நேரடியாக களமிறங்கிய ஸ்டாலின்.. ஆளுநருக்கு எதிராக ஜனாதிபதிக்கு பறந்த கடிதம்.. பரபர புகார்..முழுவிபரம்
சென்னை: தமிழக ஆளுநர் ஆர்என் ரவிக்கும், தமிழக அரசுக்கும் இடையே கடும் மோதல் போக்கு உள்ளது. சட்டசபையில் இருந்து ஆளுநர் ஆர்என் ரவி பாதியில் வெளியேறினார். இந்நிலையில் தான் ஆளுநர் ஆர்என் ரவிக்கு எதிராக திமுகவின் எம்பிக்கள் குழு தலைவர் டிஆர் பாலு தலைமையிலான குழுவினர் இன்று டெல்லியில் ஜனாதிபதி திரெளபதி முர்முவை சந்தித்து அறிவுரை வழங்க கோரினார். மேலும் ஸ்டாலின் எழுதிய கடிதம் வழங்கப்பட்டது. இந்நிலையில் தான் ஜனாதிபதி திரெளபதி முர்முவுக்கு முதல்வர் ஸ்டாலின் எழுதிய கடித்தத்தில் இருக்கும் சாராம்சங்கள் முழுமையாக வெளியாகி உள்ளன. அதன்படி ஆளுநர் ஆர்என் ரவி மீது பரபரப்பான புகார்கள் கூறப்பட்டுள்ளதோடு, அறிவுரை வழங்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்என் ரவிக்கும், தமிழ்நாடு அரசுக்கும் இடையே மோதல் போக்கு உள்ளது. சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு அனுமதி வழங்காமல் ஆளுநர் ஆர்என் ரவி கிடப்பில் போட்டுள்ளதோடு, திராவிடத்துக்கு எதிராக பேசி வருகிறார்.
இதனால் ஆளுநர் ஆர்என் ரவியை திரும்பபெற வேண்டும் என திமுக மற்றும் கூட்டணி கட்சி எம்பிக்கள் ஜனாதிபதி திரெளபதி முர்முவுக்கு கையெழுத்து கடிதம் அனுப்பி உள்ளனர். அதன்மீது இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை.

பாதியில் வெளியேறிய ஆளுநர்
இந்நிலையில் தான் ஆளுநர் ஆர்என் ரவி தமிழ்நாடு சட்டசபையில் பேசினார். அப்போது அரசு அச்சிட்டு வழங்கிய உரையை விட்டுவிட்டு படித்தார். மேலும் உரையில் இல்லாத சில விஷயங்களை சுயமாக சேர்த்து படித்தார். இதையடுத்து முதல்வர் ஸ்டாலின் ‛‛ஆளுநர் ஆர்என் ரவிக்கு வழங்கப்பட்ட அச்சிடப்பட்ட உரையை மட்டும் அவைகுறிப்பில் இடம்பெற செய்ய வேண்டும். அவர் கூறிய பிற விஷயங்களை இடம்பெற செய்யக்கூடாது'' என தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றினார். இதையடுத்து ஆளுநர் ஆர்என் ரவி பாதியில் சட்டசபையில் இருந்து வெளியேறினார்.

ஜனாதிபதியுடன் சந்திப்பு
இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இது தற்போது ஹாட் டாப்பிக்காக உள்ளது. இந்நிலையில் தான் திமுக நாடாளுமன்ற எம்பி குழு தலைவர் டிஆர் பாலு தலைமையில் இன்று ஜனாதிபதி திரெளபதி முர்முவை சந்தித்து சட்டசபையில் நடந்தது பற்றி விளக்கி கூறப்பட்டது. மேலும் ஸ்டாலின் வழங்கிய கடிதம் ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்தக் குழுவில் திமுகவின் எம்.பி.க்கள் என்.ஆர்.இளங்கோ, வில்சன், ஆ.ராசா ஆகியோரும் இருந்தனர்.

கடிதத்தில் இருப்பது என்ன?
இந்நிலையில் தான் ஸ்டாலின் ஜனாதிபதிக்கு எழுதிய கடித்ததில் இருக்கும் அம்சங்கள் பற்றிய விபரம் வெளியாகி உள்ளது. அந்த கடித்ததில் அவர் சட்டசபையில் நடந்த விஷயங்களை தெளிவாக குறிப்பிட்டுள்ளதோடு, ஆளுநர் ஆர்என் ரவிக்கு அறிவுரை வழங்க கோரிக்கை வைத்துள்ளார். ஆளுநர் ஆர்என் ரவியின் தமிழ்நாடு அரசுடன் ஒரு கருத்தியல் அரசியல் மோதல் போக்கை கடைப்பிடிக்கிறார். தமிழ் மக்களின் பண்பாடு, இலக்கியம், சமநோக்கான அரசியலில் எதிர்மனபாங்கு கொண்டவராக உள்ளார். ஆளுநர் ஆர்என் ரவி சட்டசபை மாண்பை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டுள்ளார். சட்டசபையின் மரபு, அரசியல் சட்ட விதிகளை மீறி அவர் ஒப்புதல் வழங்கிய உரையின் பல பகுதிகளை வாசிக்காமல் தவிர்த்துள்ளார். அரசின் முக்கிய மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் ஆளுநர் ஆர்என் ரவி முட்டுக்கட்டை போடுகிறார். மக்களாட்சி தத்துவம் செம்மடைய ஆளுநர் ஆர்என் ரவிக்கு அறிவுரை வழங்க கேட்டு கொள்கிறேன் என்பன உள்பட பல்வேறு அம்சங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்த கடித்ததில் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளதாவது:

விட்டுவிட்டு படித்த ஆளுநர்
தமிழ்நாடு சட்டசபையில் ஜனவரி 9 அன்று ஆளுநர் உரையுடன் பேரவை கூட்டத் தொடர் துவங்கியது. இந்த உரைக்கான வரைவினை தமிழ்நாடு அரசு ஆளுநருக்கு முன்னதாகவே அனுப்பி அதற்கு அவரது ஒப்புதல்ஜனவரி 7 ல் பெறப்பட்டது. உரையினை இதனடிப்படையில், இந்த அச்சிட்டு சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அன்றைய தினம் சட்டசபையில் ஆளுநர் தனது உரையில் ஏற்கெனவே ஒப்புதல் அளிக்கப்பட்ட வரைவு உரையிலிருந்த பல பகுதிகளைப் படிக்காமலும் உரையில் குறிப்பிடப்படாத பல புதிய கருத்துகளை இணைத்தும் உரையாற்றினார்.

உயர்வான பதவி
இது தமிழக சட்டசபை வரலாற்றின் மரபுகளை மீறிய செயல் என்பதாலும், தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியாவே போற்றும் தலைவர்களின் பெயர்களை படிக்காமல் தவிர்த்ததை அவைக் குறிப்பில் பதிவு செய்யும் விதமாக முதல்-அமைச்சர் அவர்கள் ஒரு திருத்தத் தீர்மானத்தை கொண்டு வந்து, அது சட்டசபை உறுப்பினர்களின் ஒப்புதலோடு நிறைவேற்றப்பட்டது. ஒரு மாநிலத்தில் ஆளுநர் பதவி என்பது மிகவும் உயர்வான ஒன்று, அதனை அனைவரும் உயர்ந்த இடத்தில் வைத்திருக்கிறோம் என்று நாம் முதல்-அமைச்சர், ஜனாதிபதிக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்திருக்கிறார்.

கருத்தியல் அரசியல் மோதல்
அதே சமயம் ஆளுநர் என்பவர் அரசியல் கருத்துகளுக்கு. வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டவராக இருக்க வேண்டும். ஆனால், ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் தமிழ்நாடு அரசுடன் ஒரு கருத்தியல் அரசியல் மோதல் போக்கைக் கடைபிடித்து வருகிறார். இது நமது அரசியலமைப்பு சட்டத்திற்கு முழுவதும் மாறானதாக உள்ளது. தமிழ் மக்கள், எங்களின் தனிப்பட்ட பண்பாடு, இலக்கியம், சமநோக்கான அரசியல் போன்ற அனைத்தின் மீதும் ஒரு கடும் எதிர் மனப்பாங்கினைக் கொண்டவராக அவர் தம்மை வெளிப்படுத்திக்கொண்டே இருக்கிறார்.

திராவிட கொள்கைக்கு எதிர்ப்பு
இம்மாநிலத்தில் பின்பற்றப்படும் திராவிட கொள்கை. சமத்துவம். சமூகநீதி, பகுத்தறிவு மற்றும் சுயமரியாதை ஆகியவை மக்களின் மனங்களில் இருப்பது அவருக்கு ஏற்கவியலாத ஒன்றாக உள்ளது. மேலும், பொதுமேடைகளில் அவர் தமிழ்ப் பண்பாடு, இலக்கியம் மற்றும் சமூக அமைப்பிற்கு எதிரான கருத்துக்களையும் தெரிவித்து வருகிறார். அதன் ஒரு பகுதியாகவே சட்டசபையின் தொடக்க நாளில் அவர் நடந்து கொண்ட விதமும், சட்டமன்ற மாண்பினை அவமதிக்கும் வகையில் அவர் நடந்து கொண்டதும் காணப்படுகிறது. கவர்னர் உரை என்று குறிப்பிடப்பட்டிருந்தாலும், அரசியல் சட்டப் பிரிவு 163 (1) -ன்படி கவர்னர் என்பவர் அமைச்சரவையின் வழிகாட்டுதல் மற்றும் நடக்கவேண்டுமென்றும் அக்கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அறிவுரையின்படி தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் கவர்னர் உரை அந்தந்த மாநிலத்தின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகள் சட்டசபையில் தயாரித்து கொடுத்ததாகத்தான் எப்போதும் இருந்து வருகிறது.

சேர்க்கவோ-நீக்கவோ கூடாது
ஆளுநர் தன்னுடைய தனிப்பட்ட அரசியல் கருத்துகளுக்கேற்ப அந்த உரையிலுள்ள கருத்துக்களை மாற்றவோ, புதிய கருத்துக்களை சேர்க்கவோ கூடாது. ஆனால், அன்றைய தினம் (ஜனவரி 9) ஆளுநர் அரசியல் சட்ட விதிகளையும், மரபுகளையும் மீறி அரசால் தயாரிக்கப்பட்டு அவரால் ஒப்புதல் அளிக்கப்பட்ட உரையின் பல பகுதிகளை வாசிக்காமல் தவிர்த்தார். கவர்னர் அவர்கள் குறிப்பிட மறுத்த வார்த்தைகள்: "சமூகநீதி", "சுயமரியாதை" "அனைவருக்குமான வளர்ச்சி", "சமத்துவம்", "பெண்ணுரிமை", "மதநல்லிணக்கம்", "மனிதநேயம்", "திராவிடமாடல் ஆட்சி" ஆகியவை ஆகும். அதுமட்டுமன்றி அனைவரும் அறிந்த தலைவர்களின் பெயர்களை, குறிப்பாக தந்தை பெரியார், டாக்டர் அம்பேத்கார், பெருந்தலைவர் காமராஜர், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோர்களின் பெயர்களைக் குறிப்பிடுவதையும் அவர் தவிர்த்தார். இப்படி செய்ததன் மூலம் தமிழ்நாட்டு மக்களின் மனங்களுக்கு நெருக்கமான கொள்கைகளை, சமூக அமைப்பினை அவர் கேள்விக்குறியாக்கி இருக்கிறார் என்று நாங்கள் கருதுகிறோம்.

மாண்பை காக்க..
மாநிலத்தின் மிக முக்கிய, அரசியமைப்பின் உயரிய பொறுப்பிலுள்ள ஒருவர் இவ்வாறு நடந்துகொள்வதும், மதம் மற்றும் மொழி சார்ந்த சார்ப்பு நிலைகள் எடுப்பதும், மக்களின் எண்ணங்களுக்கு மதிப்பளிக்காமல் நடத்துகொள்வதும் மாநில சமூக கட்டமைப்புகளை சிதைப்பதும் மிகவும் வேதனையளிக்கும் ஒன்றாகும். இதன் காரணமாகத்தான் முதல்-அமைச்சர் அவர்கள் முறையற்ற வகையில் ஆளுநரால் வாசிக்கப்பட்ட அந்த உரையை, ஏற்கெனவே அவரால் ஒப்புதல் அளித்து சட்டமன்றத்திற்கு வழங்கப்பட்டதை மாற்றாமல் ஏற்கப்பட கொண்டுவரவேண்டிய நிலை ஏற்பட்டது. இந்தச் சூழ்நிலையில், ஜனாதிபதி அவர்கள் மக்களாட்சித் தத்துவத்தை உயர்த்திப் பிடிக்கவும், அரசியலமைப்புச் சட்டத்தின் மாண்பினைக் காக்கவும் வேண்டுமென்று மாண்புமிகு முதல்-அமைச்சர் கேட்டுகொண்டுள்ளார்.

மசோதாக்களுக்கு முட்டுக்கட்டை
மேலும் தமிழ்நாடு கவர்னர் அவர்கள் முக்கியமான அரசு மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் அவைகளை தேர்ந்தெடுக்கப்பட்ட அரசால் முட்டுக்கட்டைபோட்டு சட்டமன்றத்தில் வருவதையும், விவாதித்து மக்களால் நிறைவேற்றப்பட்ட மசோதக்களை தேவையற்ற சிறு காரணங்களைக் காட்டி சட்டத்தை நிறைவேற்றாமல் தடுப்பது அரசின் செயல்பாட்டு வேகத்தை குறைப்பதோடு மட்டுமல்லாமல், நீதி மன்றத்தின் பணிகளையும் தன் கையில் எடுத்துக்கொண்டது போலாகின்றது. தமிழ்நாடு என்பது எல்லா மாநிலத்தவரையும், எல்லா நாட்டினைரையும் அன்போடு வரவேற்று உபசரிக்கும் பண்புக்குப் பெயர் பெற்றது. இங்கு பல்வேறு மத மொழி மற்றும் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் ஒற்றுமையோடு பன்னெடுங்காலமாக வாழ்ந்து வருகின்றனர். ஆனால், இந்தக் கொள்கைகளுக்கு எதிரான தன்னுடைய கருத்துக்களைப் பொதுவெளியில் பேசி மாநிலத்தில் அமைதியின்மை ஏற்படக்கூடிய ஒரு சூழலை ஆளுநர் ஏற்படுத்தி வருகிறார்.

அறிவுரை வழங்க...
எனவே, ஜனாதிபதி அவர்கள் இதில் தலையிட்டு, தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி அவர்கள் இந்திய அரசியல் சாசனத்தில் குறிப்பிட்டுள்ளபடி அமைச்சரவையின் வழிகாட்டுதல் மற்றும் அறிவுரைகளின்படி நடப்பதை உறுதிசெய்யவும், அதன் மூலம் மக்களுக்கு மாநில அரசு சிறந்ததொரு நிர்வாகத்தை வழங்க வழிவகை செய்யவும், மக்களாட்சித் தத்துவம் செம்மையடையவும் அவருக்கு அறிவுரை வழங்கக் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், இரண்டாவதாக, கவர்னர் என்பவர் அரசியல் மற்றும் கருத்தியல் ரீதியான சார்புநிலையை பொதுவெளியில் எடுத்துக்கொண்டு, பல்லாண்டுகாலமாக பின்பற்றப்பட்டுவரும் நமது மரபுகளை மீறாமல் தமிழ்நாடு மற்றும் அதன் மக்களுக்கேற்ற வகையில் பணியாற்றுமாறு அறிவுறுத்தவும் ஜனாதிபதியை, முதல்-அமைச்சர் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார். இறுதியாக ஜனாதிபதிக்கு எழுதப்படும் இந்தக் கடிதமானது மாநிலத்தில் ஒரு இணக்கமான, சுமூகமான உறவு. மக்களாட்சியின் முக்கியமான அமைப்புகளிடையே நிலவ வேண்டுமென்பதற்காவும், அவர்கள் தங்கள் கடமையினை சரிவர செய்யவேண்டும் என்பதற்காகவும் தான் எழுதப்படுகிறது எனவும் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி அவர்களின் முயற்சி இதில் நல்லதொரு பலனைத் தருமென தாம் உறுதியாக நம்புவதாகவும் முதல்-அமைச்சர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications