நாளுக்கு நாள் வெளிவரும் மோசடிகள்..சமூக நீதிக்கு எதிரான நீட் தேர்வு! ஒரே போஸ்டில் விமர்சித்த ஸ்டாலின்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சமூக நீதிக்கு எதிரான நீட் தேர்வை ஆதரிப்பதை ஒன்றிய அரசு நிறுத்த வேண்டும் எனவும், நீட் விவகாரத்தில் எழுந்துள்ள சர்ச்சைகள் அதன் சமத்துவமின்மையை காட்டுகிறது என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

நேசனல் டெஸ்டிங் ஏஜென்சி எனப்படும் தேசிய தேர்வு முகமை எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளங்கலை மருத்துவப்படிப்புகளுக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வை கடந்த மே மாதம் 5ஆம் தேதியன்று நடத்தியது.

Mk Stalin NEET 2024 NTA DMK 2024

நாடு முழுவதும் 557 நகரங்கள் மற்றும் 14 வெளிநாடுகளில் நீட் மே 5ஆம் தேதியான அன்று தேர்வு பிற்பகல் 2 மணி முதல் மாலை 5:20 மணி வரை நடைபெற்றது. சுமார் 24 லட்சம் மாணவர்கள் இந்த தேர்வுக்கு விண்ணப்பித்த நிலையில் 23 லட்சம் பேர் வரை தேர்வில் கலந்து கொண்டனர்.

தமிழகத்தில் மட்டும் சுமார் ஒன்றரை லட்சம் மாணவர்கள் தேர்வை எழுதுகின்றனர். இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேசிய தேர்வுகள் முகமை செய்திருந்த நிலையில் பெரிய அளவில் தமிழகத்தில் முறைகேடுகள் இல்லாமல் நடைபெற்றது. அதே நேரத்தில் பல மாநிலங்கள் முறைகேடுகள் நடந்ததாக புகார்கள் எழுந்தன.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் நீட் தேர்வு முடிவுகள் வெளியாயின. அதாவது மே மாதம் 5 ஆம் தேதி தேர்வுகள் நடைபெற்ற நிலையில், தேர்வுக்கான முடிவுகள் கடந்த ஜூன் 5ஆம் தேதி வெளியானது. அதில் 13,16,268 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். அதாவது 56.41% சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாகவும், இந்த தேர்ச்சி சதவீதம் கடந்த ஆண்டை விட 0.2% சதவீதம் அதிகமாகும் என என்டிஏ கூறியிருந்தது.

இதற்கிடையே இந்த ஆண்டு வெளியான முடிவுகளிலும், தேர்விலும் முறைகேடு நடந்துள்ளதாக பரபரப்பு புகார் எழுந்துள்ளது. நாடு முழுவதும் உள்ள 67 மாணவர்கள் முழு மதிப்பெண்கள் எடுத்து முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ள நிலையில், நடந்து முடிந்த நீட் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக மாணவர்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். அதாவது, ஹரியானா மாநிலத்தில் ஒரே மையத்தில் தேர்வு எழுதிய 6 பேர் 720 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்ததால் சர்ச்சை எழுந்தது. இதுதொடர்பாக நீதிமன்றத்திலும் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த நிலையில் குஜராத் மாநிலத்தில் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த நீட் தேர்வு மையத்தில் மோசடி எழுந்ததாக புகார் எழுந்துள்ளது. அங்கு தேர்வு எழுதிய மாணவர்களின் தேர்வு தாள்களில் பதில் எழுதித் தருவதாக கூறி மாணவர்களிடம் தலா 10 லட்சம் ரூபாய் பேரம் பேசப்பட்டதாகவும் சுமார் இரண்டரை கோடி ரூபாய் வரை பணமும் காசோலைகளும் கைமாறியதாக ரகசிய தகவல் கிடைத்தது. இது தொடர்பான விசாரணையில் நீட் தேர்வு மையமாக இருந்த பள்ளியின் முதல்வர் புருஷோத்தம் சர்மா உள்ளிட்ட ஐந்து பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் காசோலைகளையும் போலீசார் பறிமுதல் செய்திருக்கின்றனர்.

குஜராத்தில் நீட் மோசடி குறித்து வெளிவந்துள்ள செய்தியை பகிர்ந்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சமூக நீதிக்கு எதிரான நீட் தேர்வை ஆதரிப்பதை ஒன்றிய அரசு நிறுத்த வேண்டும் என கூறியுள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்," நீட் சுற்றி நடந்து வரும் சர்ச்சைகள் அதன் அடிப்படையில் சமத்துவமின்மை தன்மையை எடுத்துக்காட்டுகின்றன. பல்லாயிரம் ஆண்டுகளாக கல்வி மறுக்கப்பட்டு வரும் சமுதாயத்தில், ஒடுக்கப்பட்டோர் முன்னேற்றத்திற்கு அதிக வாய்ப்புகளை வழங்க வேண்டும்.

மாறாக, அத்தகைய மாணவர்களின் வாய்ப்பை நீட் தடுக்கிறது. தேசிய தேர்வு முகமைக்கு (NTA) மத்திய கல்வி அமைச்சர் தற்காப்பு தெரிவித்த போதிலும், சமீபத்திய நிகழ்வுகள் வித்தியாசமான படத்தை வரைகின்றன. பல கோடி ரூபாய் மதிப்பிலான காசோலைகள் மற்றும் எட்டு வெற்று காசோலைகளை உள்ளடக்கிய பண பலன்களுக்காக ஓஎம்ஆர் தாள்களை கண்காணிப்பாளர்கள் சேதப்படுத்தியதாக குஜராத் காவல்துறை எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளது.

ஒரு பள்ளி முதல்வர், ஒரு இயற்பியல் ஆசிரியர் மற்றும் பல நீட் பயிற்சி மையங்கள் சம்பந்தப்பட்ட இந்த சதி, முறையான மாற்றத்திற்கான அவசரத் தேவையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. அனிதா முதல் எண்ணற்ற மாணவர்கள் வரை பரிதாபகரமாகத் தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டதை நாம் நேரில் பார்த்திருக்கிறோம்.

தகுதியின் அளவுகோலாகக் கருதப்படும் நீட் தேர்வு, சமூகத்தின் அனைத்து மட்டங்களையும் பாதிக்கும் ஒரு பரவலான மோசடியாக மீண்டும் மீண்டும் தன்னை வெளிப்படுத்தியுள்ளது. இந்த மாணவர் விரோத, சமூக நீதிக்கு எதிரான, ஏழைகளுக்கு எதிரான நீட் தேர்வை பாதுகாப்பதை மத்திய அரசு நிறுத்த வேண்டும்" என கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+