மோடியுடன் சந்திப்பு ஒரு பக்கம்.. 9 மாநில முதல்வர்களை அணி திரட்ட கடிதம் மறுபக்கம்.. ஸ்டாலின் அதிரடி
சென்னை: "மோடி அரசின் 'இந்திய துறைமுக மசோதா 2021'ஐ எதிர்ப்போம்" என்று, கடலோர மாநிலங்களைச் சேர்ந்த 9 மாநில முதலமைச்சர்களுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
குஜராத், மகாராஷ்டிரா, கோவா, கர்நாடகா, கேரளா, ஆந்திர பிரதேசம், ஒடிசா, மேற்கு வங்கம், புதுச்சேரி ஆகிய 9 கடலோர மாநிலங்களின் முதலமைச்சர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

புதிய மசோதா
மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் இயங்கும் சிறு துறைமுகங்களை முறைப்படுத்துவதற்கு ஒன்றிய அரசு கொண்டுவரவுள்ள புதிய சட்ட முன்வடிவு குறித்து உங்கள் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன். சிறு துறைமுகங்களை முறைப்படுத்துவதற்கு ஒன்றிய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிகள் அமைச்சகம் 'இந்திய துறைமுக மசோதா 2021'-ஐ உருவாக்கியுள்ளது. இது தொடர்பாக ஆலோசிக்க ஜூன் 24ம் தேதி மாநில முதலமைச்சர்களின் கூட்டத்திற்கு கடல்சார் மாநில மேம்பாட்டு கவுன்சில் (MSDC) அழைப்பு விடுத்துள்ளது.

அதிகாரங்கள் மாறும்
ஏற்கெனவே உள்ள இந்திய துறைமுகங்கள் சட்டம் 1908-ன்படி, திட்டமிடல், மேம்பாடு, ஒழுங்குபடுத்துதல், சிறு துறைமுகங்கள் உள்ளிட்ட விவகாரங்கள் மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன. புதிய மசோதா இதை மாற்றுவதாக உள்ளது. இந்த அதிகாரங்களை எம்.எஸ்.டி.சி-க்கு மாற்றுவதாக அமைந்துள்ளது.

மாநில அரசின் அதிகாரம்
எம்.எஸ்.டி.சி இதுவரை ஆலோசனை வழங்கும் அமைப்பாக மட்டுமே உள்ளது. மேலும், மாநில அரசின் அதிகாரங்கள் பல மத்திய அரசுக்குச் செல்லும் வகையில் புதிய மசோதா அமைந்துள்ளது. ஏற்கெனவே உள்ள சட்டம், மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சிறு துறைமுகங்களின் வளர்ச்சிக்கு வழிவகுக்கிறது என்பதை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்கள். ஆனால், புதிய மசோதா சிறு துறைமுகங்களை நிர்வகித்தலில், நீண்டகால பாதகமான விளைவுகளை உருவாக்கும்.

மாநில தன்னாட்சி
இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டால் மாநில அரசு இதில் எந்தவொரு முக்கியப் பங்கையும் ஆற்ற முடியாது. நாங்கள் ஏற்கெனவே இந்த விவகாரத்தை மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிகள் அமைச்சகத்திடம் கொண்டுசென்றுள்ளோம். மாநிலத் தன்னாட்சியை இதன் மூலம் குறைப்பதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளோம்.

எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்
எனவே, இப்புதிய மசோதாவுக்கு அனைத்துக் கடலோர மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். மாநில அரசின் அதிகாரங்களை நீர்த்துப்போகச் செய்வதைத் தடுக்க கூட்டு நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். இப்புதிய மசோதாவுக்கு எம்.எஸ்.டி.சி கூட்டத்தில் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மோடிக்கு எதிராக அணி திரட்டும் ஸ்டாலின்
முதல்வராக பதவியேற்ற பிறகு முதல் முறையாக கடந்த வாரம் பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் சென்று சந்தித்தார் ஸ்டாலின். அப்போது தமிழக நலன் சார்ந்த பிரச்சினைகள் தொடர்பாக கோரிக்கை மனு அளித்தார். மோடி மற்றும் ஸ்டாலின் ஆகியோர், பரஸ்பரம் தேர்தலுக்கு முன்பு எடுத்த எதிர் நிலைப்பாடு அரசியலை மாற்றி நட்பு பாராட்ட தொடங்கியுள்ளார்கள் என்று சில அரசியல் பார்வையாளர்கள் கூறினர். ஆனால், 9 மாநில முதல்வர்களுக்கு கடிதம் எழுதி, மாநில சுயாட்சியை காக்க அணி திரட்டியுள்ளார் ஸ்டாலின் என்பது முக்கியமாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications