பிரதமரை நேரில் சந்திப்பதற்காக டெல்லி புறப்பட்டார் முதல்வர் ஸ்டாலின்.. “பச்சைக்கொடி" காட்டுவாரா மோடி?
சென்னை: பிரதமர் மோடியை சந்திப்பதற்காக, தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுள்ளார். நாளைய தினம் பிரதமர் மோடியை சந்தித்து பேசுகிறார் முதல்வர் ஸ்டாலின். இந்த சந்திப்பின்போது, மெட்ரோ 2 ஆம் கட்ட திட்டம் உள்ளிட்ட சில முக்கிய திட்டங்களுக்கான நிதியை விடுவிக்கக் கோரி பிரதமரிடம் முதல்வர் வலியுறுத்த உள்ளதாகத் தெரிகிறது.
கடந்த ஒருவார காலமாகவே பிரதமர் மோடியை முதல்வர் ஸ்டாலின் சந்திக்க நேரம் கேட்டிருந்த நிலையில், பிரதமர் தரப்பில் இருந்து அப்பாயின்மென்ட் வழங்கப்படாமலேயே இருந்தது.

பயண ஏற்பாடு: ஏனென்றால், 21 முதல் 24-ம் தேதி வரை பிரதமர் வெளிநாடு பயணம் சென்றிருந்ததால் இந்த பயண ஏற்பாடு தள்ளி போனது. இறுதியில், நேற்று அதாவது 25-ம்தேதி நேரம் ஒதுக்கியிருப்பதாக முதலில் தகவல் வெளியானது. பிறகு இன்றைய தினம் 26ம் தேதி, முதல்வர் டெல்லி செல்வதாக உறுதி செய்யப்பட்டது.
திமுகவின் பவளவிழா கொண்டாட்டங்கள் குறித்து முதல்வர் ஸ்டாலின், திமுக தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்திலும், பிரதமரை இன்றைய தினம் சந்திக்க டெல்லி செல்லவிருப்பதாக பதிவிட்டிருக்கிறார். தமிழ்நாட்டுக்கான திட்டங்களை நிறைவேற்றிட ஒன்றிய அரசு தர வேண்டிய நிதியை வலியுறுத்திப் பெறவிருக்கிறேன் என்றும் அந்த கடிதத்தில் மேலும் தெரிவித்திருந்தார்.
பிரதமர் மோடி: அந்தவகையில், நாளைய தினம் 27ம் தேதி, பிரதமரை சந்தித்து பேசுகிறார் முதல்வர் ஸ்டாலின்.. அப்போது தமிழக நலன் சார்ந்த பல்வேறு அம்சங்கள் அடங்கிய கோரிக்கை மனுவையும் பிரதமரிடம் முதல்வர் ஸ்டாலின் வழங்கி வலியுறுத்துவார் என்றே தெரிகிறது.
அதேபோல, மெட்ரோ ரயில் திட்ட நிதி தொடர்பாகவும், பள்ளிக்கல்வியில் புதிய கல்விக் கொள்கையை ஏற்பது குறித்தும் வலியுறுத்தும் ஸ்டாலின், தன்னுடைய வெளிநாட்டு பயணம் குறித்தும், பிரதரிடம் விளக்கமாக எடுத்துரைப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
நாளை சந்திப்பு: இதனிடையே, முதல்வர் ஸ்டாலினின் டெல்லி பயணம் குறித்த நிகழ்வுகள் வெளியாகியிருக்கிறது.. டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தங்குகிறார்.. வரும் 27ம் தேதி காலை 11 மணிக்கு பிரதமர் மோடியை முதல்வர் ஸ்டாலின் சந்திக்க உள்ளார். அப்போது, தமிழக நலன் சார்ந்த திட்டங்களுக்கு நிதி ஒதுக்கும்படி வலியுறுத்துவதோடு, விரிவான கோரிக்கை மனு ஒன்றையும் பிரதமரிடம் வழங்க உள்ளார்.
குறிப்பாக, சென்னை மெட்ரோ ரெயில் 2-ம் கட்ட பணிகளுக்கும் புதிய கல்விக் கொள்கை அடிப்படையில் வழங்க வேண்டிய நிதியை விடுவிக்க கோரியும் பிரதமரிடம் நேரில் வலியுறுத்த உள்ளார். அந்தவகையில், தமிழக கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்றுமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை: இந்த சந்திப்பு முடிந்ததும், அன்றைய தினம் மாலையே முதலமைச்சர் ஸ்டாலின் சென்னை திரும்புகிறார். அதன் பிறகு வரும் 28ம் தேதி ராணிப்பேட்டை மாவட்டம் செல்லும் முதலமைச்சர் ஸ்டாலின் 9 ஆயிரம் கோடியில் அமைய இருக்கும் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஜாகுவார், லேண்ட் ரோவர் கார் உற்பத்தி ஆலைக்கு அடிக்கல் நாட்டுகிறார்.












Click it and Unblock the Notifications