காங்., சிறுபான்மை பிரிவு ட்விட்டர் பக்கம் திடீர் முடக்கம்.. அரபு மொழியில் வாசகம்..ஷாக்.. என்னாச்சு?
காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் பிரிவினருக்கான ட்விட்டர் பக்கம் முடக்கம் செய்யப்பட்டு அரபு மொழியிலான எழுத்துக்கள் இடம்பெற்றுள்ளன.
சென்னை: காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு சிறுபான்மையினர் பிரிவினரின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கம் திடீரென முடக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்த ட்விட்டர் பக்கத்தில் அரசு மொழியில் பயோ மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில் முகப்பு பக்கத்தின் போட்டோவும் மாற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் சமூக விரோத செயல்கள் நடக்கும் முன்பு ட்விட்டர் பக்கத்தை முடக்கியவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது.
தற்போதைய சூழலில் அனைத்து கட்சியினரும் ட்விட்டர், பேஸ்புக் உள்ளிட்ட பல்வேறு வலைதளங்களில் கணக்குகள் தொடங்கி மக்களிடம் தொடர்பில் உள்ளனர். மேலும் தேர்தல் சமயங்கில் இந்த சமூக வலைதள பக்கங்கள் வழியாக அந்த கட்சியினர் பிரசாரம் மேற்கொண்டும் வருகின்றனர்.
இளம் தலைமுறையினர்கள் சமூக வலைதளங்களை அதிகமாக பயன்படுத்தி வருவதால் கட்சிக்கு மட்டுமின்றி கட்சியின் உட்பிரிவினரும் தனித்தனி வலைதள பக்கங்களை பயன்படுத்தி வருகின்றனர்.

காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு ட்விட்டர்
அந்த வகையில் காங்கிரஸ் கட்சியும் பல்வேறு சமூக வலைதள பக்கங்களை கொண்டுள்ளனர். காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு சிறுபான்மையினர் பிரிவினரும் ட்விட்டர் மூலம் மக்களுடன் தொடர்பில் உள்ளனர். காங்கிரஸ் கட்சியின் செயல்பாடு, முக்கிய தலைவர்களின் பேச்சுகள், சிறுபான்மை மக்களுக்காக காங்கிரஸ் கட்சி செய்த திட்டங்கள், செயல்பாடு குறித்த விபரங்கள் இந்த ட்விட்டர் பக்கத்தில் இடம்பெற்று வருகின்றன.

அரபு மொழியில் பயோ
இந்நிலையில் தான் காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு சிறுபான்மையினர் பிரிவினருக்கான அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கம் திடீரென்று முடக்கம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த பக்கத்தில் wow store எனும் முகப்பு போட்டோ பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும் அரபு மொழியில் பயாே விபரங்கள் எழுதப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

என்ன எழுதியிருந்தது
அதில், ‛‛ நவீன செல்போன் மற்றும் சோனி சாதனங்களை வழங்குவதில் நிபுணத்துவம் பெற்ற ஸ்டோர் இது. நீங்கள் வாட்ஸ்அப்பில் தொடர்பு கொள்ளலாம்'' எனும் வகையில் பயோவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை பார்த்த காங்கிரஸ் கட்சியின் தற்போது அதிர்ச்சியடைந்தனர். இருப்பினும் ட்விட்டர் பக்கத்தை யார் முடக்கினர்? எதற்காக முடக்கினர்? என்பது தெரியவில்லை.

கமிஷனரிடம் புகார்
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மையினர் மாநில தலைவர் அஸ்லம் பாஷா சார்பில் சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஆன்லைன் புகார் செய்யப்பட்டுள்ளது. அதில், ‛‛காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு சிறுபான்மையினர் பிரிவினருக்கான ட்விட்டர் பக்கம் முடக்கம் செய்யப்பட்டுள்ளது. சமூக விரோத மற்றும் தவறுகள் நடக்கும் முன்பு இந்த பக்கத்தை மீட்டு கொடுக்க வேண்டும். மேலும் ஹேக் செய்த நபர்கள் பற்றி விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications