நிறவெறிக்கு எதிராக போராடிய பிஷப் டெஸ்மண்ட் மறைவு: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்
சென்னை: மிகச்சிறந்த தலைவரும், கருப்பின மக்களின் போராளியுமான, அமைதிக்கான நோபல்பரிசு பெற்ற டெஸ்மண்ட் டுட்டுவின் மறைவுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின், பிரதமர் நரேந்திரமோடி உள்ளிட்ட பலர் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.
தென் ஆப்பிரிக்காவில் கருப்பின மக்களை அடிமைப்படுத்தியவர்களுக்கு எதிராக போராடிய நெல்சன் மண்டேலாவின் சமகாலத்தவர் டெஸ்மண்ட் டுட்டு . கருப்பின மக்களுக்காக நெல்சன் மண்டேலா போலவே அமைதி வழியில் போராடிய அவருக்கு உலகின் உயர்ந்த விருதாக கருதப்படும் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
நெல்சன் மண்டேலா தென்னாப்பிரிக்காவின் முதல் கறுப்பின அதிபராக பதவியேற்றபோது வானவில் தேசம் என்ற சொல்லாடலை உருவாக்கி பிரபலப்படுத்தியவர் டுட்டு. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக உடல்நலக் குறைவால் பொதுநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை டெஸ்மண்ட் டுட்டு தவிர்ந்து வந்தார். இந்நிலையில் அவரது உடல்நிலை மோசமானதை அடுத்து சிகிச்சையில் இருந்த அவர் காலமானார். அவருக்கு வயது 90.

கண்ணீர் அஞ்சலி
மிகச்சிறந்த தலைவரும், போராளியுமான டெஸ்மண்ட் டுட்டுவின் மறைவையடுத்து தென் ஆப்பிரிக்க நாடே சோகத்தில் மூழ்கியுள்ளது. அந்நாட்டு மக்கள் தங்கள் கண்ணீர் அஞ்சலியை செலுத்தி வரும் நிலையில் உலக தலைவர்கள் பலரும் தங்கள் இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

முதல்வர் ஸ்டாலின் இரங்கல்
டெஸ்மண்ட் டுட்டுவின் மறைவையடுத்து இரங்கல் தெரிவித்துள்ள தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பதிவில், தென் ஆப்பிரிக்காவில் நிறவெறிக்கு எதிராகப் போராடியவரும்; உள்நாட்டுப் போரின்போது அப்பாவித் தமிழர்களைக் கொன்று குவித்த இலங்கை அரசிற்கு எதிராக 2013ம் ஆண்டு அந்நாட்டில் நடந்த காமன்வெல்த் மாநாட்டை உலகத் தலைவர்கள் புறக்கணிக்க வேண்டும் என வெளிப்படையாகத் தமிழர்களுக்கு ஆதரவாகப் பேசியவரும்; மனித உரிமைச் செயல்பாடுகளுக்காக அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவருமான பேராயர் #DesmondTutu அவர்களின் மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். நிறவெறி - இனவெறிக்கு எதிராக அவர் நடத்திய அறப்போர், வன்முறையால் சிக்குண்டுத் தவிக்கும் உலகிற்கு வழிகாட்டட்டும்! என பதிவிட்டுள்ளார்.

பிரதமர் மோடி இரங்கல்
டெஸ்மண்ட் டுட்டு மறைவிற்கு பிரதமர் நரேந்திர மோடியும் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் ட்விட்டர் பதிவில், '' எமெரிட்டஸ் ஆர்ச்பிஷப் டெஸ்மண்ட் டுட்டு, உலகம் முழுவதும் எண்ணற்ற மக்களுக்கு வழிகாட்டும் விளக்காகத் திகழ்ந்தவர். மனித கண்ணியம் மற்றும் சமத்துவத்துக்கான அவரது வலியுறுத்தல் என்னென்றும் நினைவில் கொள்ளத்தக்கது. அவரது மறைவால் நான் மிகவும் வருத்தமடைந்துள்ளேன். அவரது ஆதரவாளர்கள் அனைவருக்கும் எனது இதயபூர்வமான இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா அமைதியுறுவதாக.'' என்று கூறியுள்ளார்.

பிரபலங்கள் இரங்கல்
பிஷப் டெஸ்மண்ட் டுட்டுவின் மறைவுக்கு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல்காந்தி, மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸ், அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஓபாமா, அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற மலாலா, பாகிஸ்தான் அதிபர் இம்ரான் கான், தென் ஆப்பிரிக்க அதிபர் சிரில் ரமபோசா உள்ளிட்ட பலரும் தங்கள் இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications