தஞ்சையில் ஜன 28-ல் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி மாநில மாநாடு! ஸ்டாலின் பங்கேற்பு
சென்னை: தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 28ஆம் தேதி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் - மஹல்லா ஜமாஅத் மாநில மாநாட்டிற்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்து கொள்கிறார் என பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அறிவித்துள்ளார்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பல்லாண்டு காலமாக மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு மாநாடுகளை நடத்தி, இஸ்லாமிய சமுதாயத்தின் இயற்கையான அமைப்புகள் மஸ்ஜிதுகளை மையமாக கொண்ட மஹல்லா ஜமாஅத்துகளே என்பதை வலியுறுத்தி வருகின்றோம்.

அனைத்து ஊர்களிலும் மஹல்லா ஜமாஅத்துக்களை கட்டமைப்புடன் வைக்க வேண்டும். பைத்துல் மால், ஷரீயத் சமரச மையம், ஓராசிரியர் பள்ளிக் கூடம் உருவாக்கி முன்மாதிரி மஹல்லா ஜமாஅத்துகளாக உருவாக்க வேண்டும் என்பதை நாம் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றோம். சிறந்த ஜமாஅத்துகளை கண்டறிந்து முன்மாதிரி மஹல்லா ஜமாஅத் என்ற விருதை மாநாடுகளில் வழங்கி வருகிறோம்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில கிளையின் சார்பில் மஹல்லா ஜமாஅத் மாநில மாநாடு வருகின்ற 28-01-2026 புதன்கிழமை மாலை 4 மணிளயவில் திருச்சி - கும்பகோணம் நெடுஞ்சாலையில், சுவாமி மலை பகுதியில் உள்ள மைதானத்தில் நடை பெறுகின்றது. இம்மாநாட்டில் தி.மு. கழக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான தளபதி மு.க. ஸ்டாலின் அவர்கள் வருகை தந்து சிறப்புரையாற்ற இசைவு தெரிவித்துள்ளார்.
இம்மாநாட்டிற்கு தமிழ் நாட்டிலுள்ள 7000-க்கும் மேற்பட்ட மஹல்லா ஜமாஅத் நிர்வாகிகளை பங்கேற்க செய்ய வேண்டும். மஹல்லா ஜமாஅத் கட்டமைப்பை வலுப்படுத்திடும் திட்டங்கள் இம்மாநாட்டில் அறிவிக்கப்பட இருக்கிறது.
இந்திய முஸ்லிம் சமுதாயம் சந்தித்து வரும் பிரச்சினை குறித்தும், 2026-ம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் சமுதாயம் செல்ல வேண்டிய பாதையை தெளிவுப்படுத்தும் மாநாடாகவும் இது அமையும். 28-01-2026 புதன்கிழமை கும்பகோணத்தில் நடைபெற இருக்கும் மஹல்லா ஜமாஅத் மாநில மாநாட்டை சிறப்பாக நடத்துவது குறித்து 19-11-2025 புதன்கிழமை காலை 11 மணிக்கு திருச்சி எல்கேஎஸ் அரிஸ்டோ மஹாலில் நடைபெற இருக்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில அவசர செயற்குழு கூட்டத்தில் முக்கிய ஆலோசனை நடைபெறுகிறது.
தாய்ச்சபை முஸ்லிம் லீகின் தன்னிகரில்லாத நிர்வாகிகள் களப்பணிகளாற்றி மஹல்லா ஜமாஅத் மாநில மாநாட்டை வெற்றி அடைய செய்திட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications