மாறுது களம்.. ஒரே நாளில் முதல்வர் ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி சென்னையில் பிரச்சாரம்.. எகிறும் ஆர்வம்
சென்னை: தமிழகம் முழுவதும் அரசியல் கட்சிகளின் அனல் பறக்கும் பிரசாரம் நாளை மறுநாள் மாலையுடன் முடிவடைய உள்ள நிலையில், முதல்வர் ஸ்டாலின் இன்று சென்னையில் தன்னுடைய பிரச்சாரத்தை துவங்குகிறார்.
தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வருகிற 19ம் தேதி தேர்தல் நடக்கிறது. பிரச்சாரத்திற்கு இன்னும் 2 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், நாளை மறுநாள் அதாவது 17ம்தேதி மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்கிறது.

தீவிரம்: இதனால் அனைத்து அரசியல் கட்சியினரும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் அனைத்து மாநில அரசியல் கட்சி தலைவர்கள், பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி வருகிறார்கள்.
அந்தவகையில், முதல்வர் ஸ்டாலினும் தமிழகம் முழுவதும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.. சென்னை மாதவரம் மஞ்சம்பாக்கத்தில் இன்று மாலை நடைபெறும் பிரமாண்ட தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார் முதல்வர் ஸ்டாலின்.
பிரச்சாரம்: திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில், வடசென்னை தொகுதி திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி ஆகியோரை ஆதரித்து பேசுகிறார்.
நாளை செவ்வாய்க்கிழமை, காஞ்சிபுரம் தொகுதி வேட்பாளர் க.செல்வம், ஸ்ரீபெரும்புதூர் தொகுதி வேட்பாளர் டி.ஆர்.பாலுவை ஆதரித்து முதல்வர் பிரச்சாரம் செய்கிறார். 17ம் தேதி புதன்கிழமை, தென்சென்னை தொகுதி வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன், மத்திய சென்னை தொகுதி வேட்பாளர் தயாநிதி மாறன் ஆகியோரை ஆதரித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.. இறுதியில், சென்னையில் முதல்வர் ஸ்டாலின் பிரச்சாரத்தை நிறைவு செய்கிறார்.
எடப்பாடி பழனிசாமி: இதுபோலவே, அதிமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இன்றைய தினம் மத்திய சென்னையில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் பார்த்தசாரதி, தென்சென்னையில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன் ஆகியோரை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.
ஒரே நேரத்தில் முதல்வர் ஸ்டாலினும், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் பிரச்சாரத்தில் ஈடுபடுவதால் சென்னையில் தேர்தல் களம் அனல் பறக்க தொடங்கியுள்ளது.












Click it and Unblock the Notifications