்போது புதிய டெக்னாலஜிகள் வந்துவிட்டது. ஏஐ தொழில்நுட்பத்தால் வரும் காலத்தில் தொழில் துறையில் பாசிட்டிவ்வான மாற்றம் நிகழும். ஏஐ-யால் பலருக்கும் வேலை போகும் என்பது இல்லை. ஏஐ-யால் பிசினஸ் 3X, 4X ஆகிவிடும். அதற்கு நாம் ரெடியாக இருக்க வேண்டும்'' என்றார்.












Click it and Unblock the Notifications