ஆரம்பமே ஆக்ஷன்.. தமிழக தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா ஐஏஎஸ் போட்ட ஆர்டர்.. மலைத்த மாவட்ட கலெக்டர்கள்
சென்னை: பராமரிப்பின்றி கைவிடப்பட்ட மற்றும் செயலிழந்த திறந்தவெளி கிணறுகள், ஆழ்துளை கிணறுகள், கட்டுமானப் பள்ளங்கள் மற்றும் குவாரி குழிகளை கள ஆய்வு செய்து கண்டறிய வேண்டும் என்று தலைமை செயலாளர் மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு போட்டுள்ளார்.
தமிழகத்தின் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா ஐஏஎஸ், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் உத்தரவு ஒன்றினை பிறப்பித்துள்ளார். அந்த உத்தரவில் உள்ளதாவது:
"தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் பராமரிப்பின்றி கைவிடப்பட்ட, செயலிழந்த திறந்தவெளி கிணறுகள், ஆழ்துளைக் கிணறுகள் மற்றும் குவாரி குழிகள் ஆகியவை குறிப்பிடத்தக்க ஆபத்துக்களை ஏற்படுத்துகின்றன. சமீப காலமாக சில உயிரிழப்புகளும் நிகழ்ந்துள்ளன.

திறந்தவெளி கிணறுகள்: இதைக் கருத்தில் கொண்டு அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களும் தங்களது மாவட்டத்தில் உள்ள பராமரிப்பின்றி கைவிடப்பட்ட மற்றும் செயலிழந்த திறந்தவெளி கிணறுகள், ஆழ்துளைக் கிணறுகள், கட்டுமானப் பள்ளங்கள் மற்றும் குவாரி குழிகளை கள ஆய்வு செய்து கண்டறிய வேண்டும். அவற்றில் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
இதையொட்டி மாவட்டங்களிலுள்ள கைவிடப்பட்ட குவாரி குழிகள், குவாரி குழிகளால் ஏற்படும் அபாயத்தை உணர்ந்து குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் இதுபோன்ற குவாரி குழிகளில் தேங்கியுள்ள நீரில் குளிப்பதனால் ஏற்படும் விபத்தை தடுக்க பாதுகாப்பு பணிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். குத்தகை காலம் முடிந்து செயல்பாடின்றி கிடக்கும் குவாரி குழிகளை உரிய வேலி அமைத்து பாதுகாக்க சம்மந்தப்பட்ட குத்தகைதாரர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.
பணிகள்: இந்த பணிகளை மேற்கொள்ள மாவட்டத்திற்கென ஒதுக்கப்பட்டுள்ள பசுமை நிதி (Green Fund) மற்றும் மாவட்ட கனிம நிதியைப் (District Mineral Fund) பயன்படுத்திக் கொள்ளலாம். இதேபோல் சாலைகளில் செல்பவர்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு, சாலைப் பணிகளை மேற்கொள்ளும் போது ஏற்படும் குழிகள் மற்றும் பள்ளங்களை உரிய வலுவான பாதுகாப்பு தடுப்புகளை நிறுவ வேண்டும்.
எச்சரிக்கை பலகை மற்றும் எதிரொளிப்பான் (Reflectors) அமைக்க வேண்டும். கைவிடப்பட்ட ஆழ்துளை கிணறுகளின் பாதுகாப்பு குறித்து மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள் தொடர்பாக உச்ச நீதிமன்றம் 11.02.2010 மற்றும் 06.08.2010 ஆகிய தேதிகளில் பிறப்பித்த உத்தரவில் உள்ள அனைத்து விதிமுறைகளையும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.
இந்த பணிகளை திறம்பட செயல்படுத்திட மாவட்ட ஆட்சித் தலைவர்கள் தலைமையின் கீழ் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகள், ஒப்பந்ததாரர்கள் மற்றும் பங்குதாரர்கள் ஆகியோர்களை ஒருங்கிணைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
பாதுகாப்பு: இதுதொடர்பாக உரிய செயல் திட்டத்தை அரசுக்கு அறிக்கையாக வரும் 25.08.2023 தேதிக்குள் அளிக்க வேண்டும். மேற்குறிப்பிட்ட அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் 30.09.2023-க்குள் முடிக்க வேண்டும் என்று தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா ஐஏஎஸ் அந்த உத்தரவில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications